என் மலர்
விளையாட்டு
- இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 236 ரன்களை சேர்த்தது.
- இங்கிலாந்து எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
நாட்டிங்காம்:
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டாம் லாதம், வில் யங் ஆகியோர் களமிறங்கினர்.
அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில் யங் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டாம் லாதம் 26 ரன்னிலும், டேவன் கான்வே 46 ரன்னிலும், ஹென்றி நிகோலஸ் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய டேரில் மிட்செல், டாம் பிளெண்டல் ஆகியோர் பொறுப்புடன் ஆடினர். மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்தனர்.
முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் 81 ரன்னும், பிளெண்டல் 67 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து அசத்தினார். நிதானமாக ஆடிய பிளெண்டலும் சதமடித்து அசத்தினார். பிளெண்டல் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிகை 5 விக்கெட் இழப்புக்கு 405 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், லீச் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இறுதிச் சுற்றில் பிரக்ஞானந்தா 49-வது நகர்த்தலில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன் உள்ளிட்ட செஸ் ஜாம்பவான்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா, இரண்டாவது இடம் பிடித்தார்.
நார்வே:
நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம்வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
மொத்தம் 9 சுற்றுக்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் டிரா என 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
பிரக்ஞானந்தா நேற்று நடந்த கடைசி சுற்றில் இந்தியாவின் பிரனீத்தை எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா, 49-வது நகர்த்தலில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன் உள்ளிட்ட செஸ் ஜாம்பவான்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா, இரண்டாவது இடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்ய டெல்லியில் தகுதிச்சுற்று போட்டி நடக்கிறது
- காமன்வெல்த் போட்டிக்கு இந்த முறை மேரி கோம் செல்ல முடியாது.
புதுடெல்லி:
பயிற்சி போட்டியில் இருந்து விலகியதன் மூலம் காமன்வெல்த் போட்டிக்கு இந்த முறை மேரி கோம் செல்ல முடியாது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அடுத்த மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று போட்டி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் மற்றும் பல்வேறு நட்சத்திர வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் மேரி கோம், அரியானாவின் நிதுவை சந்தித்தார். முதல் ரவுண்டில் 39 வயதான மேரிகோம் எதிராளிக்கு குத்துவிட முயற்சித்த போது, நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு இடது கால்முட்டியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டியை நடுவர் நிறுத்தினார். உடனடியாக மேரிகோம் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மேரி கோம் போட்டியில் இருந்து பாதியில் விலகியதால், அவரை எதிர்த்து மோதிய நிது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். எனவே, இந்த முறை காமன்வெல்த் போட்டிக்கு மேரி கோம் செல்ல முடியாது.
- முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரிஷப்பண்ட் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
கட்டாக்:
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டித் தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-தென் ஆப்ரிக்கா மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது.
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரிஷப்பண்ட் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நடந்த போட்டியில் 211 ரன் குவித்ததும் இந்திய அணி தோல்வியை தழுவியது பரிதாபமே. அந்த அளவுக்கு பந்துவீச்சும், பீல்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் அதிரடியை இந்திய பவுலர்களால் சமாளிக்க இயலவில்லை.
இந்திய அணி அதில் இருந்து மீண்டு நாளைய ஆட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடி உள்ளது. வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பந்து வீச்சில் மாற்றம் இருக்கலாம்.
முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் 2-வது போட்டியிலும் நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். அந்த அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று 2-0 என்ற முன்னிலையை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
டேவிட் மில்லர், வான்டர் டூசன் கடந்த போட்டியில் அதிரடியை வெளிப்படுத்தினார்கள். இது தவிர கேப்டன் பவுமா, குயின்டன் டிகாக், பிரிட்டோரியஸ், ரபடா, நோர்க்கியா போன்ற வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 17-வது போட்டியாகும். இதுவரை நடந்த 16 போட்டியில் இந்தியா 9-ல், தென் ஆப்பிரிக்கா 7-ல் வெற்றி பெற்றுள்ளன.
நாளைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் மின்னணு முறையில் நாளை தொடங்குகிறது.
- ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தில் இருந்து அமேசான் நிறுவனம் திடீரென விலகி உள்ளது.
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதிக ரசிகர்கள் இந்தப் போட்டியை பார்ப்பதால் ஒளிபரப்பு உரிமத்தைபெற எப்போதுமே கடும் போட்டி நிலவும்.
2008-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சோனி நெட்வொர்க் நிறுவனம் ரூ.8,200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமத்தை பெற்று இருந்தது. 2018-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை ஸ்டார் நிறுவனம் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்பியது. அந்த நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.16,347 கோடிக்கு வாங்கி இருந்தது.
2023-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பு மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமத்துக்கான டெண்டர் பணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே தொடங்கி இருந்தது.
ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் மின்னணு முறையில் நாளை தொடங்குகிறது. இந்த முறை ஐ.பி.எல். போட்டிக்கான உரிமம் இந்திய துணைக்கண்டம் ஒளிபரப்பு என 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தில் இருந்து அமேசான் நிறுவனம் திடீரென விலகி உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18, ஜே.வி. தற்போதைய ஒளிபரப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி (ஸ்டார்), ஜீ குழுமம், சோனி நிறுவனம் ஆகியவை கடும் போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன.
2 அல்லது 3 ரவுண்டகள் ஏலம் கேட்க வாய்ப்பு உள்ளது. அதிக தொகையை கேட்கும் நிறுவனத்துக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கப்படும்.
ஐ.பி.எல். ஒளிபரப்பு மற்றும் இணைய வழி பயன்பாடுக்கான டிஜிட்டல் உரிமம் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 275 ரன்கள் எடுத்திருந்தது.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 77 ரன்கள் அடித்தார்.
முல்டன்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அந்நாட்டு அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முல்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹாக் 72 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசம் 77 ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகில் ஹுசேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 32.2 ஓவர் முடிவில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஷமர் ப்ரூக்ஸ் 42 ரன்கள் அடித்தார். கைல் மேயர்ஸ் 33 ரன்களும், கேப்டன் நிகோலஸ் பூரன் 25 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் 4 விக்கெட்களும், வாசிம் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து பாகிஸ்தான் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- தற்போது அணியில் உள்ள ஜுனியர் வீரர்கள், 2028-ம் ஆண்டுக்குள் 300 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருப்பார்கள்.
- எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் பக்குவத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஆண்கள் ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. மகளிர் அணி 4-வது இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் 2028-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி உச்சத்தை எட்டும் என்று, இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குநரும், ஒடிசா ஆக்கி சம்மேளன இயக்குநருமான டேவிட் ஜான் தெரிவித்துள்ளார்.
தற்போது அணியில் உள்ள ஜுனியர் ஆக்கி வீர்ர்கள், 2028-ம் ஆண்டுக்குள் 300 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருப்பார்கள் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு வீரருக்கும் அதிக அனுபவம் கிடைக்கும் என்றும் டேவிட் ஜான் கூறினார். இதனால் எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் பக்குவத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஹாலந்து ஆக்கி அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன என்றும் எனினும் தங்கப் பதக்கம் வெல்லும் அளவிற்கு இந்திய ஆக்கி அணி சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
- இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க் வீரருடனான போட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
- இந்தியாவின் பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனையிடம் தொற்று தொடரில் இருந்து வெளியேறினார்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் ரஸ்முஸ் ஜெம்கியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகின் 4ம் நிலை வீரரான சௌ தியென் சென்-னை லக்சயா சென் எதிர்கொண்டார். இந்த போட்டியில் லக்சயா சென் 16-21, 21- 12, 14-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானன் ஆகியோர் மோதினர். இதில் பி.வி.சிந்து 12- 21, 10-21 என்ற நேற் செட்களில் தோல்வி அடைந்தார்.
- 2-வது இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங்குக்கு உதவியது என இந்திய அணியின் கேப்டன் ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
- 5 ஆட்டம் கொண்ட இத்தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
புதுடெல்லி:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதலாவது 20 ஓவர் போட்டி நேற்று இரவு டெல்லியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4. விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது.
இஷான் கிஷன் 76 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்யா 31 ரன்னும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டிகாக் 22 ரன்னிலும், பவுமா 10 ரன்னிலும், பிரிட்டோரியஸ் 29 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அந்த அணி 81 ரன்னில் 3 விக்கெட்டை (8.4 ஓவர்) இழந்தது.
அதன்பின் வான்டெர் துஸ்சென்- டேவிட் மில்லர் ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா 211 ரன் குவித்தும் பந்துவீச்சு எடுபடாததால் தோல்வியை சந்தித்தது. தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-
நாங்கள் போதுமான ரன்களை எடுத்தோம். ஆனால் பந்துவீச்சின் போது எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த தவறிவிட்டோம் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் எதிரணிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென் நன்றாக பேட்டிங் செய்தனர்.
நாங்கள் பேட்டிங் செய்தபோது மெதுவான பந்துகள் நன்றாக செயல்பட்டன. ஆனால் 2-வது இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங்குக்கு மேலும் உதவியது. பெரும்பாலும் நாங்கள் எங்கள் திட்டங்களை டேவிட் மில்லருக்கு செயல்படுத்தினோம். ஆனால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக, சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் ரன்களை குவித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அடுத்த முறை இதேபோன்ற சூழ்நிலையில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
5 ஆட்டம் கொண்ட இத்தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி நாளை மறுநாள் கட்டாக்கில் நடக்கிறது.
- 2022-ம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ஆண், பெண் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ. 19 கோடி வழங்கப்படுகிறது.
கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த பரிசுத்தொகை ரூ. 392 கோடி ஆகும்.
ஆண், பெண் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ. 19 கோடி வழங்கப்படுகிறது. ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோற்பவர்கள் ரூ.9.5 கோடி பெறுவார்கள்.
- நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் லேசான கொரோனா தொற்று காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜோரூட் தேர்வு செய்யப்பட்டார்.
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் லேசான கொரோனா தொற்று காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வில்லியம்சனுக்கு பதிலாக ஹமிஷ் ரூதர்ஃபோர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். இவர் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி.என்.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் எவ்வித போட்டிகளும் நடத்தப்படவில்லை.
- முதல் போட்டி 23-ந் தேதி நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை:
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் (டி.என்.பி.எல்.) போட்டிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 6-வது சீசன் போட்டிகள் வருகிற 23-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி வரை நடக்கிறது.
போட்டிகள் அனைத்தும் நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் ஆகிய மாநகரங்களில் நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி, டி.என்.பி.எல். சேர்மன் சிவகுமார், கிரிக்கெட் சங்க மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணசுவாமி ஆகியோர் கோவையில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
முதல் போட்டி 23-ந் தேதி நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டி.என்.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் எவ்வித போட்டிகளும் நடத்தப்படவில்லை.
கோவையில் டி.என்.பி.எல். போட்டிகளை நடத்த கடந்த 2018-ம் ஆண்டு முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கோவையில் போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது முதல்முறையாக கோவையில் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் லீக் போட்டிகள் நடக்கின்றன. இதுதவிர 2 தகுதி சுற்று போட்டிகள் நடக்கிறது.
இந்த தொடரின் இறுதிப் போட்டி கோவையில் அடுத்த மாதம் 31-ந் தேதி நடக்கிறது.
கோவையில் அடுத்த மாதம் 10-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன.
12-ந் தேதி நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 16-ந் தேதி நடக்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணியும் மோதுகின்றன.
கோவையில் நடைபெறும் போட்டியை 5 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. போட்டியை காண டிக்கெட் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டி.என்.பி.எல். போட்டியில் விளையாடிய வீரர்களில் 14 பேர் ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொண்டு விளையாடி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது சி.இ.ஓ. பிரசன்னா கண்ணன், இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன், லைக்கா கோவை அணியின் நிர்வாகி ஹரி மனோகர், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ரிசிகேஸ் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகி மான்பாப்னா, கிரிக்கெட் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம் கவுதமன் ஆகியோர் உடனிருந்தனர்.






