search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பந்துவீச்சு திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை- ரிஷப்பண்ட்
    X

    ரிஷப்பண்ட்

    பந்துவீச்சு திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை- ரிஷப்பண்ட்

    • 2-வது இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங்குக்கு உதவியது என இந்திய அணியின் கேப்டன் ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
    • 5 ஆட்டம் கொண்ட இத்தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதலாவது 20 ஓவர் போட்டி நேற்று இரவு டெல்லியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4. விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது.

    இஷான் கிஷன் 76 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்யா 31 ரன்னும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டிகாக் 22 ரன்னிலும், பவுமா 10 ரன்னிலும், பிரிட்டோரியஸ் 29 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அந்த அணி 81 ரன்னில் 3 விக்கெட்டை (8.4 ஓவர்) இழந்தது.

    அதன்பின் வான்டெர் துஸ்சென்- டேவிட் மில்லர் ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்தியா 211 ரன் குவித்தும் பந்துவீச்சு எடுபடாததால் தோல்வியை சந்தித்தது. தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-

    நாங்கள் போதுமான ரன்களை எடுத்தோம். ஆனால் பந்துவீச்சின் போது எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த தவறிவிட்டோம் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் எதிரணிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென் நன்றாக பேட்டிங் செய்தனர்.

    நாங்கள் பேட்டிங் செய்தபோது மெதுவான பந்துகள் நன்றாக செயல்பட்டன. ஆனால் 2-வது இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங்குக்கு மேலும் உதவியது. பெரும்பாலும் நாங்கள் எங்கள் திட்டங்களை டேவிட் மில்லருக்கு செயல்படுத்தினோம். ஆனால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக, சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் ரன்களை குவித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அடுத்த முறை இதேபோன்ற சூழ்நிலையில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    5 ஆட்டம் கொண்ட இத்தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி நாளை மறுநாள் கட்டாக்கில் நடக்கிறது.

    Next Story
    ×