என் மலர்
விளையாட்டு
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வலுவான ஆதரவால் இந்த போட்டி சென்னைக்கு வந்துள்ளது.
- போட்டிக்கான டிக்கெட்டுகளை chennaiopenwta.in. என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பெறலாம்.
சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. முந்தைய 2 நாட்கள் (10,11-ந் தேதி) தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது.
சர்வதேச பெண்கள் போட்டி சென்னையில் அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.26½ லட்சமும், இரட்டையர் பிரிவில் மகுடம் சூடும் ஜோடிக்கு ரூ.9½ லட்சமும் பரிசாக வழங்கப்படும். போட்டியை சோனி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்த டென்னிஸ் திருவிழாவில் ஒற்றையர் பிரிவில், சமீபத்தில் சின்சினாட்டி போட்டியில் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 17-வது இடம் வகிப்பவருமான கரோலின் கார்சியா (பிரான்ஸ்), 29-ம் நிலை வீராங்கனை அலிசன் ரிஸ்கே அமிர்தராஜ் (அமெரிக்கா), 32-வது இடத்தில் இருக்கும் எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), வர்வரா கிராசெவா (ரஷியா), மேக்டா லினெட் (போலந்து), ரெபெக்கா பீட்டர்சன் (சுவீடன்), டாட்ஜனா மரியா (ஜெர்மனி) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.
இதில் அலிசன் ரிஸ்கே, தமிழக முன்னாள் வீரர் விஜய் அமிர்தராஜின் சகோதரர் ஆனந்த் அமிர்தராஜின் மருமகள் ஆவார். இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் களம் இறங்குகின்றன.
போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரரும், தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவருமான விஜய் அமிர்தராஜ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு சர்வதேச டென்னிஸ் போட்டி திரும்பி இருக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வலுவான ஆதரவால் இந்த போட்டி சென்னைக்கு வந்துள்ளது. விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டி சென்னை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டி சென்னையின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றுவதாக இருக்கும்.
அத்துடன் இளம் வீராங்கனைகளை டென்னிஸ் பக்கம் வெகுவாக ஈர்க்கும் என்று நம்புகிறேன். ஒற்றையர் பிரிவில், 2014-ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் இறுதி சுற்றுவரை முன்னேறியவரான கனடாவின் யூஜெனி புசார்ட், குஜராத்தை சேர்ந்த இந்தியாவின் 'நம்பர் ஒன்' வீராங்கனை அங்கிதா ரெய்னா ஆகியோருக்கு தகுதி சுற்றில் விளையாடாமல் நேரடியாக போட்டியில் கலந்து கொள்ள வகை செய்யும் 'வைல்டு கார்டு' சலுகை வழங்கப்படுகிறது.
எஞ்சிய இரு 'வைல்டு கார்டு' வாய்ப்பு டாப்-20 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இதே போல் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷர்மதா பாலு-ரியா பாட்டியா இணைக்கு 'வைல்டு கார்டு' அளிக்கப்படுகிறது. வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி ஆகியவற்றுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சானியா கலந்து கொள்வாரா? இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவிடம் விம்பிள்டன் போட்டியின் போது நீண்ட நேரம் விவாதித்தேன். தற்போது அவர் காயம் காரணமாக அமெரிக்க ஓபன் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.
அவர் இந்த போட்டிக்கு முன்பாக உடல் தகுதியை எட்டி விடுவாரா? என்பது தெரியவில்லை. நாங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம். அவர் விளையாட முடியாவிட்டாலும், இந்த போட்டியின் போது அவரை அழைத்து பாராட்டு விழா நடத்த விரும்புகிறோம். ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் போட்டியை மீண்டும் சென்னைக்கு கொண்டு வர தமிழக அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் போட்டி அட்டவணை நெருக்கமாக இருக்கிறது.
இருப்பினும் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை சென்னைக்கு கொண்டுவர நாங்கள் முயற்சி செய்வோம். இவ்வாறு விஜய் அமிர்தராஜ் கூறினார். ஸ்டேடியம் புதுப்பிப்பு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், 'முதல்-அமைச்சரின் வழிகாட்டிதலின்படி செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தப்பட்டது. இதே போல் சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியும் எல்லோரும் வியக்கும் வகையில் சிறப்பாக நடத்தப்படும்.
இந்த போட்டியை நடத்த முதல்கட்டமாக ரூ.5 கோடியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் ரூ.3 கோடி செலவில் நவீன மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ரூ.1½ கோடியில் ஸ்டேடியத்தை சீரமைக்கும் பணியும், ரூ.1 கோடியில் 6 ஆடுகளங்களை புதுப்பிக்கும் பணியும் நடக்கிறது. எல்லா பணிகளும் செப்டம்பர் 4-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு ஸ்டேடியம் தயார் நிலையில் இருக்கும்' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு டென்னிஸ் சங்க செயலாளர் பிரேம்குமார் கர்ரா மற்றும் போட்டிக்கான ஸ்பான்சர் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான டிக்கெட்டுகளை chennaiopenwta.in. என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பெறலாம்.
- சென்னையில் நடைபெறும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியிடப்பட்டுள்ளது.
- சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார்.
சென்னை:
சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12-ந்தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 18-ந்தேதி வரை இந்த போட்டி ஒரு வாரம் நடக்கிறது. சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகவும் பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தது.
தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 7 நாட்கள் நடைபெறும் போட்டிகளுக்கான சீசன் டிக்கெட்டுகளுக்கு ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலான நாட்களுக்கு தினசரி டிக்கெட் கட்டணமாக ரூ.100, ரூ.200, ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி மூன்று நாட்களுக்கான டிக்கெட் கட்டணமாக ரூ.200, ரூ.400, ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அவர் விளையாடிய இரண்டு ஷாட்கள் அபாரமானது.
- ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ளன.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 27-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. செப்டம்பர் 11-ந் தேதி வரை துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தேர்வு பெறும் ஒரு அணி என 6 நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 ஆட்டம் இம்மாதம் 28ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு ஆபத்தான இந்திய பேட்ஸ்மேனாக சூரியகுமார் யாதவ் இருப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ரோகித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியில் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் ஒருவர் சூர்யகுமார் யாதவ். அவர் தனித்துவமானவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவரது ஆட்டத்தை பார்த்தேன். அவர் விளையாடிய இரண்டு ஷாட்கள் அபாரமானது. அவர் அடித்த ஒரு ஷாட்டில் பேட்டின் நடுவில் இருந்து ஃபைன் லெக்கை நோக்கி பந்து பறந்து சென்றது அசாதாரணமானது. அந்த ஷாட் அடிப்பது கடினம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது.
- இந்தப் போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.
புதுடெல்லி:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக இந்தியாவின் முன்னணி வீராங்கனை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சானியா மிர்சா கூறுகையில், கனடாவில் இரு வாரங்களுக்கு முன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினேன். அப்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதனால் சில வாரங்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே யு.எஸ். ஓபன் தொடரில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.
சானியா மிர்சா 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். இரட்டையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்றைய போட்டியில் எவன்ஸ் 5 விக்கெட்டுகளையும் 28 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு போராடினார்.
- ப்ராட் எவன்ஸ் முன்னாள் ஜிம்பாப்வே வீரர் கிரைக் எவன்ஸ்-ன் மகன் ஆவார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இளம் வீரர்களுடன் இந்தியா 3 - 0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்த தொடரில் தொடர் நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இதேபோல் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 22 வயதுக்கு முன் வெளிநாட்டில் 2 தொடர் நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் 22 வயதே ஆனாலும் இவ்வளவு திறமைகள் வாய்ந்த சுப்மன் கில்லுக்கு நான் ரசிகன் என்று தெரிவிக்கும் ஜிம்பாப்வே இளம் வீரர் ப்ராட் எவன்ஸ் நேற்றைய போட்டியின் முடிவில் அவருடைய ஜெர்சியை பரிசாக பெற்றதாக கூறியுள்ளார்.
நேற்றைய போட்டியில் எவன்ஸ் 5 விக்கெட்டுகளையும் 28 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு போராடினார்.
கில் குறித்து ப்ராட் எவன்ஸ் கூறியதாவது:-
கில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றினார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் என்பதாலேயே அவருடைய ஜெர்சியை பெற்று இன்று அவருக்கு எதிராக விளையாடியுள்ளேன். அவரை உலகத்தரம் வாய்ந்த வீரர் என முதல் போட்டியிலிருந்தே நீங்கள் சொல்லலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு ரன் எடுக்கும் போது அவர் நினைக்கும் இடத்தில் பந்தை அடித்து எடுக்கிறார். அதுபோன்ற நுணுக்கம் நீண்ட காலம் பயிற்சி எடுத்தால் தான் உங்களுக்கு கிடைக்கும். அவரின் ஆட்டத்தை பார்த்து ஆச்சரியமடைந்த நான் அவருடைய ரசிகனானேன். அவரை ஐபிஎல் தொடரில் விளையாடிய போதும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வென்ற போது டிவியில் பார்த்துள்ளேன். இன்று அவருக்கு எதிராக விளையாடியது சிறப்பானது.
இந்த போட்டி முடிந்த பின் அவருக்கு என்னுடைய ஜெர்சியை கொடுத்தேன். பதிலுக்கு அவர் தன்னுடைய ஜெர்ஸியை கழற்றி கொடுத்தார். அதை நான் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே அவரிடம் கேட்டிருந்தேன். அவரும் எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார்.
இவ்வாறு ஜிம்பாப்வே வீரர் கூறினார்.
முன்னாள் ஜிம்பாப்வே வீரர் கிரைக் எவன்ஸ் மகனான இவர் தன்னுடைய 25 வயதில் சமீபத்திய வங்கதேச ஒருநாள் தொடரில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் இடத்தில் 124 ரேட்டிங் புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி உள்ளது.
- 2-வது இடத்தில் 119 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி உள்ளது.
ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான ஒருநாள் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. கே.எல். ராகுல் தலைமையிலான இந்தியா அணி ஜிம்பாப்வேயை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்திய அணி 111 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒருநாள் போட்டி தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 107 ரேட்டிங் புள்ளிகளை பெற்று தரவரிசையில் 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. முதல் இடத்தில் 124 ரேட்டிங் புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும் 2-வது இடத்தில் 119 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியும் உள்ளது.
செப்டம்பர்-அக்டோபரில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை எதிர்கொள்வதால் இந்திய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
ஆண்களுக்கான ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல்:-
1. நியூசிலாந்து - 124
2. இங்கிலாந்து - 119
3. இந்தியா - 111
4. பாகிஸ்தான் - 107
5. ஆஸ்திரேலியா - 101
6. தென்னாப்பிரிக்கா - 101
7. பங்களாதேஷ் - 92
8. இலங்கை - 92
9. வெஸ்ட் இண்டீஸ் - 71
10. ஆப்கானிஸ்தான் - 69
- இரண்டாவது பாதி ஆட்டத்தில் 53-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் மார்கஸ் ரஷ்போர்ட் கோல் அடித்தார்.
- 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்அணி வெற்றி பெற்றது.
2022- 23 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்புல் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 16- வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் ஜடோன் சான்சோ கோல் அடித்தார்.இதனால் முதல் பாதியில் 1-0 என மான்செஸ்டர் யுனைடெட் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் 53-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் மார்கஸ் ரஷ்போர்ட் கோல் அடித்தார்.பின்னர் லிவர்புல் அணியின் மொகமது சலா 81-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்அணி வெற்றி பெற்றது.
- குறைந்த வயதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் அடித்த வீரர்களில் சுப்மன் கில் 2-வது இடத்தில் உள்ளார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 9 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராகவும் அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த சுப்மன்கில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். முதல் போட்டியில் 82 ரன்களும், 2-வது போட்டியில் 33 ரன்களும் 3-வது போட்டியில் 130 ரன்களும் குவித்தார். இதன் மூலம் அவர் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
முதல் சதத்தை பதிவு செய்த சுப்மன் கில், நீண்ட வருடங்களாக தகர்க்க முடியாத சச்சின் சாதனையை தகர்த்துள்ளார். அதாவது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார். இவர் 130 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த சாதனை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்தப்படியாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்(127 நாட் அவுட்) உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக அம்பதி ராயுடு (124), சச்சின் (122), யுவராஜ் சிங் (120) ஆகியோர் உள்ளனர்.
சுப்மன் கில் மேலும் ஒரு சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். குறைந்த வயதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் அடித்த இந்திய வீரர்களில் இவர் 2-வது இடத்தில் உள்ளார். இவர் 22 வயதில் சதம் அடித்துள்ளார். இதற்கு முன்பு முகமது கைப் 21 வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 9 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராகவும் அசத்தியுள்ளார். அந்த பட்டியலில் 1. சுப்மன் கில் (499*) 2. ஷ்ரேயாஸ் ஐயர் (469) 3. சித்து (417) ஆகியோர் உள்ளனர்.
மேலும் ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் அறிமுக ஒருநாள் சதத்தை அடித்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா (2010) மற்றும் கேஎல் ராகுல் (2016) ஆகியோருக்குப் பின் சுப்மன் கில் பெற்றுள்ளார்.
- பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் தோல்வியடைந்தார்.
டோக்கியோ:
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. அதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் சியுங் நாகன் யியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும், பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. அதேபோல கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் இஷான் பத்நாகர்-தனிஷா கிரஸ்டோ இணை வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
மறுபுறம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் தோல்வியடைந்தார்.
- 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை ஓபன் கோல்ப் பந்தயம் இன்று தொடங்குகிறது.
- கிரிக்கெட் வீரர்கள் முரளிவிஜய், எஸ்.அணிருதா அமெச்சூர் வீரர்களாக கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை ஓபன் கோல்ப் பந்தயம் இன்று தொடங்குகிறது. 26-ந்தேதி வரை 4 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. இதில் 3 அமெச்சூர் வீரர்கள் உள்பட மொத்தம் 123 பேர் கலந்து கொள்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் முரளிவிஜய், எஸ்.அணிருதா அமெச்சூர் வீரர்களாக கலந்து கொள்கிறார்கள்.
கரண்தீப் கோச்சார், அமன்ராஜ் உள்ளிட்ட தொழில் ரீதியான வீரர்கள் 123 பேர் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆகும். கிண்டியில் உள்ள கோல்ப் மைானத்தில் போட்டி நடக்கிறது.
- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் 28-ந்தேதி மோதுகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்லமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்
- ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்று உள்ளது.
- நான் சுமார் 150 ஓவர்கள் பீல்டிங் செய்துள்ளேன். உடல் நன்றாக இருக்கிறது என கேஎல் ராகுல் கூறினார்.
ஹராரே:
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி 'ஒயிட்வாஷ்' செய்தது.
ஹராரேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதல் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது.
3-வது வீரராக களம் இறங்கிய சுப்மன்கில் 97 பந்தில் 130 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரியும், 1 சிக்சரும் அடங்கும். அவர் ஜிம்பாப்வேயில் அதிக ரன் எடுத்து தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். இஷான்கிஷன் 50 ரன்னும் (6 பவுண்டரி), ஷிகர் தவான் 40 ரன்னும் (5 பவுண்டரி), எடுத்தனர். இவான்ஸ் 5 விக்கெட்டும், விக்டர், லுகே ஜான்வே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 49.3 ஓவரில் 276 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் 2 போட்டியை விட இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே வீரரகள் சிறப்பாக செயல்பட்டனர். அந்த அணி போராடியே தோற்றது.
சிக்கந்தர் ராசா சதம் அடித்தார். அவர் 95 பந்தில் 115 ரன் (9 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அவருக்கு அடுத்தப்படியாக சீயன் வில்லியம்ஸ் 45 ரன்னும் (7 பவுண்டரி), இவான்ஸ் 28 ரன்னும் எடுத்தனர். அவேஷ்கான் 3 விக்கெட்டும், தீபக்சாஹர், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்தது. முதல் ஆட்டத்தில் 10 விக்கெட்டிலும், 2-வது போட்டியில் 5 விக்கெட்டிலும் அபாரமாக வென்று இருந்தது. ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்று உள்ளது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் லோேகஷ் ராகுல் கூறியதாவது:-
இந்த ஆட்டத்தில் நாங்கள் நெருக்கடி அடைந்தோம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் ராசாவும், இவான் சும் சிறப்பாக ஆடி ஆட்டத்தை இறுதி வரை கொண்டு சென்றனர். அவர்கள் எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக வும், சோதனையாகவும் இருந்தனர்.
சுப்மன்கில் இந்த தொடர் முழுவதும் நன்றாக பேட்டிங் செய்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஐ.பி.எல். தொடரிலும் அவர் நன்றாக செயல்பட்டார். அவர் பேட்டிங் செய்யும் விதம் கண்ணுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த தொடர் அடுத்த தொடருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நான் சுமார் 150 ஓவர்கள் பீல்டிங் செய்துள்ளேன். உடல் நன்றாக இருக்கிறது.
நாங்கள் சில யோசனைகளுடன் இங்கு வந்தோம். சில ஆட்டங்களை பயன்படுத்த விரும்புனோம். சிலருக்கு சில காலமாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.
இந்த தொடரில் சுப்மன்கில் 3 ஆட்டத்தில் 1 சததம், ஒரு அரை சதத்துடன் 245 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.






