என் மலர்
விளையாட்டு
- பாபர் அசாம் 66 பந்துகளில் 110 ரன்களை குவித்து களத்தில் இருந்தார்.
- முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 88 ரன் அடித்தார்.
கராச்சி:
பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் கராச்சி மைதானத்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மலான் டக்அவுட்டானார்.
பிலிப் சால்ட் 30 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பென் டுக்கெட் 43 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஹேரி பூருக் 31 ரன்னும், சாம் கரண் 10 ரன்னும் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய மொயின் அலி 55 ரன் குவித்தார். இங்கிலாந்து அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஜோடி கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. பாபர் அசாம் 66 பந்துகளில் 110 ரன்களை குவித்து களத்தில் இருந்தார். முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 88 ரன் அடித்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 19.3 ஒவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
- மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.
- ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.
ஐதராபாத்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டி நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை ஒழுங்குபடுத்தினர். இதில் சில ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பந்து வீச்சாளர்கள் சொதப்பியதால் மிகப்பெரிய ரன்களை எடுத்தும் பலன் இல்லாமல் போனது.
- அணியின் முதுகெலும்பான பும்ரா முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பது பந்து வீச்சில் பலவீனத்தை காட்டுகிறது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. ஏனெனில் தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும்.
எனவே முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
மொகாலியில் 208 ரன் குவித்தும் தோற்றது மிகுந்த ஏமாற்றமே. பந்து வீச்சாளர்கள் சொதப்பியதால் மிகப்பெரிய ரன்களை எடுத்தும் பலன் இல்லாமல் போனது.
நாளைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் பந்து வீச்சில் மாற்றம் செய்யப்படும். கடந்த ஆட்டத்தில் வேகப்பந்தில் உமேஷ் யாதவும், சுழற்பந்தில் அக்ஷர் படேலும் சிறப்பாக செயல்பட்டனர். புவனேஷ்குமார், ஹர்சல் படேல், யுசுவேந்திர சாஹல் ஆகியோர் ரன்களை அள்ளிக் கொடுத்து மோசமாக வீசினார்கள். தீபக் சாஹர், அஸ்வின் ஆகியோர் வாய்ப்பு நிலைக்காக காத்திருக்கிறார்கள்.
அணியின் முதுகெலும்பான பும்ரா முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பது பந்து வீச்சில் பலவீனத்தை காட்டுகிறது.
ஹர்திக் பாண்ட்யா, சூர்ய குமார் யாதவ், லோகேஷ் ராகுல் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் டி.ஆர்.எஸ். விஷயத்தில் அவரது செயல்பாடு அதிருப்தியை அளித்தது. கேப்டன் ரோகித்சர்மா அவருக்கு மற்றொரு வாய்ப்பு கொடுப்பாரா? என்று உறுதியாக தெரியவில்லை. தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டால் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்புவார்.
ஆஸ்திரேலிய அணி 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. மொகாலியில் கேமரூன் கிரீன், மேத்யூ வேட் ஆகியோர் இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளி அணியை வெற்றி பெற வைத்தனர்.
ஸ்டீவ் சுமித், கம்மின்ஸ், கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். நாளைய போட்டியிலும் அந்த அணி 2-வது பேட்டிங் செய்யவே விரும்பும்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- முதல் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.
- அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.
துபாய்:
முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. இதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பையும் இங்கிலாந்துக்கே ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்படி 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் லண்டன் ஓவலிலும், 2025-ம் ஆண்டு இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சிலும் நடைபெறுகிறது. இதற்கான தேதி விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 70 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 5-வது இடத்திலும் உள்ளன.
- ஸ்மிருதி மந்தனா விரைவாக 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்துள்ளார்.
- விரைவாக 3000 ரன் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
கேண்டர்பரி:
இங்கிலாந்துக்கு எதிராக கேன்டர்பரியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்து புதிய சாதனை படைத்தார். இதன்படி, இந்த இலக்கை விரைவாக எட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அவர் 76 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் 88 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், அதனை மந்தனா முறியடித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா விரைவாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற பெருமையுடன், இந்திய அளவில் 3-வது நபர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அவருக்கு முன் ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து மந்தனா 76 போட்டிகளில் விளையாடி 3-வது இடத்தில் உள்ளார்.
- ஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முன்னேற்றம் கண்டுள்ளார்.
- ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
துபாய்:
மொகாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். சூர்யகுமார் யாதவ் 46 ரன்கள் (25 பந்துகள்), லோகேஷ் ராகுல் 55 ரன்கள் (35 ரன்கள்) என சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி சூர்யகுமார் யாதவ் (780 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (825 ரேட்டிங் புள்ளி) உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ராம் உள்ளார். லோகேஷ் ராகுல் 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 14-வது இடத்திலும் கோலி 16-வது இடத்திலும் அங்கம் வகிக்கின்றனர்.
அதேபோல், டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அவர் தற்போது 180 ரேட்டிங் புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.
- முதலில் ஆடிய இந்தியா 333 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
கேன்டர்பரி:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேன்டர்பரி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்தார். அவர் 143 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்லின் தியோல் 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. டேனில் வியாட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 69 ரன்னில் அவுட்டானார். அலிஸ் கேப்சி, எமி ஜோன்ஸ் தலா 39 ரன்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சார்லட் டீன் 37 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து மகளிர் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், ஹேமலதா 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர்.
- ஹர்லின் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் அடித்தனர்.
- இங்கிலாந்து அணி, 47 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.
இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 62 ரன்கள் அடிக்கப்பட்டது.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 18 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார். ஹர்லின் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 47 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் நிதானமாக ஆடியது.
- ஆசிய மகளிர் டி20 போட்டி வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.
- ஆசிய கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஆசிய மகளிர் டி20 போட்டி வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிதொடருக்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்:-
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ், சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேகனா சிங், ரேணுகா தாகூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் விராட் கோலியால் 100 சதங்களை எடுக்க இயலும்.
- விராட் கோலி குறைந்த போட்டியில் விளையாடி 71 சதத்தை எடுத்துள்ளார்.
புதுடெல்லி:
சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) அதிக சதம் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். அவர் 782 இன்னிங்சில் 100 சதம் அடித்துள்ளார்.
அதற்கு அடுத்தப்படியாக விராட் கோலி, ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலா 71 சதத்துடன் உள்ளனர்.
33 வயதான விராட் கோலி சமீபத்தில் 1000 நாட்களை தாண்டிய பிறகு தான் சர்வதேச போட்டியில் சதம் அடித்தார். ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்த செஞ்சூரியை அடித்தார்.
இதன் மூலம் விராட் கோலி 71-வது சதத்தை தொட்டு பாண்டிங்கை சமன் செய்தார். டெண்டுல்கர் 2013-ம் ஆண்டிலும், பாண்டிங் 2012-ம் ஆண்டிலும் ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த நிலையில் விராட் கோலியால் 100 சதம் அடித்து டெண்டுல்கரின் சாதனையை தொட இயலும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி குறைந்த போட்டியில் விளையாடி 71 சதத்தை எடுத்துள்ளார். இன்னும் 30 சதங்கள் தான் அவருக்கு தேவை. ஒரு ஆண்டுக்கு 5 அல்லது 6 சதம் அடிக்கும் திறன் கொண்டவர்.
அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் அவரால் 100 சதங்களை எடுக்க இயலும்.
இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.
- பாபர் அசாம் 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார்.
- கே.எல் ராகுல் 58 இன்னிங்ஸ்களுடன் 2000 ரன்களை கடந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மொகாலியில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். அவரை தவிர்த்து கே.எல் ராகுல் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களையும் குவித்தனர். பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆஸ்திரேலியா அணியானது விளையாடியது.
19.2 ஒவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணியில் துவக்க வீரராக விளையாடிய கே.எல் ராகுல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அவர் 35 பந்துகளில் மூன்று சிக்சர் மற்றும் நான்கு பவுண்டரி என 55 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை அவர் கடந்தார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரராக பாபர் அசாம் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை அடித்தார்.
அதனைத்தொடர்ந்து விராட் கோலி 56 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்து இரண்டாவது இடத்திலும், அதனை தொடர்ந்து தற்போது கே.எல் ராகுல் 58 இன்னிங்ஸ்களுடன் 2000 ரன்களை கடந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
- ஒவ்வொரு ஆட்டத்திலும் 200 ரன்களை குவிக்க முடியாது.
- 208 என்பது மிகவும் நல்ல ஸ்கோராகும். இதை பந்து வீச்சாளர்கள் தக்க வைக்க தவறி விட்டனர்.
மொகாலி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது.
ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 71 ரன்னும் (7 பவுண்டரி, 5 சிக்சர்), லோகேஷ் ராகுல் 35 பந்தில் 55 ரன்னும் ( 4 பவுண்டரி , 3 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 25 பந்தில் 46 ரன்னும் ( 2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டும் , ஹாசல்வுட் 2 விக்கெட்டும் , கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 4 பந்து எஞ்சி இருந்த நிலையில் 209 ரன் இலக்கை எடுத்து சாதித்தது. அந்த அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 30 பந்தில் 61 ரன்னும் ( 8 பவுண்டரி , 4 சிக்சர் ), மேத்யூ வேட் 21 பந்தில் 45 ரன்னும் ( 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டீவ் சுமித் 24 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
அக்ஷர் படேல் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், யுசுவேந்திர சாஹல் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்திய அணி 208 ரன் குவித்தும் தோற்றது பரிதாபமே. பந்து வீச்சு அந்த அளவுக்கு மோசமாக இருந்தது. பீல்டிங்கிலும் பல கேட்ச்களை தவற விட்டனர். தோல்விக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா பந்து வீச்சாளர்களை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
208 என்பது மிகவும் நல்ல ஸ்கோராகும். இதை பந்து வீச்சாளர்கள் தக்க வைக்க தவறி விட்டனர். நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை. பேட்ஸ்மேன்கள் நல்ல முயற்சி எடுத்து 200 ரன்னுக்கு கொண்டு வந்தனர். பந்து வீச்சாளர்கள் நேர்த்தியுடன் பந்து வீசவில்லை.
ஒவ்வொரு ஆட்டத்திலும் 200 ரன்களை குவிக்க முடியாது. ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் அதிரடியாக இருந்தது. ஸ்கோரை உயர்ந்த நிலைக்கு எடுத்து சென்றார். அடுத்த ஆட்டத்துக்குள் பந்து வீச்சு குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும்.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. என்ன தவறு நடந்தது என்பதை புரிந்து கொள்வது எங்களுக்கு சிறந்த விளையாட்டாக இருந்தது.
இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.
கடைசி கட்ட ஓவர்களில் (டெத் ஓவர்) சிறப்பாக வீசக்கூடிய புவனேஷ்வர் குமார், ஹர்சல் படேல் மற்றும் சாஹல் நேற்று மோசமாக வீசி ரன்களை அள்ளிக்கொடுத்தனர்.
புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 52 ரன்னும், ஹர்சல் படேல் 4 ஓவரில் 49 ரன்னும், சாஹல் 3.2 ஓவரில் 42 ரன்னும் விட்டுக் கொடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.






