என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது.
    • சஞ்சு சாம்சன், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

    டிரினிடாட்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. சஞ்சு சாம்சன், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

    கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவர்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    ஷாய் ஹோப் தலைமையிலான அந்த அணி கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதே உத்வேகத்துடன் நாளையும் விளைாயடி தொடரை வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் வெஸ்ட்இண்டீஸ் அணி இருக்கிறது.

    இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 142-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 141 ஆட்டத்தில் இந்தியா 71-ல், வெஸ்ட் இண்டீஸ் 64-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி 'டை'யில் முடிந்தது. 4 ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    • பிராட் என்னுடைய சிறந்த நண்பர்.
    • அவர் எப்போதுமே எனக்காக உறுதுணையாக இருந்திருகிறார்.

    லண்டன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.

    ஸ்டூவர்ட் பிராட் குறித்து ஆண்டர்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஆண்டர்சன் கண்ணீர் விட்டு அழுதார்.

    பின்னர் பேசிய ஆண்டர்சன், பிராட் என்னுடைய சிறந்த நண்பர். அவர் பல வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எப்போதுமே எனக்காக உறுதுணையாக இருந்திருகிறார் என்று கூறி கொண்டே அழுகையை அடக்க முடியாமல் ஆண்டர்சன் பேசாமல் சென்றுவிட்டார். இதை பார்க்கும் போது மனம் மிகவும் கஷ்டமாக இருந்தது.


    இதனை பார்த்த ரசிகர்கள் ஆண்களும் அழுவார்கள். தங்களுடைய நண்பர்களுக்காக என்று பதிவிட்டு இருக்கிறார்கள். இதே போன்று பிராட் இன்னும் 2 ஆண்டுகள் விளையாடி இருந்தால், முரளிதரன் அல்லது குறைந்தபட்சம் ஆண்டர்சன் சாதனையாவது முறியடித்து இருப்பார் என்றும், ஆனால், ஆண்டர்சனின் சாதனையை முறியடிக்க கூடாது என்பதற்காக பிராட் இப்படி செய்து இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டிலும் டி20 போலவே பேட்டிங் செய்ய விரும்புகிறார்.
    • சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஏற்றார் போன்று அவரது பேட்டிங் ஸ்டைலை நிச்சயம் மாற்ற வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியே சூர்யகுமார் யாதவுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சூர்யகுமார் யாதவ் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பினை பெறுவார். ஆனால் அதுதான் அவரது கடைசி வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்கள் அணிக்குள் வந்துவிட்டால் சூர்யகுமார் யாதவால் அணியில் நீடிக்க முடியாது.

    ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பேட்டிங் செய்யும் விதம் அதிக ஆபத்தான வகையில் இருக்கிறது. அவர் ஒவ்வொரு பந்திற்கும் பவுண்டரியை எதிர்நோக்கி விளையாடுகிறார். ஒருநாள் போட்டியில் அதிகமாக பவுண்டரிகளை அடிக்க முயற்சித்தால் எளிதாக விக்கெட்டுகளை இழக்க நேரிடும்.

    50 ஓவர் கிரிக்கெட்டில், நீங்கள் ஆட்டத்தை இறுதி வரை எடுத்து செல்ல வேண்டும். சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஏற்றார் போன்று அவரது பேட்டிங் ஸ்டைலை நிச்சயம் மாற்ற வேண்டும். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் டி20 போலவே பேட்டிங் செய்ய விரும்புகிறார். அதன் காரணமாகவே அவர் தொடர்ச்சியாக தனது விக்கெட்டுகளை எளிதாக இழந்து வருகிறார்.

    இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.

    • பும்ராவால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை.
    • வீரர்களால் எத்தனை போட்டிகளில் ஆட முடியும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

    மும்பை:

    2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. 2011-க்குப் பிறகு உலகக் கோப்பையை 3-வது முறையாக வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பும்ராவால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 114 ரன்கள் இலக்கை விரட்டும்போது 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. 2-வது ஒருநாள் போட்டியில் தோற்றே போனது. இந்நிலையில், இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் காயங்களைக் கையாள்வதில் சோடை போயுள்ளதாக கபில் தேவ் காட்டமாக விமர்சித்துள்ளார். பும்ராவுக்கு என்ன ஆயிற்று? அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன்னை மீட்டெடுத்து வருகிறார். ஆனால், அவரால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை.

    ரிஷப் பந்த் காயமடைந்ததால் நம் டெஸ்ட் கிரிக்கெட்டும் சற்றே பின்னடைவு கண்டுள்ளது, ரிஷப் பண்ட் ஒரு நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டர். நான் காயமடையாமல் ஆடினேன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஆண்டுக்கு 10 மாதங்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். சந்தேகத்தின் பலனை இதற்கு அளித்தோமானால் அனைவரும் தங்கள் உடம்பை தாங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐபிஎல் பெரிய விஷயம்தான். ஆனால் அது வீரர்களை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுவதும் உண்டு.

    நான் இந்த விஷயத்தில் ஓபனாகவே இதைத்தான் கேட்கிறேன். சிறிய காயம் என்றால் முக்கியமான போட்டி என்று ஐபிஎல் போட்டியில் ஆட முடிகிறது. ஆனால், நாட்டுக்காக என்று வரும் போது ஓய்வு கேட்கின்றனர். விடுப்பு கேட்கின்றனர்.

    வீரர்களால் எத்தனை போட்டிகளில் ஆட முடியும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும். கிரிக்கெட் வாரியத்திடம் ஏதோ தவறு இருக்கின்றது.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    • டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார்.
    • இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி. டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை சாம்பியன்ஸ் டிராபி வாங்கி கொடுத்துள்ளார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் முழங்கால் வலியுடன் விளையாடினார். தொடர் முடிந்த பிறகு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு ஓய்விற்காக ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு ஓய்வில் இருந்து வந்தார்.


    டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டோனி, தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.இதற்காக டோனி தனது மனைவி சாக்ஷியுடன் சென்னை வந்த வீடியோ அப்போது வெளியானது.

    இந்நிலையில் டோனி அதே ஹேர்ஸ்டைல் மற்றும் அதே காஸ்ட்யூம் உடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டோனி விமானத்தில் தூங்கியபடி வருகிறார். அருகில் அவரது மனைவி சாக்ஷி அமர்ந்திருக்கிறார்.

    இதனை விமானப்பணிப்பெண் வீடியோவாக தனது மொபையில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமான பணிப்பெண் கொடுத்த ரியாக்ஷன் குயிட்டாக இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • முழு உடல் தகுதியுடன் இருக்கும் பும்ரா வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து புறப்படும் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இதே போன்று பிரசித் கிருஷ்ணாவும் 10 ஓவர்கள் பந்து வீசி 2 மெய்டன் உள்பட ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா காயம் காரணமாக, ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, இலங்கைக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை. இதையடுத்து நீண்ட நாள் ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டார்.

    இந்நிலையில் கடந்த 21-ம் தேதி அன்று மருத்துவ அறிக்கையில் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பயிற்சி விளையாட்டு போட்டிகளில் விளையாடுவார்கள். அந்த போட்டிகளை தேசிய கிரிக்கெட் அகாடமியே ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருந்தது. அதன்படி நேற்று பயிற்சி போட்டி நடந்தது.

    இதில் ஜஸ்ப்ரித் பும்ரா மும்பை பேட்ஸ்மேனான அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு எதிராக பந்து வீசி அவரது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். கடந்த 2 வாரங்களாக பெங்களூருக்கு அருகில் உள்ள ஆலூரில் உள்ள கேஎஸ்சிஏ வளாகத்தில் மும்பை சீனியர் அணி தங்கியுள்ளது. அவர்களுடன் நடந்த போட்டியில் பும்ரா 10 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.

    இதன் மூலமாக தற்போது முழு உடல் தகுதியுடன் இருக்கும் பும்ரா வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து புறப்படும் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போன்று பிரசித் கிருஷ்ணாவும் 10 ஓவர்கள் பந்து வீசி 2 மெய்டன் உள்பட ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். 

    • டெஸ்ட் உள்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்தார்.
    • உங்களுடைய அபாரமான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஸ்டூவர்ட் பிராட்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி விட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் டெஸ்ட் உள்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் திடீரென அறிவித்தார்.

    அவரது ஓய்வு முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உங்களுடைய அபாரமான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஸ்டூவர்ட் பிராட். மிகச்சிறந்த மற்றும் மிகவும் அஞ்சப்படும் டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் ஒருவர். உண்மையான ஜாம்பவான். உங்கள் பயணமும், உறுதியும் மிகவும் ஊக்கமளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலில் பேட்டிங் செய்த சியாட்டல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் சேர்த்தனர்.
    • எம்.ஐ அணியின் கேப்டன் பூரன் 137 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் எம்.ஐ நியூயார்க் அணியும் சியாட்டல் ஆர்கஸ் அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த சியாட்டல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர், களமிறங்கிய எம்.ஐ. நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    எம்.ஐ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 55 பந்தில் 10 பவுண்டரி 13 சிக்ஸர்கள் என மொத்தம் 137 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் எம்.ஐ அணி மேஜர் லீக் தொடரின் முதல் கோப்பையை வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

    இந்த தொடர் மூலமாக மொத்தமாக மும்பை அணி 9 முறை சாம்பினாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன், சாம்பியன் லீக் டி20யில் 2 முறை சாம்பியன், மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரு முறையும், மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஒரு முறையும் மும்பை அணி சாம்பினாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நார்வே, நியூசிலாந்து அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றிருந்தன
    • கோல்கள் அடிப்படையில் நார்வே அணி முன்னேற்றம்

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

    'ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே, பிலிப்பைன்ஸ் அணிகள் இடம்பிடித்திருந்தன. நான்கு அணிகளிலும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின.

    அதன்முடிவில், நான்கு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. சுவிட்சர்லாந்து 2 போட்டிகளில் டிரா செய்திருந்ததால் 5 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

    நார்வே, நியூசிலாந்து அணிகள் தலா ஒரு டிராவுடன், தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால் நார்வே 6 கோல்கள் அடித்திருந்தது. 1 கோல் விட்டுக்கொடுத்திருந்தது. நியூசிலாந்து ஒரு கோல் அடித்து ஒரு கோல் விட்டுக்கொடுத்திருந்தது.

    இதனால் கோல்கள் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்குத்தள்ளி நர்வே 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேளியுள்ளது.

    'பி' குரூப்பில் நைஜீரியா, கனடா, ஆஸ்திரேலியா இடையெ கடும் போட்டி நிலவுகிறது.

    'சி' பிரிவில் ஸ்பெயின், ஜப்பான் அணிகள் ஏறக்குறைய நாக்அவுட் சுற்றை உறுதி செய்துவிட்டன.

    • 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் விடைபெறுகிறார்.
    • இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்.

    இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இவர், ஆஷஸ் டெஸ்டின் 5வது மற்றும கடைசி போட்டியில் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், ஆஷஸ் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஓய்வு பெறவுள்ளதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.

    இதன்மூலம், 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் விடைபெறுகிறார்.

    தனது ஓய்வு குறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறியதவாது:-

    இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜ் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம்.

    மேலும், நான் எப்போதும் போல் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். தற்போதைய ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடராக இருந்தது.

    இத்தொடரில் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் மகிழ்ச்சி. ஆஷஸ் தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது.

    சில வாரங்களாகவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். எனக்கு ஆஷஸ் தொடர் மீது தீராக்காதல்.

    அதனால்தான் எனது கடைசி போட்டி ஆஷசில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

    நேற்று இரவு ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரிடம் எனது ஓய்வு முடிவை கூறினேன்.

    உண்மையைச் சொல்வதானால், இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்று 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஓய்வு அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்டிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அணிவகுத்து நின்றனர்.

    அப்போது, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் தனது நீண்ட கால பந்துவீச்சு கூட்டாளியான ஆண்டர்சனையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

    அவர்கள் களத்தில் இறங்கியபோது, பிராட் ஆண்டர்சனை ஒரு பக்கமாக அணைத்து, மரியாதையின் போது அவரையும் அழைத்துச் சென்றார்.

    ஆண்டர்சன் எல்லைக் கோட்டிற்குப் பின்னால் நின்று பிராட் தனது தருணத்தை ரசிக்க வைத்தார்.

    • 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.
    • மழை குறுக்கிட்டதால் 4ம் நாள் ஆட்டம் தடைபட்டது.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.

    முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 41 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது.

    ஜோ ரூட் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்தார். ஜானி பேர்ஸ்டோ 78 ரன்னும், சாக் கிராவ்லே 73 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து, பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் தலா 42 ரன்கள் எடுத்தனர்.

    3ம் நாள் முடிவில், இங்கிலாந்து அணி 80 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 389 ரன்களை எடுத்திருந்தது. இதனால் இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் இங்கிலாந்து 395 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 99 பந்துகளில் அரை சதம் அடித்து 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். உஸ்மான் கவாஜா 130 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

    இதற்கிடையே, மழை குறுக்கிட்டதால் 4ம் நாள் ஆட்டம் தடைபட்டது.

    இந்நிலையில், 4ம் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 38 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்துள்ளது.

    • ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது.
    • இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடந்தது. இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென், இந்தோனேசிய வீரர் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.

    இதில் அக்சல்சென் 21-7, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

    ×