என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாண்ட்யா 89 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
    • இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 95 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கேப்டனான பாண்ட்யா டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களில் பும்ராவுடன் இணைந்துள்ளார். பாண்ட்யா 89 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 95 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும் புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும் 3-வது இடத்தை பாண்ட்யா பிடித்துள்ளனர். 4-வது இடத்தில் தமிழக வீரர் அஸ்வின் (72) உள்ளார். பும்ரா 70 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    • இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவுக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.
    • அதற்காகத்தான் வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று கயானாவில் நடந்தது. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், ஒருபுறம் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதவு செய்தார். அவர் 41 பந்துகளில் ஒரு சிக்சர் 5 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தப் போட்டியில் இந்தியா 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அரைசதம் மற்றும் சதம் அடித்தால் வீரர்கள் அவர்களுக்கு என்று ஒரு பாணியை வைத்துள்ளனர். ஜடேஜா என்றால் பேட்டை சுழற்றி காட்டுவார். கேஎல் ராகுல் காதை மூடிக்கொள்வார். இப்படி இருக்க திலக் வர்மாவும் தனக்கென ஒரு பாணியை கொண்டுள்ளார்.


    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் திலக் வர்மா இரு கட்டை விரல்களையும் மாற்றி மாற்றி காண்பித்து குழந்தையை போல் கொண்டாடினார்.

    இது குறித்து திலக் வர்மா கூறியிருப்பதாவது:-

    இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவுக்கு நான் அர்ப்பணிக்கிறேன். அதற்காகத்தான் வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.

    நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். ஆதலால், நான் எனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எப்போது அரைசதம் அடிக்கிறேனோ அதனை சமைராவுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லியிருந்தேன். அதன்படியே செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா இத்தொடரை வெல்ல எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
    • கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற போது இந்தியா 3 தோல்விகளை சந்தித்தது.

    இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டியில் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா இத்தொடரை வெல்ல எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    முன்னதாக உலக கோப்பைகளில் தோற்றாலும் இருதரப்பு தொடர்களில் இந்தியா மிரட்டலாக செயல்பட்டு வெற்றி பெறுவது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்து வந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியதன் மூலம் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த 2 தொடர்ச்சியான போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

    இதற்கு முன் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற எந்த கேப்டன்கள் தலைமையிலும் அடுத்தடுத்த 2 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோற்றதில்லை. அதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடுத்தடுத்த 2 டி20 போட்டிகளில் தோல்வியை சந்தித்த முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.

    மேலும் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரிலும் 1 தோல்வியை சந்தித்த இந்தியா இந்த தோல்வியையும் சேர்த்து மொத்தம் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் வாயிலாக 18 வருடங்கள் கழித்து ஒரு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக 3 தோல்விகளை இந்தியா பதிவு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற போது இந்தியா 3 தோல்விகளை சந்தித்தது. 

    • ஐபிஎல் தொடர் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
    • ரோகித் சர்மா எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் திலக் வர்மாவை தவிர மற்ற இந்திய அணி வீரர்கள் சொதப்பினர். திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20-யில் தனது முதல் அரை சதம் அடித்தார்.

    இந்நிலையில் எனது உத்வேகம் சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா என்று திலக் வர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா எனது உத்வேகம். ரோகித் பாயுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். என்னுடைய முதல் ஐபிஎல் தொடரில், திலக் நீங்கள் ஒரு அனைத்து வடிவ கிரிக்கெட் வீரர் என்று அவர் என்னிடம் கூறினார். அது என் நம்பிக்கையை அதிகரித்தது. அவருடைய வழிகாட்டுதல் எனக்கு மிகப்பெரியதாக இருந்தது.

    ரோகித் சர்மா எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். எப்போதும் என்னிடம் பேசி விளையாட்டை ரசிக்கச் சொல்வார். ஐபிஎல் தொடர் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவுக்காக விளையாட எனக்கு இந்த சிறப்பான ஆட்டம் உதவியது. முன்னோக்கி செல்லும் நான் அதை தொடர விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதாரண யானைகள் காப்பகமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது.
    • பிரதமர், ஜனாதிபதி உள்பட பலர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து யானைகளை பார்வையிட்டு சென்றனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சாகச போட்டிகள் நடைபெற்றது. இது தவிர பேச்சு, எழுத்து, கட்டுரை, பாடல், நடனம், நாடகம் என பல்வேறு போட்டிகளிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற பள்ளிக்கு ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

    அவர்களுடன் மாணவ-மாணவிகள் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் பேசிய பொம்மன், பெள்ளி தம்பதியினர், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

    சாதாரண யானைகள் காப்பகமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது. பிரதமர், ஜனாதிபதி உள்பட பலர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து யானைகளை பார்வையிட்டு சென்றனர். தற்போது சி.எஸ்.கே. அணியின் கேப்டனான எம்.எஸ்.டோனி விரைவில் முகாமுக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையை பழங்குடியின மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளது.
    • ஒருநாள் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார்.

    இந்தியாவில் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான உத்தேச 18 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    இந்த அணி வருகின்ற தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லாபுசேனே இடம் பெறவில்லை.

    ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது, இதில் அணியின் புதிய கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ஆரோன் ஹார்டி, தன்வீர் சங்கா மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியானது வருகின்ற செப்டம்பர் 7-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார். அதே நேரத்தில், கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக, மிட்செல் மார்ஷ் அணிக்கு கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணி:-

    டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், ஆஸ்டன் அகர், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க் , ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் எல்லிஸ்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டி20 அணி:-

    மாட் ஷார்ட், டிம் டேவிட்ஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஜோஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் எல்லிஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜான்சன், டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட்.

    • எங்கள் பந்துவீச்சாளர்களை ஒரு ஓவர் ஸ்பெல்லை மட்டும் வீசுவதற்காகவே திட்டமிட்டு அழைத்தோம்.
    • அதேபோல் விரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள, நல்ல இடதுகை பேட்ஸ்மேன்கள் அவசியம்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதலில் தடுமாற்றத்தை கொடுத்த இந்திய அணி பூரனின் அதிரடியை சமாளிக்க முடியாமல் ரன்களை வாரி வழங்கியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்த டி20 தொடரை வெல்வதற்கான சிறந்த இடத்தில் இருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கூறியுள்ளார்.

    இந்த வெற்றிக் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் கூறுகையில்:-

    2016-ம் ஆண்டுக்கு பின் நாங்கள் டி20 தொடரில் வெற்றிபெறவில்லை. அதனால் இந்த டி20 தொடரை வெல்வதற்கான சிறந்த இடத்தில் இருக்கிறோம்.

    எங்கள் பந்துவீச்சாளர்களை ஒரு ஓவர் ஸ்பெல்லை மட்டும் வீசுவதற்காகவே திட்டமிட்டு அழைத்தோம். அதற்கு கடுமையான வெயில் தான் காரணம். அதேபோல் விரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள, நல்ல இடதுகை பேட்ஸ்மேன்கள் அவசியம். சாஹல், குல்தீப் மற்றும் பிஷ்னோய் ஆகியோரை கட்டுப்படுத்த எங்களுக்கு இடது கை வீரர்கள் தேவை. பூரனும் ஹெட்மேயரும் அதை எதிர்கொள்வது முக்கியம். அதனை களத்தில் செயல்படுத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2021-22 ரஞ்சி டிராபி சீசனில், அவர் 122.75 சராசரியில் 982 ரன்கள் எடுத்திருந்தார்.
    • இந்திய அணியில் அவருக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை.

    காஷ்மீர்:

    மும்பை கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிவரும் சர்பராஸ் கான், திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரரைப் பார்க்க அவரது ரசிகர்கள் பலர் குவிந்தனர். 

    மிகவும் திறமையான பேட்ஸ்மேனாக அறியப்படும் சர்பராஸ் கான், 2022-23 ரஞ்சி டிராபி தொடரில் மூன்று சதங்களின் உதவியுடன் ஆறு ஆட்டங்களில் 92.66 சராசரியில் 556 ரன்கள் எடுத்தார். 2021-22 ரஞ்சி டிராபி சீசனில், அவர் 122.75 சராசரியில் 982 ரன்கள் எடுத்திருந்தார்.

    உள்நாட்டு தொடர்களில் மிகவும் நிலையான பேட்டர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட போதிலும், இந்திய அணியில் அவருக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை.

    • குல்தீப் யாதவ் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசுகிறார். தற்போது நல்ல நிலையில் உள்ளார்.
    • அதனால் தான் என்னை விட அவருக்கு ஆடும் லெவனில் இடம் வழங்கப்படுகிறது.

    கயானா:

    இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் அனேகமாக மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடிப்பார்கள். இதில் ஜடேஜா, குல்தீப் யாதவுக்கு இடம் உறுதி. மற்றொரு இடத்திற்கு யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல் ஆகியோரில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

    33 வயதான 'லெக் ஸ்பின்னர்' யுஸ்வேந்திர சாஹலை பொறுத்தவரை இந்த ஆண்டில் வெறும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் பெரும்பாலும் வெளியே உட்கார வைக்கப்படுகிறார்.

    இது குறித்து வெஸ்ட் இண்டீசில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எப்போதும் களம் இறங்கும் 11 பேர் கொண்ட அணி அதாவது சரியான அணிச்சேர்க்கைக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும். இது ஒன்றும் புதிதல்ல. இந்திய ஒரு நாள் போட்டி அணியில் பொதுவாக 7-வது பேட்டிங் வரிசையில் ரவீந்திர ஜடேஜா அல்லது அக்ஷர் பட்டேல் விளையாடுகிறார்கள். ஆடுகளம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாக இருந்தால் மட்டுமே 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறோம். குல்தீப் யாதவ் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசுகிறார். தற்போது நல்ல நிலையில் உள்ளார். அதனால் தான் என்னை விட அவருக்கு ஆடும் லெவனில் இடம் வழங்கப்படுகிறது. ஆனாலும் நான் தொடர்ந்து வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், அதை என்னால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    ஆஸ்திரேலியா (மார்ச் மாதம்) மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தும் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அணியினருடனே பயணிக்கிறேன். அணிக்குரிய நீலநிற சீருடையை ஒவ்வொரு நாளும் அணிவது அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஒன்றும் வீட்டில் இருக்கவில்லை. அணியில் நானும் அங்கம் வகிக்கிறேன். கிரிக்கெட் தனிநபர் போட்டி அல்ல. குழு போட்டி. அணியில் இருக்கும் 15 பேரும் வெற்றிக்காக உழைக்கிறோம். அதில் 11 பேர் மட்டுமே களம் இறங்க வாய்ப்பு பெற முடியும். ஆடுகள சூழலுக்கு ஏற்ப லெவன் அணி தேர்வு செய்யப்படுகிறது.

    நான் இதுவரை 4 கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன். அவர்கள் எல்லாம் எனது சகோதரர் மாதிரி. ஒரு குடும்பம் போல் நினைக்கிறேன். டோனி தான் மூத்த சகோதரர். அடுத்து விராட் கோலி, அதன் பிறகு ரோகித் சர்மா. இப்போது ஹர்திக் பாண்ட்யா. ஆனால் நோக்கம் ஒன்று தான். மைதானத்திற்குள் வந்து விட்டால் எல்லோரும் வெற்றி பெற விரும்புகிறோம். ஒரு பவுலரான எனக்கு அவர்கள் (சீனியர்) முழு சுதந்திரம் தந்தனர். ஹர்திக் பாண்ட்யாவும் அதே போல் பவுலர்களை வழிநடத்துகிறார்.

    இப்போது நான் ஆசிய கோப்பை அல்லது உலகக் கோப்பை கிரிக்கெட் குறித்து சிந்திக்கவில்லை. முழு கவனமும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை சிறப்பாக நிறைவு செய்வதில் தான் இருக்கிறது.

    இவ்வாறு சாஹல் கூறினார்.

    • இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் அந்த அணி டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    கயானா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 67 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், எங்கள் பேட்டிங் திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தன. நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் ஆடியிருக்கலாம். 160 அல்லது 170 ரன்கள் சிறந்த ரன்னாக இருந்திருக்கலாம். பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் இந்தியாவின் பிரனாய், சீனாவின் வெங் ஹாங் யாங் மோதினர்.
    • இந்திய வீரர் பிரனாயை வீழ்த்தி சீனாவின் வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய், சீன வீரர் வெங் ஹாங் யாங் ஆகியோர் மோதினர்.

    முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்டு விளையாடிய பிரனாய் 23-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை தனதாக்கினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை வெங் ஹாங் யாங் 22-20 என்ற கணக்கில் கைப்பற்றினார். அத்துடன் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

    • இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் உறுதி செய்யாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    விளையாட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, வரவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023-ல் பங்கேற்க தனது கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

    இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் நிலை சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் நம்புகிறது.

    ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அணி மறுத்ததால், பாகிஸ்தானின் இந்த முடிவை எடுத்தது. இருப்பினும், பாகிஸ்தான் தனது கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து முழு கவனம் கொண்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறோம்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய பயணத்தின்போது முழு பாதுகாப்பு குறித்து இந்தியா உறுதி செய்யும் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.

    ×