என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இதற்கு முன்பு ஒரு ஆட்டத்துக்கான அடிப்படை விலை ரூ.3.8 கோடியாக இருந்தது.
    • இதற்கான ஏல நடைமுறை வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டியின் முதன்மை ஸ்பான்சருக்கான அடிப்படை விலையை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது.

    இதற்கு முன்பு ஒரு ஆட்டத்துக்கான அடிப்படை விலை ரூ.3.8 கோடியாக இருந்தது. இதை தற்போது ரூ.2.4 கோடியாக பி.சி.சி.ஐ. குறைத்துள்ளது. 2019 முதல் 2023 வரை முதன்மை ஸ்பான்சராக இருந்த பே.டி.எம். மாஸ்டர் கார்டு ஒரு ஆட்டத்துக்கு ரூ.3.8 கோடி செலுத்தி இருந்தது.

    செப்டம்பர் முதல் 2026 ஆகஸ்டு வரை 3 ஆண்டுகளுக்கான ஒட்டு மொத்த முதன்மை ஸ்பான்சர் அடிப்படை விலை ரூ.134 கோடியாகும். 15 டெஸ்ட், 15 ஒருநாள், 26 இருபது ஓவர் போட்டிகள் இதில் அடங்கும். இதற்கான ஏல நடைமுறை வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.

    • பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களில் யார் சிறந்த பந்து வீச்சாளர் என ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்டார்.
    • அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வின் போது ஒரு ரசிகரின் கேள்விக்கு தனது பதிலால் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார். 36 வயதான அவர் சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இடம்பெற்றார். அதை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இளம் வீரர்களை வளர்க்கவும், வரவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு முன்னதாக பல்வேறு சேர்க்கைகளை முயற்சிக்கவும், ரோகித் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில், விடுமுறையில் இருக்கும் ரோகித் சர்மா, அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வின் போது ஒரு ரசிகரின் கேள்விக்கு தனது பதிலால் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளார்.

    பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களில் யார் சிறந்தவர் என ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் அனைவருமே சிறந்த பந்து வீச்சாளர்தான். யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. நீங்கள் பெரிய சர்ச்சையை எதிர்பார்த்து இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள் என அவர் பதலளித்தார்.


    இதனை கேட்ட அனைவரும் சிரித்தனர். அவரது மனைவி ரித்திகாவும் சிரித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சிறப்பாகவே இருந்தது.
    • என்னைப் பொருத்தவரை ஹர்திக் பாண்டியாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என நினைக்கிறேன்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்ததன் மூலம் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு தேவையான ஆதரை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் படேல் கூறியுள்ளார்.


    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் இரண்டு முக்கிய தவறுகளை செய்து விட்டார். ஒன்று ஹர்திக் பாண்டியா முதல் டி20 போட்டியின் போது பவர் பிளே ஓவரில் அக்சர் பட்டேலை வீச சொன்னார். அதுவும் நிக்கோலஸ் பூரான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அக்சர் பட்டேல் வீசியதால் அந்த ஓவர் அதிக ரன்கள் சென்றது.

    இதேபோன்று இரண்டாவது டி20 போட்டியில் சாஹல் 4 ஓவர்கள் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா விட்டு விட்டார். ஆனால் குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சிறப்பாகவே இருந்தது. ஆனால் அங்கு அவருக்கு ஆசிஸ் நெஹ்ராவின் ஆதரவு இருக்கிறது. ஆனால் ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது. நெஹ்ரா போன்ற துடிப்பான பயிற்சியாளர் டி20 கிரிக்கெட்டிலும் வேண்டும்.

    ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த வெறி இருக்கிறது. ஆனால் அவருக்கு வேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை. என்னைப் பொருத்தவரை ஹர்திக் பாண்டியாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். டி20 கிரிக்கெட் பொறுத்தவரை சில சில தருணங்கள் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்றும் இதனால் ஒவ்வொரு முடிவும் டி20 போட்டியில் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ள பார்த்தீவ் பட்டேல், அந்த முடிவுகளை கேப்டன் எடுப்பதற்கு பயிற்சியாளர் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு படேல் கூறியுள்ளார்.

    • டி.என்.சி.ஏ. பிரசிடென்ட் லெவனுக்கு விஜய் சங்கரும், டி.என்.சி.ஏ. லெவனுக்கு ஷாருக்கானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.

    இந்தப்போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணிகளை தமிழ்நாடு சீனியர் தேர்வு குழு அறிவித்துள்ளது.

    டி.என்.சி.ஏ. பிரசிடென்ட் லெவனுக்கு விஜய் சங்கரும், டி.என்.சி.ஏ. லெவனுக்கு ஷாருக்கானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன் அணி வருமாறு:-

    விஜய் சங்கர் (கேப்டன்), சாய்கிஷோர் (துணை கேப்டன்), அஜித்ராம், கணேஷ், சச்சின், விமல்குமார், லக்சய் ஜெயின், அஜிதேஷ், சந்தீப் வாரியர், டிரிலோக், எம்.முகமது, ராகுல், கிரண், ரித்திக் ஈஸ்வரன், அதிக்-உர்-ரகுமான், முகமது அலி.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி வருமாறு:-

    ஷாருக்கான்(கேப்டன்), சந்தோஷ் குமார், ஜிதேந்திர குமார், நிதிஷ் ராஜகோபால், மாதவராவ் பிரசாத், சித்தார்த், ராமஅரவிந்த், அஜய் கிருஷ்ணன், சுபங் மிஸ்ரா, குருராக வேந்திரன், சச்சின் ரதி, சுப்பிரமணியம், சரவண குமார், கர்பன்த்சிங், விக்னேஷ், சாமுவேல் ராஜ்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர், அயர்லாந்து போட்டியில் ஆடுவதில் தேர்வு பெற்றுள்ளார். சாய் சுதர்ஷன், பிரகோஷ், ரஞ்சன் பவுல், ஜெகதீசன் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்சி முகாமுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

    பாபா அபராஜித்துக்கு திருமணம் நடைபெறுவதால் 20-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பங்கேற்க மாட்டார். பாபா இந்திரஜித் 2-வது போட்டியில் இருந்து ஆடுவார்.

    • அவர் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், உயரம் தாண்டும் போட்டியில் வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
    • இந்திய, தமிழக மற்றும் சென்னை காவல்துறைக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.

    சென்னை:

    கனடா நாட்டில் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி முதல், ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி வரை உலக காவல்துறை மற்றும் தீ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் 7 விளையாட்டு பிரிவுகள் (100 மீட்டர் தடை தாண் டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்) அடங்கிய 'ஹெப்டத்லான்' போட்டியில் சென்னை காவல்துறையில் நவீன கட்டுப்பாட்டு அறையில், காவல்கரங்கள் பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு லீலாஸ்ரீ தங்க பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும் அவர் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், உயரம் தாண்டும் போட்டியில் வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இந்திய, தமிழக மற்றும் சென்னை காவல்துறைக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது. வரும் 14-ந் தேதி சென்னை திரும்பும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • 2-வது முறையாக தேர்வு குழு தலைவராகியுள்ளார்.
    • ஏற்கனவே 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் இன்ஜமாம் இருந்தார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த ஹரூன் ரஷித் கடந்த மாதம் விலகினார். அந்த இடத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக்கின் பெயர் பரிசீலிக்கப்பட்ட நிலையில் நேற்று அந்த பொறுப்பில் அவர் அமர்த்தப்பட்டார். 2-வது முறையாக தேர்வு குழு தலைவராகியுள்ளார்.

    ஏற்கனவே 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் இன்ஜமாம் இருந்தார். 53 வயதான இன்ஜமாம் 120 டெஸ்ட் மற்றும் 378 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவசாலி ஆவார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் தொழில்நுட்ப கமிட்டியில் அங்கம் வகிக்கிறார். இனி அந்த கமிட்டியில் நீடிக்க முடியாது. 

    பாகிஸ்தான் அணி, வருகிற 22-ந்தேதி முதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், 30-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும் பங்கேற்கிறது. இவ்விரு தொடருக்கான பாகிஸ்தான் அணியை இன்ஜமாம் தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்து அறிவிக்க உள்ளது.

    அதைத் தொடர்ந்து உலகக் கோப்பை போட்டிக்கான அணியை தேர்வு செய்வது அவரது முக்கிய பணியாக இருக்கும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கும் பாகிஸ்தான் அணியை இவர் தான் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2011-ம் ஆண்டு உலக கோப்பை நாம் வென்ற போது கூட நான் அணியில் இடம் பெறவில்லை.
    • உள்நாட்டு ரசிகர்களின் மத்தியில் உலக கோப்பையை வெல்வோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    மும்பை:

    உலக கோப்பை கிரிக்கெட்போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 10 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை வெற்றியை நான் அருகில் இருந்து பார்த்ததில்லை. 2011-ம் ஆண்டு உலக கோப்பை நாம் வென்ற போது கூட நான் அணியில் இடம் பெறவில்லை. பார்க்கவே அழகான உலக கோப்பைக்கு பின்னால் நிறைய மறக்க முடியாத நினைவுகளும், வரலாறும் இருக்கிறது. இந்த முறை உலக கோப்பையை கையில் ஏந்த முடியும் என்று நம்புகிறேன்.

    சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் ஒவ்வொரு இடத்திற்கும், மைதானத்திற்கும் செல்லும் போதும் ரசிகர்களின் ஆதரவு பிரமாண்டமாக இருக்கும் என்பது தெரியும். அது மட்டுமின்றி அது சாதாரண போட்டி அல்ல. உலக கோப்பை. 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடக்கிறது. அதனால் ஒவ்வொருவரும் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    நினைவில் உள்ள ஒவ்வொரு உலக கோப்பை போட்டி குறித்து கேட்கிறீர்கள். 2003-ம் ஆண்டில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்பு வரை உண்மையிலேயே சிறப்பாக ஆடியது. பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் ரன்வேட்டை நடத்தினார்.

    வெஸ்ட் இண்டீசில் நடந்த 2007-ம் ஆண்டு உலக கோப்பை நமக்கு நல்லவிதமாக அமையவில்லை. துரதிர்ஷ்டவசமாக லீக் சுற்றை கூட தாண்ட முடியாமல் வெளியேறி விட்டோம்.

    2011-ம் ஆண்டு உலக கோப்பை நாம் எல்லோருக்கும் மறக்க முடியாது ஒன்று. ஆனால் நான் ஒவ்வொரு ஆட்டத்தையும், ஒவ்வொரு பந்தையும் வீட்டில் டி.வி.யில் கண்டுகளித்தேன். இந்த உலக கோப்பையில் எனக்கு இரு விதமான உணர்வு பூர்வமான விஷயங்கள் உண்டு. ஒன்று நான் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானேன். அதனால் உலக கோப்பை போட்டியை பார்க்ககூடாது என்று முடிவு செய்தேன். பிறகு மனதை மாற்றிக் கொண்டேன். அடுத்ததாக இந்திய அணி கால்இறுதியில் இருந்து அருமையாக விளையாடி மகுடம் சூடியதை என்னால் மறக்க முடியாது.

    அதன் பிறகு 2015 மற்றும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளில் நானும் அணியில் இருந்தேன். இதில் நாங்கள் நன்றாக விளையாடினோம். அரைஇறுதி வரை முன்னேறினோம். இறுதி சுற்றை எட்ட எல்லா வகையில் முயற்சித்து பார்த்தோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.

    இப்போது மீண்டும் சொந்த மண்ணில் விளையாடுகிறோம். கடைசி கட்ட தடையை தாண்டி கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன். ஆனால் அதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். ஒன்றிரண்டு நாட்களில் நீங்கள் உலக கோப்பையை வென்று விட முடியாது. போட்டி நடக்கும் ஒன்றரை மாதங்களும் சிறப்பாக விளையாடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் புது நாள். ஒவ்வொரு ஆட்டமும் புது தொடக்கம். இது டெஸ்ட் கிரிக்கெட் போன்று கிடையாது. ஒருநாள் கிடைக்கும் உத்வேகத்தை அடுத்த நாளுக்கு கொண்டு செல்ல முடியாது.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பு.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இந்த போட்டியின்போது நடுவரை விமர்சித்த குற்றத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான நிகோலஸ் பூரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    போட்டியின்போது, ஐசிசி விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி தரப்பில் நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங், மன்தீப் சிங் கோல் அடித்தனர்.
    • தென் கொரியா தரப்பில் சுங்யன் கிம், ஜிஹன் யாங் கோல் அடித்தனர்.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    இந்நிலையில், 5ம் நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், மாலை 4 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான்- மலேசியா அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் மலேசிய அணி சிறப்பாக விளையாடியது. இதன்மூலம், போட்டியின் ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணி ஜப்பானை வீழ்த்தியது.

    இந்த வெற்றியின் மூலம், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் முதல் அணியாக மலேசிய அணி முன்னேறியது.

    இதைதொடரந்து, மாலை 6.15 மணிக்கு தொடங்கிய 11வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- சீனா அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி ஒரு கோல் அடித்த நிலையில் ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் சீனா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.

    பின்னர், 39வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இதன்மூலம், ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணிக்கில் சீனாவை வீழ்த்தி வென்றது.

    இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு இந்தியா- தென் கொரியா அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.

    இந்திய அணி தரப்பில் நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங், மன்தீப் சிங் கோல் அடித்தனர்.

    தென் கொரியா தரப்பில் சுங்யன் கிம், ஜிஹன் யாங் கோல் அடித்தனர்.

    லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேர் போட்டியிடுகிறார்கள்.
    • பிரிஜ் பூஷன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல்  அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர், மூத்த துணைத் தலைவர், 4 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், 2 இணைச் செயலாளர்கள் மற்றும் 5 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் தலைவர் பதவிக்கான போட்டியில், தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் விசுவாசியான சஞ்சய் குமார் சிங் (உத்தர பிரதேசம்) மற்றும் 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன் ஆகியோர் உள்ளனர்.

    துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் கர்தார் சிங் போட்டியிடுகிறார். இவர் ஆசிய போட்டிகளில் இரணடு முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

    இவர் தவிர அசித் குமா சகா(மேற்கு வங்காளம்), ஜெய் பிரகாஷ் (டெல்லி), மோகன் யாதவ் (மத்திய பிரதேசம்), என்.போனி (மணிப்பூர்) ஆகியோரும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

    இதேபோல் 2 இணை செயலாளர் பதவிகளுக்கு 4 பேரும், ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேரும் போட்டியிடுகிறார்கள். பிரிஜ் பூசன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் 5 முக்கிய பதவிகளுக்கான போட்டியில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஐபிஎல் கோப்பையை மும்பை மற்றும் சென்னை அணிகள் 5 முறை கைப்பற்றியுள்ளது.
    • ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்தியாவில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஐபிஎல் கோப்பையை மும்பை மற்றும் சென்னை அணிகள் 5 முறை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் ஐதராபாத் அணி புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. லாராவின் பதவி காலம் முடிந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரியை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நிர்வாகம் நியமித்துள்ளது.

    முன்னதாக ஆர்சிபி அணி புதிய பயிற்சியாளரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • கோகோ காப் அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
    • நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ராக் க்ரீக் பூங்காவின் வில்லியம் எச்.ஜி. பிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மைதானத்தில் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடர் ஜூலை 29-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.

    இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் அமெரிக்க இளம் வீராங்கனையான கோகோ காப், கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சக்காரியா உடன் பலப்பரீட்சை நடத்தினார். கோகோ காப் அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். மரியா சக்காரியா, ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    கோகோ காப் நேற்று நடந்த இறுதி போட்டியில் முதல் இரண்டு செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். 1 மணி நேரம் 24 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் கோகோ காப் 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதன் பின் நடந்த இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

    ×