என் மலர்
விளையாட்டு
- ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
- உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் படேல் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்த நிலையில் வெளியே வந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ஐபிஎல், ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.
உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.
- 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது.
- ஆப்கானிஸ்தான் 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது.
லக்னோ:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நெதர்லாந்து அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வியுடன் (பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளிடம்) அரைஇறுதி வாய்ப்பில் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது.
போட்டிக்கான ஆடும் லெவன்:-
ஆப்கானிஸ்தான்:
ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ராம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் ரகுமான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி.
நெதர்லாந்து:
வெஸ்லி பரேசி, கேம்ஸ் ஓ டாவ்ட், காலின் அகேர்மான், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீக்ரென்.
- வில்லியம்சன், லோக்கி பெர்குசன், சாப்மேன், வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ளனர்.
- மேட் ஹென்றிக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி காயத்தால் தத்தளிக்கிறது. வில்லியம்சன், லோக்கி பெர்குசன், சாப்மேன், வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் மேட் ஹென்றிக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி கடைசியாக நடந்த 3 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டர் விருது வழங்கப்படுகிறது.
- முதல் விருதை விராட் கோலி பெற்றார்.
மும்பை:
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி புதிய பாணியை கடைபிடித்து வருகிறது. அது ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டர் விருது வழங்குவதாகும். முதல் விருதை விராட் கோலி பெற்றார். அதனை தொடர்ந்து ஷர்துல் தாகூர், கேஎல் ராகுல், ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐய்யர் என பலரும் பெற்றனர்.
ஒவ்வொரு முறையும் வித்தியசமான முறையில் விருது வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்த பீல்டிங் பயிற்சியாளர் இந்த முறையும் வித்தியாசமான முறையில் விருது வழங்கியுள்ளார்.
இந்த முறை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறந்த பீல்டர் விருதை அறிவித்தார். இலங்கை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்த ஆட்டத்தை தொடருங்கள் என பாராட்டிய அவர், இறுதியில் சிறந்த பீல்டர் விருது இந்த முறை ஷ்ரேயாஸ் ஐய்யர் வழங்கப்படுகிறது என கூறினார்.
இதனை கேட்ட ஷ்ரேயாஸ் துள்ளி குதித்து மகிழ்ச்சியை கொண்டாடினார். 2-வது முறையாக அவர் இந்த விருதை தட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்திய அணி 357 ரன் குவித்த போதிலும் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.
- இந்த ஆண்டில் இந்தியா இதுவரை 7 முறை 350 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை 55 ரன்னில் சுருட்டி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதேசமயத்தில் இலங்கை அணி மோசமான சாதனையை நிகழ்த்தி உள்ளது.
இந்திய அணி 357 ரன் குவித்த போதிலும் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. உலகக் கோப்பையில் சதமின்றி எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு சதமின்றி எடுக்கப்பட்ட சிறந்த ஸ்கோரை பாகிஸ்தான் (2019-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 348 ரன்) பெற்றிருந்தது.
இந்த ஆண்டில் இந்தியா இதுவரை 7 முறை 350 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. ஓராண்டில் அதிக தடவை 350 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள இங்கிலாந்தின் சாதனையை (2019-ம் ஆண்டில் 7 முறை) சமன் செய்திருக்கிறது.
இந்திய அணி 302 ரன் வித்தியாசத்தில் இலங்கையை போட்டுத்தாக்கியது. ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் 2-வது பெரிய வெற்றி இதுவாகும். ஆண்டின் தொடக்கத்தில் இதே இலங்கையை திருவனந்தபுரத்தில் 317 ரன் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது உலக சாதனை வெற்றியாக தொடருகிறது.
இலங்கை அணியில் 5 வீரர்கள் டக்-அவுட் ஆனார்கள். உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் 5 வீரர்கள் ரன்னின்றி வீழ்ந்தது இது 8-வது முறையாகும்.
இந்த ஆட்டத்தில் 55 ரன்னில் அடங்கிய இலங்கை அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது மோசமான ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது. இதற்கு முன்பு 1975-ம் ஆண்டு உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 86 ரன்னில் ஆல்-அவுட் ஆனதே இலங்கையின் பரிதாபகரமான ஸ்கோராக இருந்தது. உலகக் கோப்பையில் ஒட்டுமொத்தத்தில் கனடா அணி 36 ரன்னில் சுருண்டதே குறைந்த ஸ்கோராக (2003-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக) நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
- 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா.
- இந்த போட்டியில் விராட் கோலி 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 55 ரன்னில் சுருண்டது. இதனால் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதம் அடித்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலி 88 ரன்னில் ஆட்டமிழந்தார். சதத்தில் சாதனை படைக்கவில்லை என்றாலும் ஒரு ஆண்டில் அதிக முறை ஆயிரம் ரன் எடுத்த சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
விராட் கோலி 34 ரன்னில் இருந்த போது இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்தார். 2023-ம் ஆண்டில் இந்தியாவின் சுப்மன் கில் (1,426 ரன்), இலங்கையின் நிசாங்கா (1,108 ரன்), இந்திய கேப்டன் ரோகித் சர்மா (1,060 ரன்) ஆகியோருக்கு பிறகு ஆயிரம் ரன்களை கடந்தவர் கோலி (23 ஆட்டத்தில் 1,054 ரன்) தான்.
கோலி ஓராண்டில் ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுப்பது இது 8-வது முறையாகும். ஏற்கனவே 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இதன் மூலம் ஓராண்டில் அதிக முறை ஆயிரம் ரன்களை அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (7 முறை) முறியடித்தார்.
- ஸ்ரேயாஸ் அய்யர் மன ரீதியாக வலிமையானவர்.
- முகமது சிராஜ் ஒரு தரமான பந்துவீச்சாளர்.
மும்பை:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது.சுப்மன்கில் 92 ரன்னும், விராட்கோலி 88 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி இந்தியாவின் அபார பந்துவீச்சில் 55 ரன்னில் சுருண்டது. இந்திய தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்தியா இதுவரை தான் மோதிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
நாங்கள் அதிகாரப்பூர்வமாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடரில் ஒரு அணியாக நாங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சென்னை மைதானத்தில் நாங்கள் முதல் வெற்றியை பெற்றபோது எங்களது இலக்கு முதல் அணியாக அரைஇறுதிக்கு தகுதி பெறுவதுதான் என்பதை கருத்தில் கொண்டு விளையாடினோம்.
7 போட்டியிலும் வெற்றி பெற்று அந்த இலக்கை அடைந்துவிட்டோம். தற்போது அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. ஒவ்வொரு வீரர்களும் திறமைகளை வெளிப்படுத்தினர். எந்த ஒரு மைதானத்திலும் 350 ரன்கள் அடித்தால் அது வெற்றிக்கான ரன்னாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஸ்ரேயாஸ் அய்யர் மன ரீதியாக வலிமையானவர். இப்போட்டியில் அவருக்கு தெரிந்ததை செய்தார். இதைத்தான் அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
முகமது சிராஜ் ஒரு தரமான பந்துவீச்சாளர். அவரிடம் புது பந்தை தந்து இதேபோன்று சிறப்பாக வீசினால் எங்களது அணி வேறு விதமாக தெரியும். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். அவர் புதிய பந்தில் நிறைய திறன்களை பெற்றுள்ளார். பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். அடுத்த ஆட்டத்தில் (5-ந் தேதி, கொல்கத்தா) தென்ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளோம்.
அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். நாங்களும் அப்படி தான் இருக்கிறோம். இதனால் இப்போட்டி சிறந்ததாக இருக்கும். அந்த விளையாட்டை கொல்கத்தா மக்கள் ரசிக்க போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆப்கானிஸ்தான் 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது.
- நெதர்லாந்து அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 8-வது இடத்தில் உள்ளது.
லக்னோ:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது.
ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது. வங்காளதேசம், இந்தியா, நியூசிலாந்து அணிகளிடம் தோல்வி கண்ட ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த அணி அரைஇறுதிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைத்து சாதனை படைக்க முடியும்.
கடைசியாக பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் அடுத்தடுத்து பதம்பார்த்த ஆப்கானிஸ்தான் அணி கூடுதல் உத்வேகத்துடன் களம் காணும். ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷகிடி, ரமனுல்லா குர்பாஸ், ரஹமத் ஷா, இப்ராகிம் ஜட்ரனும், பந்து வீச்சில் ரஷித் கான், பசல்ஹக் பரூக்கி, நவீன் உல்-ஹக், முஜீப் ரகுமானும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டராக அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் ஜொலிக்கிறார்.
ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வியுடன் (பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளிடம்) அரைஇறுதி வாய்ப்பில் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், சைபிரான்ட் இங்கில்பிரிட்டும், பந்து வீச்சில் பால் வான் மீக்ரென், ஆர்யன் தத், வான்டெர் மெர்வும், ஆல்-ரவுண்டர்களாக காலின் அகேர்மான், லோகன் வான் பீக், பாஸ் டி லீட்டும் வலுசேர்க்கிறார்கள்.
அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியம் என்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. தரமான சுழற்பந்துவீச்சாளர் பட்டாளத்தை கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி தொடருமா?, அல்லது அதற்கு நெதர்லாந்து முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆப்கானிஸ்தான் 7 ஆட்டத்திலும், நெதர்லாந்து 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. உலகக் கோப்பையில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ராம் அலிகில் அல்லது நஜ்புல்லா ஜட்ரன், முகமது நபி, ரஷித் கான், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக் அல்லது நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், கேம்ஸ் ஓ டாவ்ட், வெஸ்லி பரேசி, காலின் அகேர்மான், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், இங்கில்பிரிட், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், பால் வான் மீக்ரென்.
- இந்தியா 357 ரன்கள் குவித்தது
- இலங்கை 55 ரன்களில் சுருண்டது
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 55 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.
358 ரன் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. முகமது சமி 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பும்ரா போட்டியின் முதல் பந்தை வீசினார். இந்த பந்தில் இலங்கை பேட்ஸ்மேன் நிசாங்காவை எல்.பி.டபிள்யூ மூலம் வீழ்த்தினார். நிசாங்கா ரிவ்யூ எடுத்தும் பயனில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பும்ரா விக்கெட்டை கைப்பற்றினார்.
இதன்மூலம் 48 வருட உலகக் கோப்பை வரலாற்றில், முதன்முறையாக ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இதற்கு முன் எந்த பந்து வீச்சாளரும் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (88), சுப்மன் கில் (92) ஆகியோர் சதத்தை தவறவிட்டனர்.
- ஜாகீர் கான், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்
- பும்ரா 33 விக்கெட்டுகளும், கும்ப்ளே 31 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா 357 ரன்கள் குவித்த நிலையில், இலங்கை 55 ரன்னில் சுருண்டது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த தொடரின் தொடக்க ஆட்டங்களில் அவர் களம் இறக்கப்படவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கினார். அந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளும், தற்போது ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை முகமது சமி 45 விக்கெட்டுகள் வீழ்த்தி, உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் ஜாகீர் கான் 44 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் இடத்தில் இருந்தார். தற்போது அவரை சமி பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகள், பும்ரா 33 விக்கெட்டுகள், கும்ப்ளே 31 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்துவது சமிக்கு இது 3-வது முறையாகும். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையில் ஸ்டார்க் உடன் இணைந்துள்ளார்.
இந்திய அணிக்காக அதிக முறை (4) ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 3 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
ஒரே உலகக் கோப்பையில் அதிக முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அப்ரிடி (2011), ஸ்டார்க் (2019) ஆகியோர் 4 முறை 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
சமி (2019), ஆடம் ஜம்பா (2023), முகமது சமி (2023) ஆகியோர் 3 முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளனர்.
- உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
- இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இன்று இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடிய இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் முகமது சமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை முகமது சமி பெற்று இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ஜாகீர் கான், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 44 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
அந்த வகையில், இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.
- இலங்கை அணியின் மேத்யூஸ் மட்டும் 12 ரன்களை எடுத்தார்.
- இந்திய வீரர் முகமது சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. பேட்டிங்கில் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 92 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 82 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார்.

கே.எல். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை சார்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், துஷமந்தா சமீரா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது. இந்திய வீரர் பும்ரா வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார். இதே போன்று சிராஜ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய இந்திய வீரர்களால் இலங்கை அணி 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இலங்கை அணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டும் பொறுமையாக ஆடினார். இவரும் 12 ரன்களில் அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 19.4 ஓவர்களில் வெறும் 55 ரன்களை விட்டுக் கொடுத்து இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது.
போட்டி முடிவில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.






