search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சமி, சிராஜ்-இன் தரமான சம்பவம்.. இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
    X

    சமி, சிராஜ்-இன் தரமான சம்பவம்.. இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

    • இலங்கை அணியின் மேத்யூஸ் மட்டும் 12 ரன்களை எடுத்தார்.
    • இந்திய வீரர் முகமது சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. பேட்டிங்கில் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

    இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 92 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 82 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார்.

    கே.எல். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை சார்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், துஷமந்தா சமீரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது. இந்திய வீரர் பும்ரா வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார். இதே போன்று சிராஜ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய இந்திய வீரர்களால் இலங்கை அணி 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இலங்கை அணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டும் பொறுமையாக ஆடினார். இவரும் 12 ரன்களில் அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 19.4 ஓவர்களில் வெறும் 55 ரன்களை விட்டுக் கொடுத்து இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது.

    போட்டி முடிவில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×