என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை அருகே பெயிண்டர் கொலையில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை காந்திதிருநல்லூரை சேர்ந்தவர் அஜித் என்ற கட்ட அஜித் (வயது 22). பெயிண்டரான இவர் கடந்த 15-ந்தேதி இரவு சாணரப்பேட்டை சுடுகாடு அருகே மர்ம கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

    போலீசாரின் விசாரணையில் கடந்த 2017-ம் ஆண்டு முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ஞானசேகர், காந்தி திருநல்லூர் சதீஷ், சண்முகாபுரம் ஜெரால்டு ஆகிய ரவுடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது ஏற்கனவே கொலை செய்யப்பட்ட சதீஷ் என்பவர் அஜித்தின் உறவினர் ஆவார்.

    அவரை கொலை செய்தவர்களை பழிவாங்குவேன் என்று அஜித் தனது நண்பர்கள் சிலரிடம் கூறியுள்ளார். அது 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய சாணரப்பேட்டை சூர்யா, சண்முகாபுரம் நந்தகுமார் ஆகியோருக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரும் அஜித் தங்களை கொல்லும் முன்பு தாங்கள் முந்திக்கொள்வது என்று திட்டமிட்டனர். அதன்படி தங்களது நண்பர்களான 16 வயது சிறுவன் மற்றும் கவுண்டன்பாளையம் சதீஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து அஜித்தை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுவன் உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
    திருபுவனை அருகே தனியார் நிறுவன காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    திருபுவனை:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே குமாரக்குப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 52). இவர் திருபுவனை அருகே கலித்தீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனியார் நிறுவனத்தில் வேலையில் இருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45) என்பவர் அந்த நிறுவனத்தின் வாயில் கதவை திறக்குமாறு சத்தம் போட்டார். உடனே தட்சணாமூர்த்தி கதவை திறந்து வெங்கடேசனிடம் விவரத்தை கேட்டார். அதற்கு அவர், உங்கள் முதலாளியை பார்க்கவேண்டும் என்று தெரிவித்தார். தீபாவளி விடுமுறை என்பதால் அவர் வரவில்லை என்று தட்சணாமூர்த்தி கூறினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மற்றும் அவருடன் சென்றவரும் சேர்ந்து தட்சணாமூர்த்தியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.

    இந்த தாக்குதல் குறித்து திருபுவனை போலீசில் தட்சணாமூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் அவருடன் வந்தவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ரேஷன் அட்டைதாரர் களுக்கு வழங்க இருந்த அரிசி மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் மக்கள் வேதனை அடைந்தனர்.
    பாகூர்:

    புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக மத்திய அரசு சார்பில் மாதம் தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இரண்டு மாதங்களுக்கு சேர்த்து நபர் ஒருவருக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் கிராம மக்களுக்கு வழங்குவதற்காக, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அரிசி மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், பள்ளியின் சுவர்களின் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அங்கு, அடுக்கி வைக்கப்பட்டுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன. மேலும், அரிசி மூட்டைகளின் மீது பூஞ்சைகள் வளர்ந்துள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அங்கு இருப்பில் உள்ள மூட்டைகள் சேதமடைந்து வருகிறது.

    நேற்று அரிசி வாங்குவதற்காக பள்ளிக்கூடத்துக்கு கிராம மக்கள் சென்றனர். ஆனால் துர்நாற்றம் மற்றும் பூஞ்சைகள் வளர்ந்த அரிசியை அவர்கள் வாங்காமல் திரும்பினர். இது பற்றி குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துறை அதிகாரிகள் குருவிநத்தம் பள்ளிக்கு வந்து மழை நீரால் நனைந்து சேதமடைந்த அரிசி மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், சேதமான 33 மூட்டைகள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.

    மழையில் நனைந்து அரிசி மூட்டைகள் சேதமடைந்தது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. எனவே பள்ளிகளில் இருப்பு வைத்துள்ள அரிசி மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    காரைக்காலில் கடந்த 10 மாதமாக மூடி கிடைக்கும் கான்பெட் பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறக்க வலியுறுத்தி கான்பெட் ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்காலில் கடந்த 10 மாதமாக மூடி கிடைக்கும் கான்பெட் (புதுச்சேரி மாநில கூட்டுறவு நுகர்வோர் இணையம்) பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறக்க வலியுறுத்தி கான்பெட் ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 5-ம் நாளான நேற்று அரை நிர்வாண நூதன போராட்டத்தை நடத்தினர்.

    போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், துணைத் தலைவர் அய்யப்பன், காரைக்கால் நகராட்சி ஊழியர் சங்க தலைவர் சண்முகராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
    திருக்கனூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே சுத்துக்கேணி காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மண்ணப்பன் (வயது 72). கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து மகனுடன் முதியவர் வசித்து வந்தார். இந்த நிலையில் மகன் தனிக்குடித்தனம் சென்றதால் மண்ணப்பன் தனிமையில் இருந்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    புதுவையில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உதவித்தொகை பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது. அதனை திருப்பி வசூலிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு சமூக நலத்துறை மூலம் முதியோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு கிராமத்தில் தகுதி இல்லாத சிலர் உதவித்தொகை பெறுவதாக கவர்னர் மாளிகைக்கு சமூக வலைதளத்தின் மூலம் புகார்கள் வந்தன. இது தொடர்பாக சமூக நலத்துறை செயலாளர் உதயகுமார் மற்றும் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த ஊரில் கணவரால் கைவிடப்பட்டோர் பட்டியலில் உள்ள 60 சதவீதம் பேர் முறைகேடாக உதவித்தொகையை நீண்ட காலமாக பெற்று வந்தது தெரியவந்தது. அவர்கள் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற்றுள்ளனர். எனவே முறைகேடாக அவர்கள் பெற்ற தொகையை திருப்பி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முறைகேடாக உதவித்தொகை பெற்றவர்கள் குறித்த பெயர் விவரத்துடன் புகார் வந்ததால் அவர்கள் குறித்து ஆய்வு செய்ய சுலபமாக இருந்தது. இதன் மூலம் அரசின் பண இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சட்ட விரோத செயல்கள் சமூகத்தில் முக்கிய நபர்கள் வாயிலாகத்தான் நடந்து வருகிறது.

    எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உதவித்தொகை பெறும் பெண்களின் பட்டியலை ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கவர்னரின் இந்த அதிரடி நடவடிக்கை முறைகேடாக உதவித்தொகை பெறுபவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.
    காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா தலைமையில் திருநள்ளாறு கோவிலில் முதல் கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட், கோவில் நிர்வாக அதிகாரியும், மாவட்ட துணை கலெக்டருமான ஆதர்ஷ், துணை கலெக்டர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    தற்போது கொரோனா காலம் என்பதால், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் மற்றும் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் படியும் சனிப்பெயர்ச்சி விழாவை நடத்துவது, அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.

    விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கொரோனா காலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
    கரையாம்புத்தூரில் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    கரையாம்புத்தூர் சொர்ணாவூர் ரோடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55) கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். ஜெயபால் வழக்கமாக மதுகுடிக்க சென்றால் போதை அதிகமாகி மதுக்கடை அருகே படுத்து தூங்கி விடுவாராம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயபால் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை, அவரது மகன்கள் தேடிய நிலையில் ஜெயபால் அங்குள்ள பங்காரு வாய்க்கால் தண்ணீரில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து ஜெயபால் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
    புதுவையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 1-1-2021ஐ தகுதி பெறும் தேதியாக கொண்டு புதுச்சேரி ஒன்றிய ஆட்சிபரப்பில் சட்டமன்ற தொகுதிகளில் 2021-ம் ஆண்டிற்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணியினை நடத்துமாறு பணித்துள்ளது. இதன்படி இன்று (திங்கட்கிழமை) ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. உரிமை கோரிக்கைகளை வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் இன்று முதல் டிசம்பர் 15-ந்தேதி வரை தாக்கல் செய்யலாம்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான வருகிற 28 மற்றும் 29-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். நீக்கல் மற்றும் சேர்த்தலுக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கான காலம் வருகிற ஜனவரி 5-ந்தேதியுடன் முடிவடைகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ந்தேதி வெளியிடப்படும்.

    பெயர் சேர்த்தல், ஆட்சேபனைகள், திருத்தங்கள் ஏதாவது இருப்பின் அதற்கான விண்ணப்பங்களை voterportal.eci.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். இது முற்றிலும் இலவசமான சேவையாகும். வாக்காளர்கள் அவரவர்களுக்குரிய வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் அலுவலகத்தில் விடுமுறை நாட்கள் நீங்கலாக இன்று முதல் டிசம்பர் 15-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் சாதாரண வசிப்பிடத்திற்கான சான்றாக தாய், தந்தையரின் வாக்காளர் அடையாள அட்டையின் நகல், பிறந்த தேதிக்கான ஆதாரத்தின் நகல் (பிறப்பு சான்றிதழ் அல்லது மாற்று சான்றிதழ்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும். விடுபட்ட மற்றும் புலம் பெயர்ந்த வாக்காளர்கள் நெருங்கிய உறவினர்களின் வாக்காளர் அடையாள அட்டையின் நகல், முன்பு குடியிருந்த தொகுதியில் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையின் நகல், பிறந்த தேதிக்கான ஆதாரத்தின் நகல், விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது அவரது பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர் பெயரிலோ உள்ள வங்கி, கிசான், அஞ்சல் அலுவலக நடப்பு கணக்கு கையேடு, உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வருமான வரி விதிப்பு ஆணை, குடிநீர், தொலைபேசி, மின்சாரம், கியாஸ் இணைப்பு போன்றவற்றின் சமீபத்திய ரசீது அல்லது விண்ணப்பதாரரின் பெயருக்கு அந்தமுகவரியில் வந்த தபால் துறையின் தபால் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

    இந்திய குடியுரிமை சட்டப்படி ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து வசிப்பவருடைய பெயர் மட்டுமே அந்த பகுதியில் சேர்க்கப்படும். இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் அவர்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தாலும்கூட அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். ஆகையால் வாக்காளர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாறும்போது அந்த பகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் முன்னர் வசித்த இருப்பிடத்தின் முகவரியை தெரிவித்து தற்போது வசிக்கும் புதிய பகுதியில் பெயரை சேர்க்க தவறாமல் விண்ணப்பிக்கவேண்டும்.

    1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 31-வது பிரிவின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் பொய்யான, தவறான தகவல் தருவது ஒருவருட சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கக்கூடிய குற்றமாகும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் சுர்பீர் சிங் கூறியுள்ளார்.
    அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி கூடுதல் நேரம் பட்டாசு வெடித்ததாக 30 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின்போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் இருக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க புதுவை அரசு அனுமதி அளித்திருந்தது. அதாவது காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணிவரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இருந்தபோதிலும் தீபாவளி தினமான நேற்று முன்தினம் பகல் நேரத்தில் மழை இல்லாமல் இதமான சூழல் நிலவியதால் காலை முதலே மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதற்கிடையே அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக புதுவை போலீசார் 30 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

    அதாவது பெரியகடை, ஒதியஞ்சாலை, காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையங்களில் தலா 4 வழக்குகளும், முத்தியால்பேட்டையில் 3 வழக்கும், கோரிமேடு, காலாப்பட்டு, வில்லியனூர், உருளையன்பேட்டை, ஏனாம், கிருமாம்பாக்கத்தில் தலா 2 வழக்குகளும், நெட்டப்பாக்கம், மேட்டுப்பாளையம், திருபுவனையில் தலா ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் தமிழக பகுதியான குச்சிப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 25) என்பவர் அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மடுகரை மந்தைவெளி திடலில் பட்டாசு வெடித்துள்ளார். அவரை மடுகரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    புதுச்சேரி:

    புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தீபாவளி திருநாளான நேற்று முன்தினம் பகலில் மழை ஏதும் இல்லை. இதனால் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடினார்கள். இருந்தபோதிலும் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் மழைபெய்ய தொடங்கியது.

    இந்த மழை நேற்று காலை வரை விட்டுவிட்டு பெய்தது. அவ்வப்போது பலத்த மழையாக கொட்டியது. தொடர் மழை காரணமாக தாழ்வான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பகலில் வெயில் முகம் காட்டாத வகையில் வானில் மேகங்கள் திரண்டு இருந்தன. மாலை வரை இடைவெளி விட்டு மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்தனர். இருசக்கர வாகனங்களில் வெளியில் வந்தவர்கள் மழைக்கோட்டு அணிந்திருந்ததை காண முடிந்தது. பலர் மழையில் நனைந்தபடி சென்றனர். மழை காரணமாக பகலிலும் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

    அதே நேரத்தில் புதுவைக்கு வார இறுதியில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. கடற்கரை, ஒயிட் டவுண் பகுதியில் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் சென்றதை காண முடிந்தது.

    தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவிலை. இதனால் தேங்காய்திட்டு துறைமுகத்தில் விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
    தட்டாஞ்சாவடி அருகே விபத்தில் கார் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூலக்குளம்:

    புதுவை மேட்டுபாளையம் அருகே உள்ள காந்தி திருநல்லூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது 22). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். தட்டாஞ்சாவடி வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே சென்றபோது எதிரில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×