search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    புதுவை சட்டமன்ற தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

    புதுவையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 1-1-2021ஐ தகுதி பெறும் தேதியாக கொண்டு புதுச்சேரி ஒன்றிய ஆட்சிபரப்பில் சட்டமன்ற தொகுதிகளில் 2021-ம் ஆண்டிற்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணியினை நடத்துமாறு பணித்துள்ளது. இதன்படி இன்று (திங்கட்கிழமை) ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. உரிமை கோரிக்கைகளை வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் இன்று முதல் டிசம்பர் 15-ந்தேதி வரை தாக்கல் செய்யலாம்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான வருகிற 28 மற்றும் 29-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். நீக்கல் மற்றும் சேர்த்தலுக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கான காலம் வருகிற ஜனவரி 5-ந்தேதியுடன் முடிவடைகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ந்தேதி வெளியிடப்படும்.

    பெயர் சேர்த்தல், ஆட்சேபனைகள், திருத்தங்கள் ஏதாவது இருப்பின் அதற்கான விண்ணப்பங்களை voterportal.eci.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். இது முற்றிலும் இலவசமான சேவையாகும். வாக்காளர்கள் அவரவர்களுக்குரிய வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் அலுவலகத்தில் விடுமுறை நாட்கள் நீங்கலாக இன்று முதல் டிசம்பர் 15-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் சாதாரண வசிப்பிடத்திற்கான சான்றாக தாய், தந்தையரின் வாக்காளர் அடையாள அட்டையின் நகல், பிறந்த தேதிக்கான ஆதாரத்தின் நகல் (பிறப்பு சான்றிதழ் அல்லது மாற்று சான்றிதழ்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும். விடுபட்ட மற்றும் புலம் பெயர்ந்த வாக்காளர்கள் நெருங்கிய உறவினர்களின் வாக்காளர் அடையாள அட்டையின் நகல், முன்பு குடியிருந்த தொகுதியில் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையின் நகல், பிறந்த தேதிக்கான ஆதாரத்தின் நகல், விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது அவரது பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர் பெயரிலோ உள்ள வங்கி, கிசான், அஞ்சல் அலுவலக நடப்பு கணக்கு கையேடு, உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வருமான வரி விதிப்பு ஆணை, குடிநீர், தொலைபேசி, மின்சாரம், கியாஸ் இணைப்பு போன்றவற்றின் சமீபத்திய ரசீது அல்லது விண்ணப்பதாரரின் பெயருக்கு அந்தமுகவரியில் வந்த தபால் துறையின் தபால் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

    இந்திய குடியுரிமை சட்டப்படி ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து வசிப்பவருடைய பெயர் மட்டுமே அந்த பகுதியில் சேர்க்கப்படும். இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் அவர்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தாலும்கூட அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். ஆகையால் வாக்காளர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாறும்போது அந்த பகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் முன்னர் வசித்த இருப்பிடத்தின் முகவரியை தெரிவித்து தற்போது வசிக்கும் புதிய பகுதியில் பெயரை சேர்க்க தவறாமல் விண்ணப்பிக்கவேண்டும்.

    1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 31-வது பிரிவின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் பொய்யான, தவறான தகவல் தருவது ஒருவருட சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கக்கூடிய குற்றமாகும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் சுர்பீர் சிங் கூறியுள்ளார்.
    Next Story
    ×