search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உதவித்தொகையில் முறைகேடு- திருப்பி வசூலிக்க கவர்னர் உத்தரவு

    புதுவையில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உதவித்தொகை பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது. அதனை திருப்பி வசூலிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு சமூக நலத்துறை மூலம் முதியோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு கிராமத்தில் தகுதி இல்லாத சிலர் உதவித்தொகை பெறுவதாக கவர்னர் மாளிகைக்கு சமூக வலைதளத்தின் மூலம் புகார்கள் வந்தன. இது தொடர்பாக சமூக நலத்துறை செயலாளர் உதயகுமார் மற்றும் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த ஊரில் கணவரால் கைவிடப்பட்டோர் பட்டியலில் உள்ள 60 சதவீதம் பேர் முறைகேடாக உதவித்தொகையை நீண்ட காலமாக பெற்று வந்தது தெரியவந்தது. அவர்கள் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற்றுள்ளனர். எனவே முறைகேடாக அவர்கள் பெற்ற தொகையை திருப்பி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முறைகேடாக உதவித்தொகை பெற்றவர்கள் குறித்த பெயர் விவரத்துடன் புகார் வந்ததால் அவர்கள் குறித்து ஆய்வு செய்ய சுலபமாக இருந்தது. இதன் மூலம் அரசின் பண இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சட்ட விரோத செயல்கள் சமூகத்தில் முக்கிய நபர்கள் வாயிலாகத்தான் நடந்து வருகிறது.

    எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உதவித்தொகை பெறும் பெண்களின் பட்டியலை ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கவர்னரின் இந்த அதிரடி நடவடிக்கை முறைகேடாக உதவித்தொகை பெறுபவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×