என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரை மர்மநபர்கள் கொலை செய்ய முயன்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் ஏ.கே.டி. ஆறுமுகம். புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார்.

    இவர் இரவு தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில் சென்று கொண்டிருந்த போது 10-க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, அவரது கார் மீது சரமாரியாக கற்களை வீசினர்.

    இதில் காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் முற்றிலுமாக சேதமடைந்தது. பின்னர் திடீரென்று 2 பேர் ஆயுதங்களை கொண்டு முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர், வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி அந்த கும்பலிடம் இருந்து தப்பி வீட்டிற்கு காரை ஓட்டி வந்தார்

    இது குறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் தெற்கு பகுதி எஸ்.பி.யோகேஸ்வரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஏ.கே.டி.ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்- அமைச்சர் நாராயணசாமி, ஏ.கே.டி. ஆறுமுகம் வீட்டிற்கு விரைந்து வந்து விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளை விரைவில் பிடிக்குமாறு போலீசாருக்கு நாராயணசாமி உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
    வில்லியனூர் அருகே திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). தனியார் நிறுவன ஊழியர். இவரும் மண்ணாடிப்பட்டு பகுதியை சேர்ந்த கவிதா(22) என்ற பெண்ணும் கடந்த 20 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் புதுமண தம்பதி உறவினர் தியாகராஜன் வீட்டில் வசித்து வந்தனர். அவர்களை தனிக்குடித்தனம் செல்லுமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தினர். ஆனால் இதில் கிருஷ்ணமூர்த்திக்கு விருப்பமில்லை.

    இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்து ஏற்கனவே புதுமண தம்பதிக்காக கரிக்கலாம்பாக்கம் - மடுகரை சாலையில் பிடித்து இருந்த வாடகை வீட்டில் பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    அரசு துறைகளுக்கு 400 பொருட்களை வாங்கியது தொடர்பான கோப்பு கவர்னர் மாளிகைக்கு வந்தது. அவசர தேவையில்லாத காலத்தில் இந்த பொருட்களை சிங்கிள் டெண்டர் (ஒரே ஒருவர் மட்டும் டெண்டரில் கலந்துகொண்டது) முறையில் வாங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

    இதற்கான கோப்பு தலைமை செயலாளருக்கோ, நிதித்துறைக்கோ அனுப்பப்படவில்லை. அந்த கோப்பு துறை அமைச்சரின் ஒப்புதல் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இது விதிமுறை மீறல் ஆகும்.

    இதற்கு கவர்னரின் அலுவலகம் ஒப்புதல் அளிக்காது. அந்த கோப்பினை மத்திய உள்துறைக்கு அனுப்ப உள்ளேன். இதுதொடர்பாக மூத்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும். மேலும் துறை ரீதியான விசாரணையும் நடத்தப்படும்.

    எனவே அதிகாரிகள் தங்கள் பணியின்போது கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவை உங்கள் எதிர்காலம் தொடர்பாக கேள்வியை எழுப்பிவிடும். அதிகாரிகள் பயமின்றி யாருக்கும் சாதகமில்லாமல் செயல்படவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை ராசுஉடையார்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 22). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆனஸ்ட்ராஜ் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ஆனஸ்ட்ராஜ் தற்கொலைக்கு அந்த பெண்தான் காரணம், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆனஸ்ட்ராஜின் உறவினர்கள் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசாருடன் அவர்கள் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    ஒருகட்டத்தில் அவர்கள் அண்ணா சிலை அருகே திடீர் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். அவர்களுடன் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, பெரியசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மாணவர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கான கோப்பு கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் கிரண்பெடி அதற்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசுக்கு அந்த கோப்பை அனுப்பி வைத்தார்.

    எனவே கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும், 10 சதவீத இட ஒதுக்கீடு கேட்டும் மாணவர் காங்கிரசார் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை நேருவீதி காமராஜர் சிலை அருகே மாணவர் காங்கிரசார் ஒன்று கூடினர். அங்கிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலத்திற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் தமிழழகன், சண்முகம், டேனியல், பொதுச்செயலாளர்கள் பாரதி, கார்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி நேருவீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி தீப்பந்தங்கள் ஏந்தி ஊர்வலமாக செல்லக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து அவர்கள் ஊர்வலத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    புதுச்சேரி அருகே ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழகம், புதுச்சேரியில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று நூதன போராட்டம் நடந்தது.

    புதுவை அண்ணா சிலை அருகே இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட கொலையாளிகள் 7 பேரின் படம்கொண்ட முகக்கவசத்தை அணிந்து சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நிற்பதுபோன்ற அமைப்பினை உருவாக்கி இருந்தனர்.

    இந்த போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தமிழக கவர்னர் அனுமதி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
    புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தக்கோரி கல்வித்துறை அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டனர்.
    புதுச்சேரி:

    புதிய கல்விக்கொள்கையை புதுவை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. இதை வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அந்த கட்சி அறிவித்திருந்தது. இதன்படி அவர்கள் புதுவை சுதேசி மில் அருகே கூடினார்கள். அங்கிருந்து கல்வித்துறை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு பாரதீய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

    ஊர்வலத்தை கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார். ஊர்வலத்தில் மாநில பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் பொதுச்செயலாளர்கள் சரவணகுமார், சக்தி கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, நெல்லித்தோப்பு சந்திப்பு, இந்திராகாந்தி சிலை வழியாக கல்வித்துறை அலுவலகத்தை அடைந்தது. அங்கு பாரதீய ஜனதா கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருபுவனை:

    திருபுவனையை அடுத்த நல்லூர் பேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்மணி (வயது 47). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 41). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்தார். இந்தநிலையில் அருள்மணி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் அவரை மனைவி வீரம்மாள் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று முன்தினமும் அருள்மணி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பல முறை கண்டித்தும் கணவர் திருந்தாததால் மனமுடைந்த வீரம்மாள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கியபின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து அருள்மணி திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவரின் குடிப்பழக்கத்தால் மனைவியின் விபரீத முடிவு குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
    புதுச்சேரியில் இன்று 69 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,533 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89.58 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 89,58,484 ஆக உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 585 பேர் மரணம்  அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,31,578 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில  தினங்களாக 40 ஆயிரத்திற்கும் கீழே இருந்த புதிய பாதிப்புகள், இன்று 45 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83,83,603 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 48,493 பேர் குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,533ஆக உயர்ந்துள்ளது.
    புதுவையில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை உடையார்தோட்டம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் நாராயணன் என்ற விஜய் (வயது 22). தச்சு தொழிலாளி. இவரும் கடலூரை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.

    புதுமண தம்பதிகள் புதுவையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபிநயாவை அவரது பெற்றோர் சீர் கொடுத்து அழைத்து சென்றுவிட்டனர்.

    இந்தநிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் தனது தாய் மாலாவை ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டுவிட்டு வேலைக்கு செல்வதாக நாராயணன் கூறியுள்ளார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் நேராக வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்று தெரியவில்லை. 

    இதுகுறித்து அவரது தாய் மாலா கொடுத்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுவை காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு சாலையில் தேங்கிய மழைநீரில் வலைவீசி மீன் பிடிக்கும் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
    புதுவை:

    புதுவை காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக அங்கு உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி பொதுமக்கள் செல்ல சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனுமில்லை. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சாலையில் தேங்கிய மழைநீரில் வலைவீசி மீன் பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீன்பிடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாலையை சீரமைக்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.
    வெளி மாநிலத்திற்கு செல்வதற்காக சிறப்பு பெர்மிட் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், போக்குவரத்து சோதனை சாவடிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சேவை இணைய தளம் மூலமாக வழங்கப்பட உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து துறை சம்பந்தமான அனைத்து சேவைகளும் கணினிமயமாக்கப்பட்டு இணைய தளம் வழியாக அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய தகவல் மையம் உருவாக்கிய வாகன் 4.0 மற்றும் சாரதி 4.0 என்ற மென்பொருட்கள் மூலம் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி பெர்மிட் பெற்ற பயணிகள் ஒப்பந்த வாகனங்கள், வெளி மாநிலத்திற்கு செல்வதற்காக சிறப்பு பெர்மிட் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், போக்குவரத்து சோதனை சாவடிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சேவை இணைய தளம் மூலமாக வழங்கப்பட உள்ளது.

    இதனால் வாகனம் ஒட்டுபவர்கள் தங்கள் மொபைல் போனில் இருந்தோ அல்லது வீட்டில் இருந்து கணினி மூலமாகவோ தாங்களாகவே தங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை செலுத்தி தனி பெர்மிட் பெற முடியும். இதனால் வாகன ஓட்டிகள் சோதனைச்சாவடிக்கோ, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. தனி பெர்மிட் போல வெளியூரில் இருந்து புதுவைக்கு வரும் வாகனங்களும் இணைய தளம் மூலமாக தற்காலிக பெர்மிட் விரைவில் வழங்கப்பட உள்ளது. https://parivahan.gov.in/parivahan என்ற இணைய தளம் வாயிலாக இந்த தனி பெர்மிட் பெற முடியும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    ×