என் மலர்
புதுச்சேரி
மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் கடந்த 8-ந் தேதி முதல் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
புதுவை அண்ணாசிலை பின்புறம் மறைமலை அடிகள் சாலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இரவு, பகலாக போராட்ட களத்திலேயே உணவு அருந்தியும், தூங்கியும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 4 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
துணை ராணுவம், போலீசாரின் கெடுபிடியாலும், நகரின் பிரதான சாலையில் போராட்டம் நடந்ததாலும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து நெரிசல் உருவானது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தை தொடர வேண்டாம் என காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முடிவு செய்தனர்.
பொங்கலுக்கு பிறகு மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் ஒரு நாள் முன்னதாகவே நேற்று இரவு போராட்டம் நிறைவு செய்யப்பட்டது. அப்போது பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்தார்.
இதன்படி வருகிற 22-ந் தேதி கையெழுத்து இயக்கம், 29-ந் தேதி அனைத்து தொகுதியிலும் கண்டன ஆர்ப்பாட்டம், அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி உண்ணாவிரதமும், அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15 முதல் 20-ந் தேதிக்குள் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.
புதுவை மறைமலையடிகள் சாலையில் நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் தொடங்கிய தர்ணா போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.
போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. போராட்டத்தில் பங்கேற்க வில்லை.
போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 2-ம் நாள் போராட்டம் நேற்று இரவு 9 மணிக்கு முடிந்தது.
முடிவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
போராட்ட களத்தை சுற்றி ராணுவ வீரர்களை கிரண்பேடி குவித்துள்ளார். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். மக்களுக்காக உயிரை கொடுக்க கூட தயாராகி விட்டேன். கிரண்பேடிக்கு தான் பயம். அதனால் தான் கவர்னர் மாளிகையை சுற்றி ராணுவத்தை குவித்துள்ளார்.
நீங்கள் பாதுகாப்பு வைத்து கொள்ளுங்கள். ஆனால் மக்கள் அதிகமாக வரும் மணக்குள விநாயகர் கோவில், தலைமை தபால் நிலையம் மற்றும் சட்டமன்றத்திற்கு தடை போட கூடாது என போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளேன். இதனை மீறினால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பேன்.
போராட்டத்துக்கு தி.மு.க.வினர் ஆதரவை கேட்டுள்ளேன். கவர்னர் மாளிகைக்குள் ஏன் நுழைய கூடாது என சிலர் கேட்கின்றனர். அராஜகத்தின் மீது நம்பிக்கை இல்லை. காந்திய வழியிலேயே போராட்டத்தை நடத்துவோம்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
நேற்று இரவு உணவாக இட்லி மற்றும் பால் வழங்கப்பட்டது. முதல்- அமைச்சர் நாராயணசாமி 2-வது நாளாக போராட்ட பந்தலில் படுத்து தூங்கினார். அவருடன் காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் 100 பேர் படுத்து தூங்கினார்கள்.
போராட்டம் 3-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்தது. நாராயணசாமியின் அழைப்பை ஏற்று தி.மு.க.வினர் இன்றைய போராட்டத்தில் பங்கேற்பார்களா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாளையுடன் (திங்கட்கிழமை) தர்ணாவை முடிக்க போராட்ட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கவர்னர் மாளிகையில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் போராட்டத்தை தொடரலாமா.? என்ற ஆலோசனையில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகவும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக்கூறி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நேற்றுமுன்தினம் காலையில் அண்ணாசிலை அருகே தர்ணா போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக நீட்டித்தப்போராட்டம் இரவிலும் நீடித்தது.
கொட்டும் மழையிலும் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சாலையில் படுத்து உறங்கினர். காங்கிரஸின் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று 3-ம் நாளாக காங்கிரசாரின் போராட்டம் தொடர்கிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் போராட்டக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சந்தை புதுகுப்பம், லிங்கா ரெட்டிபாளையம், சோரப்பட்டு, விநாயகம்பட்டு, செல்லிப்பட்டு, வாதானூர், மண்ணாடிப்பட்டு, காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளைப்பொன்னி, பொன்மணி உள்ளிட்ட நெல் ரகங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
இதுதவிர சங்கராபரணி ஆற்றங்கரையோரம் மற்றும் ஏரிக்கரை ஓரங்களில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களும் தண்ணீர் மூழ்கி நாசமடைந்தன. வயல்களில் தண்ணீர் வடிய ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால் நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, காராமணி பயிர்களும் நீரில் மூழ்கின. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
2016 சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமல் மாநிலம் முழுவதும் நாராயணசாமி பிரசாரம் செய்தார்.
தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்தனர். முதல்- அமைச்சர் பொறுப்பேற்ற நாராயணசாமி 6 மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போது நெல்லித் தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்தொகுதியில் நாராயணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்- அமைச்சராக தொடர்கிறார்.
புதுவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
நாராயணசாமிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்த ஜான்குமாருக்கு காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்தது.
இதில், அவர் வெற்றி பெற்று காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஜான்குமார் அதிருப்தியில் இருந்து வந்தார்.
கடந்த மாதம் புதுவை மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை, ஜான்குமார் சந்தித்து பேசினார். இதனால் அவர் கட்சி மாறப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து ஜான்குமார் வகித்து வந்த பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது சொந்த தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதியில் தனது மகன் ரிச்சர்ட் போட்டியிடுவார் என ஜான்குமார் அறிவித்துள்ளார்.
முதல்- அமைச்சர் நாராயணசாமி தொகுதியில் தனது மகன் போட்டியிடுவார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. அறிவித்திருப்பது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது வீட்டில் ஆதரவாளர்கள் கூட்டத்தில் மகன் ரிச்சர்டை அறிமுகம் செய்து ஜான்குமார் எம்எல்ஏ பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நெல்லித்தோப்பு தொகுதியில் செய்த பணிகளை மக்களிடம் கொண்டு சென்றதால் நான் புகுந்த வீடான காமராஜர் நகர் தொகுதியில் 18 நாட்களில் பிரசாரம் செய்து அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இதற்கு நெல்லித்தோப்பு தொகுதி நிர்வாகிகள்தான் காரணம்.
வரும் புதிய ஆட்சியில் உங்கள் விருப்பப்படி நான் அமைச்சராக வேண்டும். அதற்கு நமக்கு விசுவாசமான தொகுதிகள் தேவை. கடந்த தேர்தலில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற நான் காரணமாக இருந்தேன். 3 பேருக்கு உதவி செய்தேன். இதனால் எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், அவர்கள் விசுவாசமாக இல்லை. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் சொந்த தொகுதியான நெல்லித் தோப்பு, நான் போட்டியிட்டு வென்ற காமராஜர் நகர் தொகுதியில் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது.
நெல்லித்தோப்பு தொகுதியில் எனது ரத்தமான மகன் ரிச்சர்ட் தேர்தலில் போட்டியிடுவார். என்னைப்போலவே அவர் தொகுதியையும், தொகுதி மக்களையும் நன்றாக பார்த்துக்கொள்வார். நானும், அவருடன் இணைந்து தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். என் மகன் வெற்றிக்கு நீங்கள் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதல்- அமைச்சர் நாராயணசாமி தொகுதியில் தனது மகன் போட்டியிடுவார் என பகிரங்கமாக ஜான்குமார் அறிவித்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில் ஜான்குமார் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே கவர்னரை கண்டித்து நாராயணசாமி தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் போராட்டத்திலும் அவர் பங்கேற்று வருகிறார்.
சட்டமன்ற தேர்தலை முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் சந்திக்க உள்ள நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.






