search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி.

    கவர்னருக்கு எதிராக போராட்டம்- தி.மு.க.வுக்கு நாராயணசாமி அழைப்பு

    புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்- அமைச்சர் நாராயணசாமி திமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.

    புதுவை மறைமலையடிகள் சாலையில் நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் தொடங்கிய தர்ணா போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

    போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. போராட்டத்தில் பங்கேற்க வில்லை.

    போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 2-ம் நாள் போராட்டம் நேற்று இரவு 9 மணிக்கு முடிந்தது.

    முடிவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    போராட்ட களத்தை சுற்றி ராணுவ வீரர்களை கிரண்பேடி குவித்துள்ளார். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். மக்களுக்காக உயிரை கொடுக்க கூட தயாராகி விட்டேன். கிரண்பேடிக்கு தான் பயம். அதனால் தான் கவர்னர் மாளிகையை சுற்றி ராணுவத்தை குவித்துள்ளார்.

    நீங்கள் பாதுகாப்பு வைத்து கொள்ளுங்கள். ஆனால் மக்கள் அதிகமாக வரும் மணக்குள விநாயகர் கோவில், தலைமை தபால் நிலையம் மற்றும் சட்டமன்றத்திற்கு தடை போட கூடாது என போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளேன். இதனை மீறினால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பேன்.

    போராட்டத்துக்கு தி.மு.க.வினர் ஆதரவை கேட்டுள்ளேன். கவர்னர் மாளிகைக்குள் ஏன் நுழைய கூடாது என சிலர் கேட்கின்றனர். அராஜகத்தின் மீது நம்பிக்கை இல்லை. காந்திய வழியிலேயே போராட்டத்தை நடத்துவோம்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    நேற்று இரவு உணவாக இட்லி மற்றும் பால் வழங்கப்பட்டது. முதல்- அமைச்சர் நாராயணசாமி 2-வது நாளாக போராட்ட பந்தலில் படுத்து தூங்கினார். அவருடன் காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் 100 பேர் படுத்து தூங்கினார்கள்.

    போராட்டம் 3-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்தது. நாராயணசாமியின் அழைப்பை ஏற்று தி.மு.க.வினர் இன்றைய போராட்டத்தில் பங்கேற்பார்களா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    நாளையுடன் (திங்கட்கிழமை) தர்ணாவை முடிக்க போராட்ட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கவர்னர் மாளிகையில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் போராட்டத்தை தொடரலாமா.? என்ற ஆலோசனையில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×