என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரியாங்குப்பத்தில் கணவரை விட்டு பிரிந்த இளம்பெண் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    அரியாங்குப்பம் அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் ஸ்ரீதேவி. (வயது 25). இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கர்ப்பம் அடைந்த ஸ்ரீதேவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்தார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க கோபி வரவில்லை.

    இதனால் ஸ்ரீதேவி மன வருத்தத்தில் இருந்தார். இடையில் ஸ்ரீதேவிக்கும், கோபிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தையுடன் நிரந்தரமாக தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    ஆனாலும், கணவரை விட்டு பிரிந்ததால் ஸ்ரீதேவி விரக்தியுடன் இருந்து வந்தார். மேலும் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாத ஸ்ரீதேவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை (வி‌ஷம்) எடுத்து தின்று விட்டார். இதில் மயங்கி கிடந்த ஸ்ரீதேவியை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிச்சை பெற்று வந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் காத்தமுத்து கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவை சுகாதாரத் துறை அமைச்சரான மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி அரசு சார்பில் வழங்கிய வீடு, காரை திரும்ப ஒப்படைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட ஏனாம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ். இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். சட்டசபைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியலில் இருந்து புதுவை அரசியலில் இருந்து விலகி ஆந்திர அரசியலில் அவர் ஈடுபடப் போவதாக சமீபத்தில் பேச்சுகள் எழுந்தன.

    இந்தநிலையில் 25 ஆண்டுகள் மக்கள் பணியாற்றியதற்காக சிறந்த எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றதற்காக ஏனாமில் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டு மல்லாடி கிருஷ்ணாராவுக்கு விருது வழங்கும் விழா கடந்த 6-ந்தேதி ஏனாமில் நடந்தது.

    விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, கொறடா ஆனந்தராமன், ஆந்திர மாநில சபாநாயகர் தமேனி சீத்தாராம் மற்றும் ஆந்திர அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் பேசுகையில், ஏனாமில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். கவர்னர் கிரண்பெடி பல திட்டங்களை தடுக்க முயன்றபோதிலும் அதையெல்லாம் முறியடித்து ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை, விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு வசதிகளை நிறைவேற்றி இருக்கிறேன். பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் மக்களின் மனங்களில் இருப்பதைத் தான் விரும்புகிறேன். நான் ஆந்திர அரசியலுக்கு செல்ல இருப்பதாக கூறி வருகின்றனர். நான் எடுக்கும் முடிவு வருத்தமளிப்பதாகத் தான் இருக்கும். ஆனால் இதுதான் சரியான நேரம். வரும் சட்டமன்ற தேர்தலில் நானோ, எனது குடும்பத்தாரோ போட்டியிடமாட்டோம் என்றார்.

    கவர்னரை கண்டித்து புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்ட மல்லாடி கிருஷ்ணாராவ் பேசும்போது, புதுவை அரசியலில் இருந்து நான் விலகமாட்டேன். இங்கு என்னை தெலுங்கர் என்கிறார்கள். ஆந்திராவில் தமிழர் என்கிறார்கள். நான் எங்கும் போக மாட்டேன். கவர்னர் கிரண்பெடி புதுவையில் போட்டியிட தயார் என்றால் எந்த தொகுதியிலும் அவரை சந்திப்பேன் என்று சவால் விட்டார். மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவின் இந்த பேச்சு புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இத்தகைய சூழ்நிலையில் அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது ராஜினாமாவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இதுவரை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

    அந்த கடிதத்தை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டு கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பிவைத்தால்தான் முறைப்படி ராஜினாமா அமலுக்கு வரும். ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் தனக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட வீட்டினை கடந்த சில மாதங்களுக்கு முன்பே காலி செய்துவிட்டார். அதேபோல் அரசு சார்பில் வழங்கப்பட்ட காரையும் ஒப்படைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜினாமாவுக்கான காரணம் குறித்து அறிய மல்லாடி கிரு‌‌ஷ்ணராவை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. புதுவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா கட்சி வளைக்க முயற்சி எடுத்து வரும் நிலையில் அமைச்சர் பதவியை மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் ராஜினாமா செய்து இருப்பது புதுவை அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    அதிரடி அரசியல் செய்யும் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போதும் தனது எம்.எல்.ஏ.வை பதவியை ராஜினாமா செய்தார். அப்போதும் அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுவை, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் வரும் 18-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரைதான் திறந்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 4-ந்தேதி 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வாரத்தில் 6 நாட்களுக்கு காலை 10 முதல் மதியம் 1 மணி வரை இயங்குகிறது.

    இதில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய வகுப்புகள் திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமையும், 2, 4, 6, 8, 10, 12 செவ்வாய், வியாழக்கிழமை, சனிக்கிழமையும் இயங்குகின்றன.

    வருகைப்பதிவேடு இல்லாததால் விருப்பமுள்ள மாணவர்கள் சென்று பாடங்களில் சந்தேகங்களை கேட்டு வருகின்றனர். தற்போது 17-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 18-ந்தேதி முதல் முழு நேரமும் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தற்போது பள்ளி திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வருகிற 18-ந்தேதியில் இருந்து பள்ளிகள் அரைநாள் தான் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிகல்விதுறை இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், புதுவை, காரைக்காலில் உள்ள அரசு தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் வரும் 18-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரைதான் திறந்திருக்க வேண்டும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பள்ளிகள் இயங்கலாம். மறு உத்தரவு வரும் வரை இந்த நேரத்தை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலையில் மட்டும் பள்ளிகளை திறக்கலாம். மாணவர்கள் அதிகமாக இருந்து போதிய இடவசதி இல்லை எனில் ஏற்கனவே அறிவித்தபடி ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்தலாம்.

    மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கட்டாயமில்லை என்று குறிப்பிட்டனர்.
    பெரிய மார்க்கெட் கடைகள் புதிதாக கட்டப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை அண்ணா திடல் ரூ.12 கோடி செலவில் சிறுவிளையாட்டு அரங்கமாக மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

    விழாவுக்கு தலைமை தாங்கி அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    அண்ணா திடலை மேம்படுத்த சிவா எம்.எல்.ஏ. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். பல்வேறு சங்கடங்களுக்கு இடையே தற்போது இந்த பணிகள் நடக்கிறது. திட்டங்களை குறித்த காலத்தில் கொண்டுவர தலைமை செயல் அதிகாரி அருண் பாடுபட்டார். பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    சின்னையாபுரத்தில் அடுக்குமாடி கட்டிட பணியாணை வழங்கப்பட்டுள்ளது. நகரப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்கால கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும் உள்ளோம். பெரிய மார்க்கெட் கடைகள் புதிதாக கட்டப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருவதால் வாகன நிறுத்துமிடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறோம்.

    இவை எதிர்காலத்தில் பலன்தர தயாராக உள்ளது. நகர்ப்புறத்தில் உள்ள தெரு மின் விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற உள்ளோம். இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட உள்ளது. உப்பனாறு மேம்பாலத்தை கட்டி முடிக்க அழுத்தம் தரப்பட்டு உள்ளது. காமராஜர் மணிமண்டபம் ஒரு மாதத்தில் கட்டி முடிக்கப்படும். திருக்காஞ்சி மேம்பாலம் ஒரு வாரத்தில் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    வருவாய்த்துறை செயலாளரான அருண் தொடர்ந்து நமது கலெக்டராகவே உள்ளார். அண்ணா திடலை மேம்படுத்த தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தார். இந்த பகுதியில் 10 பள்ளிகளுக்கு விளையாட்டு திடல் இல்லாமல் உள்ளது.

    இதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இங்கு கடை வைத்திருப்பவர்களும் விளையாட்டு அரங்கம் கட்டிட பெருந்தன்மையோடு செயல்பட்டு உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் கூட இந்த திட்டம் வந்திருக்காது. திடீர் நகர் பகுதியிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட விரைவில் அடிக்கல் நாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
    புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும். இதன்மூலம் சுமார் 3.5 லட்சம் ரேசன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள்.
    விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் வேளாண்துறை சார்பில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியமாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி வரவேற்றுப் பேசினார்.

    விவசாயிகளுக்கு மானியத்தொகைக்கான காசோலையை வழங்கி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. தற்போது டெல்லியில் 2 கோடி விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த சட்டங்களை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைக்க கோரியுள்ளது.

    புதுவை மாநிலத்தில் நாங்கள் தொடர்ந்து விவசாயி களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் கோப்புக்குத்தான் கையெழுத்து போட்டேன். ஆனால் மத்திய அரசு இப்போது மின்துறையை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எத்தகைய இடையூறுகள் வந்தாலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தொடர்ந்து தருவோம்.

    மத்திய அரசு இப்போதுதான் பயிர்களுக்கான காப்பீடு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஆனால் நாம் ஏற்கனவே அதை கொண்டுவந்து விட்டோம். இதற்காக ரூ.6 கோடி காப்பீட்டு தொகையும் செலுத்தி உள்ளோம். விவசாய பயிர்களான நெல், கரும்பு, பருத்தி, மரவள்ளி, மணிலா என அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் நேரடி மானியம் வழங்கி வருகிறோம்.

    மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்குவதாக கூறியுள்ளது. ஆனால் நாம் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்குகிறோம். பட்ஜெட்டில் 31 பக்கங்கள் விவசாயத்துக்காகத்தான் ஒதுக்கியுள்ளோம். வங்கிகளுடன் இணைந்து ரூ.3 ஆயிரத்து 100 கோடிக்கு விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றுகிறோம்.

    புதுவையில் வீசிய புயல்களால் கனமழை பெய்தது. இதனால் ரூ.400 கோடிக்கு சேதம் ஏற்பட்டது. மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி வழங்கவேண்டும் என்று நான் கடிதம் எழுதினேன். ஆனால் கவர்னர் கிரண்பெடி இங்கு சேதம் ஏற்படவில்லை என்கிறார். புதுவை மாநிலத்தை முன்னேற்ற வந்தவரா இவர்?

    இவர் மக்களுக்குத்தான் நன்மை செய்யவேண்டும். அதைவிடுத்து மத்திய அரசுக்கு வேலை செய்யக் கூடாது. மக்கள் நல திட்டங்களை தடுத்து நிறுத்துவதையே இவர் செய்கிறார். கேட்காமலேயே திட்டங்களை கொடுக்கும் எங்களுக்கு விவசாயிகள் உறுதுணையாக இருக்கவேண்டும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

    விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், அரசு செயலாளர் அன்பரசு ஆகியோருக்கு நெல், கரும்பு, எள், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட தானிய மாலை அணிவிக்கப்பட்டது.

    டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    நெட்டப்பாக்கத்தில் குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெட்டப்பாக்கம்:

    நெட்டப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் கலைவாணன் (வயது 27). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு ஊர் சுற்றிவந்தார். 

    இதனை அவரது தாய் கன்னியம்மாள் கண்டித்தார். இதனால் மனமுடைந்த கலைவாணன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுவையில் மாஸ்டர் படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு ரசிகர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.

    புதுச்சேரி:

    நடிகர் விஜய் நடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

    புதுவை நகரில் சண்முகா, மால் மற்றும் அட்லாப்ஸ் திரையரங்குகளில் மட்டும் மாஸ்டர் படம் வெளியானது. ஆனால், ரசிகர்களுக்கு முன்னரே டிக்கெட் வழங்கப்படவில்லை.

    ஆன்லைன் மூலமும் டிக்கெட் பதிவு செய்யப் படவில்லை. இதனால் மாஸ்டர் வெளியான தியேட்டர் முன்பு நேற்று இரவு ரசிகர்கள் திரண்டு இருந்தனர். மேலும், மாஸ்டர் வெளியான திரையரங்குகள் தோறும் ரசிகர்கள் அலைந்து திரிந்தனர்.

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரசிகர்கள் டிக்கெட் வழங்காததை கண்டித்தும், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்காததை கண்டித்தும் காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கம் முன்பு அதிகாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.

    ஒரு திரையரங்கில் மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்தது. அங்கும் கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத டிக்கெட் மட்டுமே கொடுக்கப்பட்டதால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    புதுவை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வழக்கமாக வைக்கப்படும் பேனர்கள், கட்அவுட்டுகள் இல்லை.

    ஆனால், நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கூடுவதை தடுத்ததால் வழக்கமாக அலைமோதும் கூட்டமில்லை.

    சண்முகா திரையரங்கில் மட்டும் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் பொங்கல் விருந்தாக படம் அமைந்துள்ளதாக மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    புதுவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கொண்டு வந்த 4 மினிலாரிகள், ஒரு ஆட்டோ அதிகாரிகளிடம் சிக்கியது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 50 மைக்ரானுக்கு குறைவாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக நகராட்சி அலுவலகத்திற்கு புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது 100 அடி ரோட்டில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பண்டல், பண்டலாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவை புதுவையில் இருந்து தமிழகம், கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 122 பண்டல்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து அங்கேயே வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம், நாங்கள் வந்து சோதனை செய்யும் வரை வேறு எங்கும் அந்த பிளாஸ்டிக் பண்டல்களை கொண்டு செல்லக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    அப்போது அங்கு மேலும் 4 மினி லாரிகள், ஒரு ஆட்டோவில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இதனை பார்த்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து உழவர்கரை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவற்றை பாதுகாப்புடன் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அதில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

    இது குறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உழவர்கரை நகராட்சி, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்று சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் யாருக்கு சொந்தமானது, எங்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

    புதுவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் கடந்த 8-ந்தேதி முதல் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

    புதுவை அண்ணாசிலை பின்புறம் மறைமலை அடிகள் சாலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இரவு, பகலாக போராட்ட களத்திலேயே உணவு அருந்தியும், தூங்கியும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 4 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

    துணை ராணுவம், போலீசாரின் கெடுபிடியாலும், நகரின் பிரதான சாலையில் போராட்டம் நடந்ததாலும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் உருவானது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தை தொடர வேண்டாம் என காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முடிவு செய்தனர்.

    பொங்கலுக்கு பிறகு மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் ஒரு நாள் முன்னதாகவே நேற்று இரவு போராட்டம் நிறைவு செய்யப்பட்டது. அப்போது பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்தார்.

    இதன்படி வருகிற 22-ந்தேதி கையெழுத்து இயக்கம், 29-ந்தேதி அனைத்து தொகுதியிலும் கண்டன ஆர்ப்பாட்டம், அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி உண்ணாவிரதமும், அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15 முதல் 20-ந் தேதிக்குள் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    15 கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் தர கோரி புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி விடிய, விடிய, தர்ணா போராட்டம் நடத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 8-ந் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டம் நடந்தது.

    துணை ராணுவம் குவிப்பு, போக்குவரத்து பாதிப்பு, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் போராட்டம் நேற்று இரவு 7 மணியுடன் வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தை முடித்து வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது,

    பொங்கல் பண்டிகைக்கு பின்பு கவர்னரை கண்டித்து கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரசாரம், பந்த் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    இதனிடையே புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரண்பேடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைகள் திறப்பு, ஆதிதிராவிடர்களுக்கு நலத்திட்ட உதவிகள், ரேசன் கடை ஊழியர்களை பணியில் அமர்த்துவது உட்பட 15 அம்ச கோரிக்கைககள் குறித்து நேரில் சந்தித்து விவாதிக்க அனுமதி வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

    இதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்து அனுப்பிய கடிதத்தில், தங்களின் கோரிக்கைகள் தொடர்பான விளக்கம் பெற துறை செயலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தகவல்கள் வந்தவுடன் உங்களை சந்திக்கும் தேதி, நேரம் ஒதுக்கித்தரப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் போராட்டம் முடிந்தவுடன் அமைச்சர் கந்தசாமி சட்டசபை வளாகத்திற்கு சென்றார். சட்டசபை வளாகத்தில் வராண்டாவில் ஒரு நாற்காலி போட்டு அதில் தனி ஆளாக தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

    கந்தசாமியின் போராட்டத்தை பற்றி அறிந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி அனந்தராமன், விஜயவேணி ஆகியோர் சட்டசபை வளாகம் வந்து அவருடன் சிறிது நேரம் பேசி சென்றனர்.

    இதனையடுத்து, அமைச்சர் கந்தசாமி சட்டசபை வராண்டாவில் தரையில் தனியாக படுக்கை விரித்து தூங்கினார். இரவு முழுவதும் விடிய, விடிய சட்டசபை வளாகத்திலேயே அவர் போராட்டத்தை தொடர்ந்தார்

    இன்று காலை எழுந்து சட்டசபை வளாகத்திலேயே வாக்கிங் சென்ற அவர் அங்குள்ள தனது அறையில் குளித்து மீண்டும் வராண்டாவில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார்.

    இன்று 2-வது நாளாக அமைச்சர் கந்தசாமியின் தர்ணா தொடர்ந்தது. போராட்டம் குறித்து அமைச்சர் கந்தசாமி கூறும் போது, சமூகநல துறையில் நிலுவையில் உள்ள 15 கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் தரும் வரை எனது போராட்டம் தொடரும் என்றார்.

    ×