search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுவையில் பள்ளிகள் 18-ந்தேதி முதல் அரை நாள் மட்டும் இயங்கும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

    புதுவை, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் வரும் 18-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரைதான் திறந்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 4-ந்தேதி 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வாரத்தில் 6 நாட்களுக்கு காலை 10 முதல் மதியம் 1 மணி வரை இயங்குகிறது.

    இதில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய வகுப்புகள் திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமையும், 2, 4, 6, 8, 10, 12 செவ்வாய், வியாழக்கிழமை, சனிக்கிழமையும் இயங்குகின்றன.

    வருகைப்பதிவேடு இல்லாததால் விருப்பமுள்ள மாணவர்கள் சென்று பாடங்களில் சந்தேகங்களை கேட்டு வருகின்றனர். தற்போது 17-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 18-ந்தேதி முதல் முழு நேரமும் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தற்போது பள்ளி திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வருகிற 18-ந்தேதியில் இருந்து பள்ளிகள் அரைநாள் தான் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிகல்விதுறை இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், புதுவை, காரைக்காலில் உள்ள அரசு தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் வரும் 18-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரைதான் திறந்திருக்க வேண்டும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பள்ளிகள் இயங்கலாம். மறு உத்தரவு வரும் வரை இந்த நேரத்தை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலையில் மட்டும் பள்ளிகளை திறக்கலாம். மாணவர்கள் அதிகமாக இருந்து போதிய இடவசதி இல்லை எனில் ஏற்கனவே அறிவித்தபடி ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்தலாம்.

    மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கட்டாயமில்லை என்று குறிப்பிட்டனர்.
    Next Story
    ×