search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் நமச்சிவாயம்
    X
    அமைச்சர் நமச்சிவாயம்

    பெரிய மார்க்கெட் கடைகள் புதிதாக கட்டப்படும்- அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

    பெரிய மார்க்கெட் கடைகள் புதிதாக கட்டப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை அண்ணா திடல் ரூ.12 கோடி செலவில் சிறுவிளையாட்டு அரங்கமாக மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

    விழாவுக்கு தலைமை தாங்கி அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    அண்ணா திடலை மேம்படுத்த சிவா எம்.எல்.ஏ. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். பல்வேறு சங்கடங்களுக்கு இடையே தற்போது இந்த பணிகள் நடக்கிறது. திட்டங்களை குறித்த காலத்தில் கொண்டுவர தலைமை செயல் அதிகாரி அருண் பாடுபட்டார். பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    சின்னையாபுரத்தில் அடுக்குமாடி கட்டிட பணியாணை வழங்கப்பட்டுள்ளது. நகரப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்கால கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும் உள்ளோம். பெரிய மார்க்கெட் கடைகள் புதிதாக கட்டப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருவதால் வாகன நிறுத்துமிடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறோம்.

    இவை எதிர்காலத்தில் பலன்தர தயாராக உள்ளது. நகர்ப்புறத்தில் உள்ள தெரு மின் விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற உள்ளோம். இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட உள்ளது. உப்பனாறு மேம்பாலத்தை கட்டி முடிக்க அழுத்தம் தரப்பட்டு உள்ளது. காமராஜர் மணிமண்டபம் ஒரு மாதத்தில் கட்டி முடிக்கப்படும். திருக்காஞ்சி மேம்பாலம் ஒரு வாரத்தில் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    வருவாய்த்துறை செயலாளரான அருண் தொடர்ந்து நமது கலெக்டராகவே உள்ளார். அண்ணா திடலை மேம்படுத்த தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தார். இந்த பகுதியில் 10 பள்ளிகளுக்கு விளையாட்டு திடல் இல்லாமல் உள்ளது.

    இதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இங்கு கடை வைத்திருப்பவர்களும் விளையாட்டு அரங்கம் கட்டிட பெருந்தன்மையோடு செயல்பட்டு உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் கூட இந்த திட்டம் வந்திருக்காது. திடீர் நகர் பகுதியிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட விரைவில் அடிக்கல் நாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×