என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணிபுரியும் யுவராஜ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் வில்லியனூர் கோட்டைமேடு ரோட்டில் ரோந்து பணி சென்றனர்.
அப்போது அங்குள்ள மதுக்கடை எதிரே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 2 பேர் மது அருந்திவிட்டு ஆபாச வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்தனர்.
இதனை போலீசார் கண்டித்து அவர்களை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்து தள்ளி விட்டனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரித்த போது அவர்கள் கண்டமலங்கலம் அருகே சடையாண்டிக்குப்பம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர்(35) மற்றும் அதேபகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(34) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பொது இடத்தில் அருவருக்கத்தக்க வகையிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும், போலீசாரை பணி செய்யவிடாமல் அவர்களை தாக்க முயன்றதாக வழக்குபதிவு செய்து ஸ்ரீதர், ஜெயக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 2020 மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் புதுவையில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது.
கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ½ நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கி வந்தது.
கடந்த மாதம் 8-ந்தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தொடர் மழையின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருந்தார். மாணவர்களுக்கு வருகை பதிவேடு கட்டாயம் இல்லை எனவும், ஆன்லைனில் தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் வருகைக்காக பள்ளிகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்களும், ஆசிரியர்களும் ஈடுபட்டனர்.
வகுப்பறைகள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கவும், கிருமி நாசினி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது.
மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வரவேற்று வகுப்பறைக்கு அழைத்து சென்றனர். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் ½ நாள் மட்டுமே செயல்படும்.

புதுவை அரசு உத்தரவை தொடர்ந்து பெரும்பாலான ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது. மேலும் தமிழக பகுதியில் உள்ள வீடூர் அணை திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சுண்ணாம்பாறு படகு குழாம் மூடப்பட்டது.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு சில படகுகள் ஆற்றில் மூழ்கியதால் என்ஜின் பழுதானது. பாரடைஸ் பீச்சில் பயணிகளை இறக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 2 ஜெட்டிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மழை ஓய்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் 20 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் படகுசவாரி தொடங்கியது. பாரடைஸ் பீச்சில் அமைக்கப்பட்டிருந்த 2 ஜெட்டிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அங்கு அழைத்து செல்லப்படவில்லை.
மாறாக ஆற்றிலேயே சுற்றி காண்பிக்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். கடலில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே பாரடைஸ் பீச்சில் 2 ஜெட்டிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் தான் சுற்றுலா பயணிகள் பாரடைஸ் பீச்சுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாநிலங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வில்லியனூர் அருகே உள்ள கோபாலன்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சியாமளாதேவி (வயது 32). இவர் எம்.பி.பி.எஸ். டாக்டர்.
இவருக்கும் லாஸ்பேட்டை சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணி மகன் அமுதவாணனுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.
சியாமளாதேவியின் திருமணத்தின்போது ரூ.50 லட்சம் மதிப்பிலான சொகுசு கார், 100 பவுன் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக மாப்பிள்ளை வீட்டுக்கு வழங்கப்பட்டது.
திருமணத்திற்கு பிறகு சியாமளாதேவி மாமனார் மற்றும் மாமியார் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது நகைகளை அடகு வைக்க அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் நகைகளை கொடுக்காததால், ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து சியாமளாதேவி, கணவருடன் கோபாலன்கடையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் சியாமளாதேவியிடம் சொல்லாமல் அமுதவாணன் தாய்லாந்து நாட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்து, மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனது பெட்ரோல் பங்க் கடனில் உள்ளதால், அதனை மீட்க ரூ.2 கோடி 30 லட்சத்தை கடனாக தருமாறு சியாமளாதேவியின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். மேலும் பெட்ரோல் பங்க் லாப பங்கு தொகையை தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். மகளின் நலன் கருதி சியாமளாதேவியின் பெற்றோர் அமுதவாணன் கேட்டபணத்தை அவரிடம் கொடுத்தனர். ஆனால் அவர் அந்த பணத்தை தனது தந்தையிடம் கொடுத்துவிட்டாராம். இதை அறிந்த சியாமளாதேவியின் தந்தை, அமுதவாணனிடம் பணத்தை திருப்பி கேட்டபோது, கொடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சியாமளாதேவி மருத்துவ மேற்படிப்புக்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுவிட்டார். இதனை பயன்படுத்திக்கொண்ட அமுதவாணன் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்தநிலையில் அங்கு கணக்காளராக வேலை செய்த ஹர்ஷவர்தினி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். இதை அறிந்த சியாமளாதேவி பிரான்சில் இருந்து வந்து தன் கணவர் வீட்டுக்கு முறையிட சென்றார். அப்போது மாமனார், மாமியார் மற்றும் 2-வது மனைவி ஆகியோர் அமுதவாணனை பார்க்கவிடாமல், சியாமளா தேவியை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்டதோடு, சுமார் ரூ.4 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்தது குறித்து சியாமளாதேவி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அமுதவாணன், அவரது தந்தை, தாய் மற்றும் 2-வது மனைவி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. இருப்பினும் அவ்வப்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற புதுவை அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இற்காக தடுப்பூசி சிறப்பு முகாம்களை அரசின் சுகாதாரதுறை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அதோடு, வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் நடக்கிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 7 லட்சத்து 74 ஆயிரம் பேரும், 2வது தவணை தடுப்பூசியை 4 லட்த்து 48 ஆயிரம் பேரும் செலுத்தியுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக 77 சதவிதத்தினர் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ள 23 சதவீதத்தினரையும் செலுத்த வைக்க பல்வேறு முய்ற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தற்போது உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒகைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் பாதிப்பு அதிகமாக ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதுவையில் தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
புதுவை பொது சுகாதார சட்டம் 1973-ன் பிரிவு 54(1) விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.2 தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும்.
இது தொடர்பாக சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு கூறியதாவது:-
கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. இதை மீறுபவர்கள் சட்ட விதிகளின் படி தண்டிக்கப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் சுற்றி வருவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதனால் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பொது இடங்களுக்கு வருபவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும்.
வெளியே நடமாடுபவர்களிடம் சான்றிதழ் உள்ளதா.? என சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளியே சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு ஸ்ரீராமலு கூறினார்.
இதையும் படியுங்கள்... 2 மாதங்களுக்கு முன்பு இறந்து போன தொழிலாளியின் செல்போனுக்கு வந்த கொரோனா தடுப்பூசி சான்றிதழ்
புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் தனியார் ஓட்டலில் சுற்றுலா தொழில் முனைவோர் கூட்டம் நடந்தது. இதன் நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
புதுச்சேரி அழகிய சிறிய மாநிலம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நாம் நினைக்கும் திட்டங்களை நிறைவேற்ற முழு அதிகாரம் தேவை. அது நம்மிடம் இல்லை. புதுச்சேரியில் முன்பு 30 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு விவசாயம் நடந்தது. தற்போது படிப்படியாக குறைந்து 10 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு நடக்கிறது.
புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். சுற்றுலா வருபவர்களுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள் கொடுக்க வேண்டியது அவசியம். இதற்காக தான் முன்பு ஆட்சியில் இருந்த காலத்தில் தங்கும் விடுதிகள் கட்டினால் அரசு சார்பில் ரூ.1 கோடி வரை மானியம் வழங்கினோம்.
சுற்றுலா பயணிகளுக்கு நல்ல உணவு வழங்க வேண்டும். புதுச்சேரியில் இன்னும் 2 ஆயிரம் அறைகள் நமக்கு தேவை. எனவே ஓட்டல் உரிமையாளர்கள் அதனை கட்ட முன் வர வேண்டும். ஓட்டல்கள் கட்ட வரும்போது அரசு அதிகாரிகள் உடனடியாக அரசு அனுமதி வழங்குவது இல்லை. இது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
இதனால் பலர் புதுவையில் தொழில் தொடங்க முன்வருவது இல்லை. இதனை முறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாராவது தொழில் தொடங்க வந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இதற்காக விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் புதுவைக்கு ரூ.1,000 கோடியில் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தில் இதுவரை ரூ.60 கோடி அளவுக்கு மட்டும் தான் பணிகள் நடந்துள்ளது. எங்கள் ஆட்சி வந்த பின்னர் தான் ரூ.200 கோடி அளவுக்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 2 ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.
கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
நவம்பர் மாதம் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகளை திறக்க முடிவு எடுத்தோம். மழை காரணமாக திறக்க முடியவில்லை.
தற்போது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. ½ நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்.

ஏற்கனவே திறக்கப்பட்டு நடந்து வரும் 9 முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் நாளை மறுநாள் முதல் முழு நேரமாக செயல்படும். அனைத்து பள்ளி வகுப்புகளும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் நடைபெறும்.
வருகிற 6-ந்தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மதிய உணவு வழங்கப்படும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை முழு நேரம் பள்ளிகள் செயல்பட்ட பிறகு மதிய உணவு வழங்கப்படும்.
ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தடுப்பூசி போட்டால் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்க உள்ளோம்.
பெற்றோர்கள் கண்டிப்பாக பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரினர். ஆன்லைன் வகுப்புகளில் கவனிப்பது சிரமமாக இருந்ததாக வலியுறுத்தினர். அதனால் பள்ளிகளை திறக்கிறோம். பள்ளிகளில் நேரடி வகுப்புடன் ஆன்லைன் வகுப்பும் தொடரும்.
ஒமைக்ரான் உலக அளவில் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. எனவே புதுவை மக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... புதுச்சேரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு- சிகிச்சைக்கு 100 படுக்கைகள் தயார்
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்தநிலையில் தற்போது தினமும் பாதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை 30 ஆக இருந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது.
இதையொட்டி வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், ஒமைக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் விரிவான சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி புதுச்சேரியில் தற்போது கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-
ஒமைக்ரான் வைரஸ் என்பது தனியான தொற்று கிடையாது. அது உருமாறிய கொரோனா தான். வெளிநாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணித்து தேவையான பரிசோதனைகள் மேற்கொள்வார்கள்.
மாநில எல்லைகளில் காவல்துறையுடன் இணைந்து சோதனைகள் நடத்த உள்ளோம். ரெயில் நிலையம், பஸ் நிலையங்களிலும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்படும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நெஞ்சக நோய் மருத்துவமனையில் 160 படுக்கைகள் உள்ளது. இதில் தற்போது 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம். தேவைப்பட்டால் அந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
கொரோனாவுக்கு செய்யப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைதான் ஒமைக்ரான் வைரசை கண்டறியவும் செய்யப்படும். இதுதொடர்பான நவீன ஆய்வகங்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில் 99 பேருக்கு பரிசோதனை செய்து 2 மணி நேரத்தில் முடிவுகளை அறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்காலை அடுத்த நெடுங்காடு அன்னவாசல் கிராமத்தை சேர்ந்தவர் குமார்கேசவன். பிரான்சில் நாட்டில் வசித்த இவர், கடந்த 1983-ம் ஆண்டு தனது மனைவி குமார் சரஸ்வதி பெயரில், காரைக்கால் மாதாகோவில் வீதியில் ஒரு இடத்தை வாங்கியுள்ளார்.
குமார்கேசவன் பிரான்சில் வசிப்பதால், தனது உறவினரான நாகை மாவட்டம் பொறையாறை சேர்ந்த தில்லையம்மாளுக்கு, அந்த இடத்தை பராமரிப்பதற்கு பவர் வழங்கி இருந்தார். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.
இந்தநிலையில் சிறிது காலத்திற்கு பிறகு, தில்லையம்மாள், அவரது மகன் தேவராஜ் ஆகியோர் சேர்ந்து, அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமாக்க முயன்றனர். இதை அறிந்த குமார்கேசவன், தில்லையம்மாளுக்கு வழங்கிய பவரை கடந்த 1996-ல் ரத்து செய்தார்.
இந்தநிலையில் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்ட ஆவணம் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 2016-ல் பொறையாறை சேர்ந்த ஆனந்த் என்பவர், காரைக்கால் நாடக கொட்டகை பகுதியை சேர்ந்த கட்டபொம்மன் மனைவி ஆனந்தஜோதிக்கு விற்பனை செய்து, அதற்காக பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு ஆனந்தஜோதி காரைக்கால் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கணபதி மனைவி சாய்லட்சுமிக்கு விற்பனை செய்துள்ளார்.
இதை அறிந்த பிரான்சில் வசித்து வரும் குமார்கேசவனின் மகன் குமார்ஆனந்த், நெடுங்காடு பகுதியை சேர்ந்த உறவினர் குணசேகரன் மூலம் காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் முறைகேடாக இடத்தை விற்ற ஆனந்த் (வயது 48) மற்றும் கட்டபொம்மன், அவரது மனைவி ஆனந்தஜோதி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆனந்த் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கட்டபொம்மன், ஆனந்தஜோதியையும் நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






