search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    இட மோசடி வழக்கில் தம்பதி கைது- காரைக்கால் போலீசார் அதிரடி

    காரைக்காலில் ரூ.5 கோடி மதிப்பிலான இடத்தை முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு விற்று மோசடி செய்த வழக்கில் தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு அன்னவாசல் கிராமத்தை சேர்ந்தவர் குமார்கேசவன். பிரான்சில் நாட்டில் வசித்த இவர், கடந்த 1983-ம் ஆண்டு தனது மனைவி குமார் சரஸ்வதி பெயரில், காரைக்கால் மாதாகோவில் வீதியில் ஒரு இடத்தை வாங்கியுள்ளார்.

    குமார்கேசவன் பிரான்சில் வசிப்பதால், தனது உறவினரான நாகை மாவட்டம் பொறையாறை சேர்ந்த தில்லையம்மாளுக்கு, அந்த இடத்தை பராமரிப்பதற்கு பவர் வழங்கி இருந்தார். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

    இந்தநிலையில் சிறிது காலத்திற்கு பிறகு, தில்லையம்மாள், அவரது மகன் தேவராஜ் ஆகியோர் சேர்ந்து, அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமாக்க முயன்றனர். இதை அறிந்த குமார்கேசவன், தில்லையம்மாளுக்கு வழங்கிய பவரை கடந்த 1996-ல் ரத்து செய்தார்.

    இந்தநிலையில் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்ட ஆவணம் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 2016-ல் பொறையாறை சேர்ந்த ஆனந்த் என்பவர், காரைக்கால் நாடக கொட்டகை பகுதியை சேர்ந்த கட்டபொம்மன் மனைவி ஆனந்தஜோதிக்கு விற்பனை செய்து, அதற்காக பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

    பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு ஆனந்தஜோதி காரைக்கால் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கணபதி மனைவி சாய்லட்சுமிக்கு விற்பனை செய்துள்ளார்.

    இதை அறிந்த பிரான்சில் வசித்து வரும் குமார்கேசவனின் மகன் குமார்ஆனந்த், நெடுங்காடு பகுதியை சேர்ந்த உறவினர் குணசேகரன் மூலம் காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் முறைகேடாக இடத்தை விற்ற ஆனந்த் (வயது 48) மற்றும் கட்டபொம்மன், அவரது மனைவி ஆனந்தஜோதி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆனந்த் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கட்டபொம்மன், ஆனந்தஜோதியையும் நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×