என் மலர்
புதுச்சேரி
புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு என் துறைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வழிகாட்டுதலில் பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை துறைகளில் முன்னெடுத்துள்ளோம்.
போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் உரிமம் பெற வசதியாக சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டம் புதுவையில் செயல்படுத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமம் பெற சிறப்பு முகாம் நடத்தப்படும்.
புதுவை சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) 164 பஸ்கள் உள்ளது. 90 பஸ்கள் மட்டுமே இப்போது இயக்கப்படுகிறது. பழுது காரணமாக மற்ற பஸ்கள் இயக்கப்படவில்லை. சிறிய பழுதடைந்த பஸ்களை சீரமைத்து கூடுதலாக இயக்கி வருகிறோம்.
கொரோனா காலத்தில் 10 வால்வோ பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த நிறுவனம் மூலம் குறைந்த செலவில் சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வால்வோ பஸ்களை சீரமைக்க அதிக செலவானால் அவற்றை அந்த நிறுவனத்திடமே கொடுத்து புதிய பஸ்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும். பி.ஆர்.டி.சி.யில் டிக்கெட் பரிசோதகர்கள் குறைவாக உள்ளனர்.
இதனால் தமிழக அரசு நிறுவனத்தோடு இணைந்து பஸ்களை பரிசோதிக்க அனுமதி பெற்றுள்ளோம். பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்ததால் பி.ஆர்.டி.சி. பஸ்கள் முறையாக இயக்கப்பட்டு வருமானம் முன்பைவிட இருமடங்கு உயர்ந்துள்ளது. பி.ஆர்.டி.சி.யை மீண்டும் லாபகரமாக இயக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மூலம் புதிதாக 200 பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளோம். பெண்களுக்கு தனியாக ‘பிங்க்’ கலர் பஸ் இயக்க முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண்கள் இலவச பஸ் பயணம் செல்கின்றனர். அதேபோல ‘பிங்க்’ பஸ் இயக்கப்படும்போது பெண்கள் இலவசமாக பயணிக்க அறிவிப்பு வெளியிடுவோம்.
பஸ் நிறுத்தங்களில், பஸ்களில் கேமரா பொருத்தவும், ஜி.பி.எஸ். இணைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பி.ஆர்.டி.சி. ஊழியர்களின் 5 மாத நிலுவை சம்பளம் வழங்கியுள்ளோம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 இடங்களில் தேசியக்கொடியுடன் 100 அடி உயர கொடிகம்பம் மற்றும் நினைவு தூண் அமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் நினைவுதூண் மற்றும் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 29-ந் தேதி ஆய்வு செய்தார். அப்போது கடற்கரை சாலையில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. குறிப்பாக காந்தி சிலை பின்புறம், நேரு சிலை அருகில் உள்ள இடம் ஆகியன கருத்தில் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கொடிக்கம்பம், நினைவு தூண் அமைப்பதற்காக நேற்று மீண்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலையில் ஆய்வு செய்தார். இதற்காக அவர் டூப்ளே சிலை அருகே பார்வையிட்டார். பின்னர் நேரு சிலை அருகே உள்ள பாண்லே பூத் முன் மற்றும் பழைய கலங்கரை விளக்கம் பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். பின்னர் எந்த இடத்தில் அமைத்தால் பொதுமக்களை கவரும் வகையில் இருக்கும் என்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வு முடிந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர் ஏற்றுக் கொண்டதையடுத்து சுற்றுலா பயணிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கொரோனாவை பரவலை தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுவையை மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதுவரை மாநிலம் முழுவதும் 2-வது தவணை உட்பட 13 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களை வீடு, வீடாக கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி கட்டாய தடுப்பூசி செலுத்தும் சட்டமும் அமலுக்கு வந்துள்ளது.
இருப்பினும் பொதுமக்களிடம் தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா? என ஆய்வு செய்யப்படவில்லை.
தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் கவர்னர் தமிழிசை புதுவையில் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதனிடையே உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வந்தவர்களிடம் கலந்துரையாடினார். தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் டாக்டர்களும், செவிலியர்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை புதுவை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று முதல் தடுப்பூசி போட்டவர்களுக்கான ஆவணங்கள் அவ்வப்போது பரிசோதனை செய்யப்படலாம்.
எனவே புதுவை மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை தங்களோடு வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
புதுவையில் பாரதி நினைவிடத்தில் அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய கவர்னர் தமிழிசை மாணவர்களின் கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாகவி பாரதியாரின் 139-வது பிறந்தநாளை புதுவை அரசு கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று காலை முதல்-அமைச்சருடன் சென்று பாரதியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தேன். அவரது ஆன்மா வசித்த நினைவு இல்லத்தில் குழந்தைகளோடு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.
பாரதியாரின் புகழைப்பாடும் அளவிற்கு ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. கவர்னர் மாளிகையிலும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னார் பாரதி. அப்படி ஒரு பசுமையான புதுவையை, பசி இல்லாத புதுவையை உருவாக்க வேண்டும் என்பதற்காக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
பாரதியார் புதுவையில் வாழ்ந்த 10 ஆண்டுகள், ஒரு வளர்ச்சியடைந்த நாட்டை, புதுவையை உருவாக்க கனவு கண்டார். அத்தகைய புதுவையை உருவாக்க பாரதியின் பிறந்த நாளில் நாம் சபதம் ஏற்போம். பாரதியார் அவரது வாழ்நாளில் 10 ஆண்டுகள், மூன்றில் ஒரு பங்கு புதுவையில் கழித்திருக்கிறார்.
புதுவையில் எல்லா இடங்களிலும் அவருடைய ஆன்மா உலவிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். பாரதிக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தேன்.
முதல்-அமைச்சருடன் ஆலோசனை செய்து இதற்காக குழு அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். வெளிநாடுகளில் இருந்தும் தமிழர்கள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இத்தகைய முயற்சியில் நாங்களும் எங்களது பங்கை அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
எனவே, பாரதிக்கு ஒரு வானுயர சிலை அமைக்க முடியும் என்று நம்புகிறேன். முதல்-அமைச்சருடன் ஆலோசனை செய்து அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். ஆரோவில் நிர்வாகத்திற்கு ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் தலைவராக தமிழக கவர்னரும் உறுப்பினராக நானும் இன்னும் மூன்று ஆளுமைகளும் உறுப்பினர்களாக இருக்கிறோம்.
அன்னை கனவுகண்ட நகரம் 50 ஆண்டு காலமாக உருவாகவில்லை என்ற எண்ணம் இருக்கிறது. இயற்கையை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இல்லை.
அன்னை கனவு கண்ட நகரம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பழமையான மரங்கள் வேறிடத்தில் நடப்படுகிறது. இயற்கை எந்தவிதத்திலும் அழியாமல் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுவை பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி கோதை. இவர்களது மகள் சுவேதா (வயது14). இவர் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கொரோனா காலம் என்பதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் சுவேதா கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சுவேதா பள்ளிக்கு சென்றார். அப்போது சுவேதாவை வகுப்பு ஆசிரியை கண்டித்து பெற்றோருடன் தலைமை ஆசிரியரை பார்த்து விட்டு வரும்படி கூறியதாக தெரிகிறது.
அதன்படி சுவேதா தனது சகோதரர் அமரனை அழைத்துக்கொண்டு பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்தார். அப்போது பள்ளி தலைமையாசிரியர் 10-ம் வகுப்பு என்பது முக்கிய படிப்பாகும். இப்படி பள்ளிக்கு வராமல் இருந்தால் எப்படி தேர்வு எழுதமுடியும் என்றும், படிக்க விருப்பம் இல்லையென்றால் டி.சி.யை வாங்கிகொண்டு செல்லும்படி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் சுவேதா மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியை கண்டித்ததால் விரக்தியடைந்த சுவேதா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். வீட்டின் குளியல் அறைக்கு சென்று சுவேதா அங்குள்ள ஜன்னலில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார்.
வெகுநேரமாக குளியல் அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சுவேதாவின் சகோதரர் அமரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சுவேதா தூக்கில் தொங்குவதை கண்டு அமரன் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் சுவேதாவை தூக்கில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுவேதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சுவேதாவின் தாய் கோதை ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் தற்கொலைக்கு காரணமான பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கிராமப்புற பகுதிகளில் கிடைக்கும் தென்னை, பனை மரங்களிலிருந்து விழும் பொருட்களை கலைப்படைகளாக மாற்றி வருகின்றனர்.
குறிப்பாக பாய்மரக் கப்பல், சைக்கிள், விலங்குகள், நகைகள் செய்து வந்தனர். பல கண்காட்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். அத்துடன் திருச்சி, சென்னை, புதுவை என பல நகரங்களில் தனியார் கல்லூரிகளில் கலை வகுப்புகளும் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர் வீட்டு திருமண நிச்சய நிகழ்வில் இலைகளால் செய்த மேடை அலங்காரம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
இதுபற்றி நுண்கலை ஆசிரியர் உமாபதி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
கலைப் படைப்புகள் மட்டுமின்றி திருமணம், கருத்தரங்கம் நிகழ்வுகளில் இயற்கை பொருட்கள் கொண்டு விடுமுறை நாட்களில் மேடை அலங்காரமும் செய்ய பயிற்சி தருகிறோம்.
எங்கள் பள்ளி ஆசிரியர் வீட்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் நாங்கள் அலங்கார மேடை அமைத்தோம். அந்த மேடையை வாழை இலை, தென்னை ஓலை, மந்தார இலை கொண்டு வடிவமைத்தோம்.
எங்கள் பள்ளியில் 7, 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் 5 மணி நேரத்தில் இணைந்து வடிவமைத்தோம்.
இந்த திருமண நிச்சயதார்த்த மேடை அதிகம் வரவேற்பு பெற்றது. அதை பாராட்டி குழந்தைகளுக்கு புத்தகப்பையை மணமக்கள் வாங்கி தந்தனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பின் வேகம் குறைந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்ட வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதுமட்டுமின்றி தற்போது ஒமைக்ரான் பாதிப்பு தொடர்பான தகவல்கள் பரவி வருவதால் மக்கள் மத்தியில் பீதியும் எழுந்துள்ளது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தடுப்பூசி போடாதவர்கள் பொதுஇடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகளை பெற தடுப்பூசி கட்டாயம் செலுத்தவேண்டும் என மக்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக இதுநாள் வரை தடுப்பூசி செலுத்த தயங்கியவர்கள் தற்போது போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடுபவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் வரை தினமும் 3 ஆயிரம் பேர் வரை மட்டுமே போட்டுக்கொண்ட தடுப்பூசியை தற்போது 8 ஆயிரம் பேர் வரை செலுத்தி வருகின்றனர்.
முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 7 லட்சத்து 81 ஆயிரத்து 496 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 95 ஆயிரத்து 321 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். இதுவரை 12 லட்சத்து 76 ஆயிரத்து 817 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை ராம்ஜிநகர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது48). இவர் சென்னை ஆவடியில் மத்திய ரிசர்வ் பட்டாலியன் படைப்பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மங்கையர்கரசி.
இவர்களுக்கு நிரோசந்திரன் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மங்கையர்கரசி இறந்துவிட்டார்.
இதையடுத்து சங்கர் அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொண்டு மகன் மற்றும் மகள்களுடன் தங்கியிருப்பார். விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கும் போதெல்லாம் சங்கர் மது குடிப்பது வழக்கம்.
ஆனால் கடந்த சில நாட்களாக சங்கர் மது குடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் சங்கர் மது குடித்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் வீட்டின் வராண்டாவில் தூங்கினார். நேற்று காலை சங்கர் திடீரென தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறி மயங்கி சரிந்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சங்கர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் நிரோசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






