என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    பாரதிக்கு வானுயர சிலை அமைக்க அரசு சார்பில் குழு அமைக்கப்படும்- கவர்னர் தமிழிசை தகவல்

    பாரதியாரின் புகழைப்பாடும் அளவிற்கு ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் பாரதி நினைவிடத்தில் அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய கவர்னர் தமிழிசை மாணவர்களின் கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாகவி  பாரதியாரின் 139-வது பிறந்தநாளை புதுவை அரசு கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.   இன்று காலை முதல்-அமைச்சருடன் சென்று பாரதியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தேன். அவரது ஆன்மா வசித்த நினைவு இல்லத்தில் குழந்தைகளோடு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.

    பாரதியாரின்   புகழைப்பாடும் அளவிற்கு ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. கவர்னர்  மாளிகையிலும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னார் பாரதி. அப்படி ஒரு பசுமையான புதுவையை, பசி இல்லாத புதுவையை உருவாக்க வேண்டும் என்பதற்காக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    பாரதியார் புதுவையில் வாழ்ந்த 10 ஆண்டுகள், ஒரு வளர்ச்சியடைந்த நாட்டை, புதுவையை உருவாக்க கனவு கண்டார்.  அத்தகைய புதுவையை  உருவாக்க பாரதியின் பிறந்த நாளில் நாம் சபதம் ஏற்போம். பாரதியார் அவரது வாழ்நாளில் 10 ஆண்டுகள், மூன்றில் ஒரு பங்கு புதுவையில் கழித்திருக்கிறார்.

    புதுவையில் எல்லா இடங்களிலும் அவருடைய ஆன்மா உலவிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். பாரதிக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தேன்.

    முதல்-அமைச்சருடன் ஆலோசனை செய்து இதற்காக குழு அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். வெளிநாடுகளில் இருந்தும் தமிழர்கள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இத்தகைய முயற்சியில் நாங்களும் எங்களது பங்கை அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

    எனவே, பாரதிக்கு ஒரு வானுயர சிலை அமைக்க முடியும் என்று நம்புகிறேன். முதல்-அமைச்சருடன் ஆலோசனை செய்து  அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். ஆரோவில் நிர்வாகத்திற்கு ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் தலைவராக தமிழக கவர்னரும் உறுப்பினராக நானும் இன்னும் மூன்று ஆளுமைகளும் உறுப்பினர்களாக இருக்கிறோம்.

    அன்னை கனவுகண்ட நகரம் 50 ஆண்டு காலமாக உருவாகவில்லை என்ற எண்ணம் இருக்கிறது. இயற்கையை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இல்லை.

    அன்னை கனவு கண்ட நகரம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பழமையான மரங்கள்  வேறிடத்தில் நடப்படுகிறது. இயற்கை எந்தவிதத்திலும் அழியாமல் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×