என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவல் முதல் மற்றும் 2வது அலை  காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டும் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. 2022  ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  எனினும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஊரடங்கில் முழு தளர்வு அளித்து அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதையடுத்து அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகிறது. பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்போர் மட்டுமே புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதி தரப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்தார். 
    அப்போது அவர் பேசியதாவது:

    புதுச்சேரி ஒரு சுற்றுலா தலமாக இருந்தாலும், கடுமையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களை இங்கு அனுமதித்துள்ளோம். வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுகிறோம். புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று நான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு தமது பேட்டியின்போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
    அதிகாரிகள் ஒத்துப்போனாலும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் நடக்காது ஏன்? என்று நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை சிறைபிடித்து சென்றுள்ளது. இது தொடர் கதையாகி உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டால் 2 நாட்களில் மீட்டு வந்தோம். அவர்களது படகுகளையும் திரும்பபெற்று கொடுத்தோம். ஆனால் தற்போது மத்திய அரசு நமது மீனவர்களை பற்றி கவலைப்படுவதில்லை. இலங்கை அரசோடு பேசுவதும் இல்லை. மீனவர்களை மீட்டுவர உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசு ஜி.எஸ்.டி. மூலம் மாநில வரி வருவாயை பறித்துக்கொள்வதால், மாநில அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது.

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவியேற்றபின் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசிடம் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவித்த நிவாரணங்களை இன்னும் வழங்கவில்லை. விலைவாசி உயர்வு குறித்தும் கவலை இல்லை. அரசு, கூட்டுறவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. பஞ்சாலைகள் திறக்கப்படவில்லை.

    மழைநிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படாதது குறித்து காரைக்காலை சேர்ந்த ஒருவர் ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, நான் ராஜா இல்லை. எனக்கு மேலும், கீழும் உள்ளனர் என்று வேதனையுடன் கூறியுள்ளார். இதையே காங்கிரஸ் ஆட்சியிலும் கூறினோம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரங்கசாமி வாய்மூடி மவுனமாக இருந்தார்.

    அதிகாரிகளுடன் ஒத்துப்போக வேண்டும் என்று கூறினார். தற்போது அவர் அதிகாரிகளுடன் ஒத்துப்போயும் அவரது ஆட்சியில் எதுவும் நடக்காதது ஏன்?

    அரசின் எந்த அறிவிப்பாக இருந்தாலும் நிதியை ஒதுக்கிவிட்டு அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் இவர் நிதியை ஒதுக்காமல் அறிவிப்பை வெளியிட்டு அதிகாரிகள் மீது பழியை போடுகிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மழை நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பியவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ளத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். மோசமான நிலையில் இருக்கும் சாலைகளை போடுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. அமைச்சர்கள் தொழிற்சாலை அதிபர்களை மிரட்டி மாமூல் கேட்பது, வேண்டியவர்களுக்கு லேபர் காண்டிராக்ட் கேட்பது வாடிக்கையாகிவிட்டது. கரசூர் தொழில் அதிபர்கள், இதுதொடர்பாக என்னிடம் புகார் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாமூல் வசூலிப்பதை தடுத்து நிறுத்தினோம். ஆனால் தற்போது அது தாராளமாக நடக்கிறது. வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கி உள்ளது. சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுவையில் சர்வதேச யோகா திருவிழா ஜனவரி மாதம் 4-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது.
    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷிணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறையில் நடைபெறும் சர்வதேச யோகா திருவிழா வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை புதுச்சேரியில் நடைபெற உள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து பங்கேற்பவர்களை வரவேற்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பங்கேற்பாளர்கள் தங்கள் பங்கேற்பை பதிவு செய்ய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. https://pondytourism.py.gov.in/yoga என்ற இணையதளத்தில் பங்கேற்பாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். யோகா திருவிழாவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

    காலை இறைவழிபாட்டு பாடல்கள், தியானப்பயிற்சி, இலவச யோகா பயிற்சிகள், யோகா தொடர்பான கருத்தரங்கம், ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், யோகாசன செயல்விளக்கம், பல்வேறு வயதினருக்கான யோகாசன போட்டிகள், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோக மற்றும் இயற்கை சிகிச்சைகள் அடங்கிய நல்வாழ்வு கண்காட்சி, இயற்கை உணவு அங்காடிகள், யோகா புத்தகங்கள் விற்பனை ஆகியவை நடைபெற உள்ளன.

    4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மாலை நேரங்களில் கலைநிகழ்ச்சிகள், யோகா வல்லுனர்களின் சிறப்பான சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுவையில் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச யோகா திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் தொற்று பரவல் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு மீண்டும் யோகா திருவிழாவினை நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.
    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில், ஸ்டார் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
    புதுச்சேரி:

    கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா நகரமான புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு படையெடுக்கின்றனர். இதனால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி உள்ளன.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை செய்ய மிஷன் வீதி, காந்திவீதி, நேருவீதி உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குடில்கள் அமைக்க தேவையான பொருட்கள், ஏசுகிறிஸ்து சிலை, பொம்மைகள், அலங்கார பல்புகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் புதுவையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது.

    கடற்கரை சாலையில் தலைமை செயலகம் முதல் பழைய துறைமுக பாலம் வரை உள்ள செயற்கை மணல் பரப்பில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். நோணாங்குப்பம் படகுகுழாமில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் படகில் சவாரி செய்து, பாரடைஸ் பீச்சுக்கு சென்றனர். மேலும் அங்குள்ள மணல் பரப்பில் 4 சக்கர வாகனத்தில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொமந்தான்மேடு தரைப்பாலம் உருக்குலைந்து போனது. இதனால் 20 கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    பாகூர்:

    பாகூர் அருகே உள்ள கொமந்தான்மேடு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 10ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி கடலூர் மாவட்ட பராமரிப்பிலும், மற்றொரு கரை புதுச்சேரி அரசு பராமரிப்பிலும் உள்ளது.

    இந்த தரைப்பாலம் கடந்த காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்கனவே சேதம் அடைந்திருந்தது. பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் தற்காலிக நடவடிக்கை எடுத்து பாலத்தின் சேதத்தை சரிசெய்தனர். ஆனால் தரமற்ற நிலையில் பாலம் கட்டப்பட்டதால் இதுவரை 3 முறை சேதமடைந்துள்ளது. ஆற்றில் அதிகபடியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலே தடுப்பணை உடைந்து விடுவது வழக்கமாகிவிட்டது.

    இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பெருக்கால் கொமந்தான்மேடு தரைப்பாலம் சேதமடைந்தது. தற்போது வெள்ளம் குறைந்துள்ள நிலையில், தடுப்பணை உருக்குலைந்து காட்சியளிக்கிறது.

    கடலூர் மாவட்டம் பகுதியில் கரை சேதமான நிலையில் அங்குள்ள அதிகாரிகள் கரையை பலப்படுத்த முயன்று ஓரளவுக்கு கரையை பாதுகாத்தனர். ஆனால் புதுச்சேரி பகுதியில் உள்ள கரையை பலப்படுத்த அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் கரை சுமார் 100 மீட்டர் அளவுக்கு உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் வழியாக பல ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலந்து வருகிறது.

    பாலத்தின் தற்போதைய நிலையில் இனி தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயமும் உள்ளது. மேலும் இந்த பாலத்தின் வழியாக கடலூர் - புதுச்சேரி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர். அவர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி, சோரியாங்குப்பம் அல்லது கன்னியக்கோவில் வழியாகத்தான் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் தடுப்பணை சேதமடைந்தது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை சட்டசபை வளாகத்தில் நுழைந்த 4½ அடி சாரை பாம்பை வனத்துறையினர் பிடித்து ஒரு பையில் போட்டு எடுத்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை வளாகத்தில் வழக்கம் போல் காவலர்கள் பணியில் இருந்தனர். அப்போது ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதை சட்டசபை காவலர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சட்டமன்ற மார்‌ஷல் ரமேஷ் மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனதுறை ஊழியர்கள் சக்திவேல், கோபி ஆகியோர் சட்டசபை வளாகம் வந்து பாம்பை தேடினர்.

    உணவு அருந்தும் மேஜை பகுதியில் மறைந்திருந்த பாம்பை கண்டுபிடித்தனர். பின்னர் அதனை லாவகமாக பிடித்தனர். பிடிப்பட்ட பாம்பு சுமார் 4½ அடி நீளமுள்ள சாரை பாம்பாகும். இதனை ஒரு பையில் போட்டு வனத்துறைக்கு எடுத்து சென்றனர்.

    சட்டசபை வளாகத்திற்கு எதிரே பாரதி பூங்கா உள்ளது. பூங்காவில் புல்தரையும், மரங்களும், புதர்களும் உள்ளது. இங்கு இருந்து சட்டசபை வளாகத்திற்குள் பாம்பு வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். 

    பாரதியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி புதுச்சேரியில் அவருக்கு 6½ அடி உயர சாக்லெட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை வியந்து பார்த்து பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வரும் சாக்லெட் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களை கவரும் வகையில் சாக்லெட் தயாரித்து கலைத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன், திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆகியோரது உருவங்களை சாக்லெட்டால் வடிவமைத்துள்ளார்.

    இந்தநிலையில் தற்போது மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது அவரது உருவ சிலையை 6.6 அடி உயரத்தில் சாக்லெட்டால் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

    அந்த சிலையில் பாரதியின் வரிகளான "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதை அந்த வழியாக வந்து செல்லும் பொதுமக்கள் பார்த்து ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். பாரதியாரின் சாக்லெட் சிலை அருகில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.

    இந்த சாக்லெட் சிலையை வடிவமைத்தது குறித்து ராஜேந்திரன் கூறுகையில், "கிறிஸ்துமஸ் மற்றும் 2021 புத்தாண்டையொட்டி நூற்றாண்டு கண்ட புரட்சி கவிஞர் பாரதியாரை கவுரவிக்கும் வகையிலும், அவரை அனைத்து இளையோரிடம் கொண்டு செல்லும் நோக்கத்திலும் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதில் உதித்தது தான் இந்த சிலை. அதாவது 482 கிலோ எடையில் சாக்லெட் கொண்டு 6.6 அடி உயரத்தில் பாரதியார் சிலையை வடிவமைத்தேன். நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை வடிவமைக்க 106 மணி நேரமானது" என்றார்.
    இந்தியாவில் 138 கோடி மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தி பிரதமர் சாதனை படைத்துள்ளதாக பா.ஜ.க. பாராட்டு தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி, மகளிர் அணி, இதர பிற்படுத்தப்பட்டோர் அணி, சிறுபான்மையினர் அணி, விவசாய அணி, தாழ்த்தப்பட்டோர் அணி ஆகிய அணிகளின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் மோகன்குமார், அசோக்பாபு எம்.எல்.ஏ., இளைஞர் அணி தலைவர் கோவிந்தன் கோபதி, மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி, இதர பிற்படுத்தப்பட்டோர்அணி தலைவர் சிவகுமார், சிறுபான்மையினர் அணி தலைவர் விக்டர் விஜயராஜ், விவசாய அணி தலைவர் புகழேந்தி, தாழ்த்தப்பட்டோர் அணி பொதுச்செயலாளர் கங்கைஅமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * உலக அளவில் 138 கோடி மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி அளித்து சாதனை படைத்துள்ள பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது.

    * இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், புதுவையில் மழைக்கால நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க பரிந்துரைத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

    * பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றரை மடங்கு உயர்த்தி சிறுவிவசாயிகளுக்கு கிசான் கார்டு மற்றும் டி.ஏ.பி., யூரியா மானியத்தை அதிகப்படுத்திய பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது.

    * பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு இலவச பஸ் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கூட்டணி ஆட்சியில் இலவச பஸ் திட்டத்தை அறிவித்த புதுவை அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

    மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    ஊரங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுவை தயாராகி வருகிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஊரடங்கில் முழு தளர்வு அளித்து அரசு அனுமதி அளித்துள்ளது.

    ஆனால் தமிழகத்தில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகிறது. இதற்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. மேலும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு வருகிறார்கள். இதற்காக பிரபல இசை, கலை நிகழ்ச்சி குழுக்களை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் விமரிசையாக கொண்டாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நகராட்சிகள் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வரி அதிகளவில் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன. இதனால் பல நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு நகராட்சி சார்பில் விதிக்கப்படும் கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் எனவும் விடுதி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

    புதுவை அரசு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி காவல்துறை தலைமையகத்தின் உத்தரவின்படி சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பூங்காக்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் புதுவை ரெயில் நிலையத்தில் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையில் போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினார்கள். பயணிகளின் உடைமை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது புதுவை ரெயில்வே போலீசாரும் உடனிருந்தனர்.
    புதுவையில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அவ்வப்போது அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு நேற்றுடன் (புதன்கிழமை) முடிவடைந்தது.

    இந்தநிலையில் புதுவை அரசு செயலாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதுவையில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த (ஜனவரி) மாதம் 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாள்தோறும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கும் வகையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் ஊரடங்கில் முழு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த 3 நாட்களில் இரவு நேர ஊரடங்கு அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை அமலில் இருக்கும். சமூக, பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் கூடுவது தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது

    கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் கண்டிப்பாக கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி விற்பனை செய்ய அந்த துறையின் அனுமதியை பெற வேண்டும். மதுபான கடைகள் மற்றும் பார்கள் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும்.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகிற 24, 25-ந் தேதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் இரவு 10 மணிக்கு பிரார்த்தனைகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் அனைத்து வழிபாட்டு தலங்களும் செயல்படலாம். வழிபாட்டு தலங்களில் இனி திருமணங்களை நடத்தலாம். ஆனால் அங்கு 25 பேர் மட்டுமே ஒன்று கூட வேண்டும்.

    கடற்கரை, பூங்கா போன்றவை இரவு ஊரடங்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் திறந்திருக்கலாம். இங்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

    புதுவை மாநிலத்தில் வழக்கம்போல் கோவில் திருவிழாக்கள், மத விழாக்களுக்கு தடை இல்லை. அதேநேரத்தில் இந்த நிகழ்ச்சிகளின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஒவ்வொருவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

    திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம். இறுதி ஊர்வலங்களில் 20 பேர் வரை கலந்துகொள்ளலாம். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தடுப்பூசி போடுவதில் புதுச்சேரி பின்தங்கியுள்ளது. எனவே வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சுகாதார துறை உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். மத்திய அரசு அறிவுறுத்தலின்படி கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

    உலக நாடுகளில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவுவதால் வெளிநாடுகளில் இருந்து புதுவைக்கு வருபவர்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சென்டாக் மாணவர்களுக்கு ரூ.15 கோடியே 34 லட்சம் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பல்வேறு கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனையின் பயன்பாட்டிற்கு கணினி மயமாக்கப்பட்ட ரேடியோகிராபி எந்திரம் ஒன்று வாங்குவதற்கு ரூ.9 லட்சத்து 52 ஆயிரம் அளித்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பாசிக் நிறுவனத்தின் செயல்பாட்டை மீட்டெடுக்கவும், லாபகரமாக இயக்கவும், மூலதன முதலீட்டின் இரண்டாவது தவணையாக ரூ.2 கோடி நிதிக்கொடை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவம், தொழில்நுட்பம், செவிலியர் பாடப் பிரிவுகளின் பல்வேறு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியுதவி தொகையை வழங்குவதற்காக ரூ.15 கோடியே 34 லட்சம் நிதிச் செலவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் மற்றும் 40 அடி நீள தியாக சுவர் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்
    புதுச்சேரி:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 இடங்களில் தேசியக்கொடியுடன் கூடிய 100 அடி உயர கொடிகம்பம் மற்றும் தியாகச் சுவர் அமைக்கப்பட உள்ளது. அதன்படி புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் இந்த பிரமாண்ட கொடிக்கம்பம் மற்றும் 40 அடி நீளமும், 12 அடி உயரமும் கொண்ட தியாகச்சுவர் அமைக்கப்படுகிறது.

    இதற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா, சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் கனக சபாபதி, சக்ரா விஷன் பவுண்டேசன் நிர்வாகி ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தியாகச்சுவரின் நினைவு தூண்களில் இந்தியாவிற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப் படும். அதன் அருகில் உள்ள கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்து பார்த்தால் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த கொடிக்கம்பம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் இந்த திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    50-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது ஏ.ஆர். ரகுமான் பாடிய தாய் மண்ணே வணக்கம் என்ற பாடலை போல 75-வது ஆண்டில் ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்க 12 மொழிகளில் பிரபல பாடகர்கள், நடிகர், நடிகைகள் பாடிய வீடியோ ஆல்பம் உருவாகி வருகிறது. மேலும் 6 கி.மீ. நீளத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் களின் போராட்ட நிகழ்வுகள் உலகின் மிக நீளமான ஓவியமாக வரையப்பட உள்ளது.


    ×