என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை கடற்கரை
    X
    புதுவை கடற்கரை

    புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை இல்லை

    புதுவையில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அவ்வப்போது அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு நேற்றுடன் (புதன்கிழமை) முடிவடைந்தது.

    இந்தநிலையில் புதுவை அரசு செயலாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதுவையில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த (ஜனவரி) மாதம் 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாள்தோறும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கும் வகையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் ஊரடங்கில் முழு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த 3 நாட்களில் இரவு நேர ஊரடங்கு அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை அமலில் இருக்கும். சமூக, பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் கூடுவது தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது

    கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் கண்டிப்பாக கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி விற்பனை செய்ய அந்த துறையின் அனுமதியை பெற வேண்டும். மதுபான கடைகள் மற்றும் பார்கள் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும்.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகிற 24, 25-ந் தேதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் இரவு 10 மணிக்கு பிரார்த்தனைகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் அனைத்து வழிபாட்டு தலங்களும் செயல்படலாம். வழிபாட்டு தலங்களில் இனி திருமணங்களை நடத்தலாம். ஆனால் அங்கு 25 பேர் மட்டுமே ஒன்று கூட வேண்டும்.

    கடற்கரை, பூங்கா போன்றவை இரவு ஊரடங்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் திறந்திருக்கலாம். இங்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

    புதுவை மாநிலத்தில் வழக்கம்போல் கோவில் திருவிழாக்கள், மத விழாக்களுக்கு தடை இல்லை. அதேநேரத்தில் இந்த நிகழ்ச்சிகளின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஒவ்வொருவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

    திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம். இறுதி ஊர்வலங்களில் 20 பேர் வரை கலந்துகொள்ளலாம். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தடுப்பூசி போடுவதில் புதுச்சேரி பின்தங்கியுள்ளது. எனவே வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சுகாதார துறை உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். மத்திய அரசு அறிவுறுத்தலின்படி கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

    உலக நாடுகளில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவுவதால் வெளிநாடுகளில் இருந்து புதுவைக்கு வருபவர்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×