search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட காட்சி.
    X
    புதுவை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட காட்சி.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகும் புதுவை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    ஊரங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுவை தயாராகி வருகிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஊரடங்கில் முழு தளர்வு அளித்து அரசு அனுமதி அளித்துள்ளது.

    ஆனால் தமிழகத்தில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகிறது. இதற்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. மேலும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு வருகிறார்கள். இதற்காக பிரபல இசை, கலை நிகழ்ச்சி குழுக்களை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் விமரிசையாக கொண்டாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நகராட்சிகள் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வரி அதிகளவில் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன. இதனால் பல நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு நகராட்சி சார்பில் விதிக்கப்படும் கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் எனவும் விடுதி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

    புதுவை அரசு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி காவல்துறை தலைமையகத்தின் உத்தரவின்படி சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பூங்காக்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் புதுவை ரெயில் நிலையத்தில் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையில் போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினார்கள். பயணிகளின் உடைமை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது புதுவை ரெயில்வே போலீசாரும் உடனிருந்தனர்.
    Next Story
    ×