search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    புதுவையில் தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படும்- ரங்கசாமி அறிவிப்பு

    புதுவையில் தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் தனியார் ஓட்டலில் சுற்றுலா தொழில் முனைவோர் கூட்டம் நடந்தது. இதன் நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    புதுச்சேரி அழகிய சிறிய மாநிலம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நாம் நினைக்கும் திட்டங்களை நிறைவேற்ற முழு அதிகாரம் தேவை. அது நம்மிடம் இல்லை. புதுச்சேரியில் முன்பு 30 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு விவசாயம் நடந்தது. தற்போது படிப்படியாக குறைந்து 10 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு நடக்கிறது.

    புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். சுற்றுலா வருபவர்களுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள் கொடுக்க வேண்டியது அவசியம். இதற்காக தான் முன்பு ஆட்சியில் இருந்த காலத்தில் தங்கும் விடுதிகள் கட்டினால் அரசு சார்பில் ரூ.1 கோடி வரை மானியம் வழங்கினோம்.

    சுற்றுலா பயணிகளுக்கு நல்ல உணவு வழங்க வேண்டும். புதுச்சேரியில் இன்னும் 2 ஆயிரம் அறைகள் நமக்கு தேவை. எனவே ஓட்டல் உரிமையாளர்கள் அதனை கட்ட முன் வர வேண்டும். ஓட்டல்கள் கட்ட வரும்போது அரசு அதிகாரிகள் உடனடியாக அரசு அனுமதி வழங்குவது இல்லை. இது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

    இதனால் பலர் புதுவையில் தொழில் தொடங்க முன்வருவது இல்லை. இதனை முறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாராவது தொழில் தொடங்க வந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இதற்காக விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் புதுவைக்கு ரூ.1,000 கோடியில் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தில் இதுவரை ரூ.60 கோடி அளவுக்கு மட்டும் தான் பணிகள் நடந்துள்ளது. எங்கள் ஆட்சி வந்த பின்னர் தான் ரூ.200 கோடி அளவுக்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    சேதராப்பட்டில் அரசுக்கு சொந்தமான 750 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 400 ஏக்கர் நிலத்தை மத்திய அரசுக்கு சுற்றுலாவை மேம்படுத்த கொடுத்தால் ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்ய தயாராக உள்ளனர். இதற்காக அந்த நிலத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×