என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சிவகுமார் அதே ஊரைச் சேர்ந்த காளி என்பவர் ராமசாமியிடம் ரூ. 40,000 கடன் வாங்கினார். 3 சதவீத வட்டி என்ற நிபந்தனையின் பேரில் அவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 38), ஜவுளி கடை ஊழியர். இவரது மனைவி சிவகாமி

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகுமார் அதே ஊரைச் சேர்ந்த காளி என்பவர் மூலம் ராமு என்ற ராமசாமியிடம் ரூ. 40,000 கடன் வாங்கினார். 3 சதவீத வட்டி என்ற நிபந்தனையின் பேரில் அவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பெரும் தொகையை கொடுத்த பிறகும் கடன் கொடுத்தவர்கள் நீ கொடுத்தது வட்டிக்கு சரியாகிவிட்டது, இன்னும் ரூ.30 ஆயிரம் தரவேண்டும் என கூறியுள்ளனர்.

    மேலும் அவர்கள் சிவகுமாரின் மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அதன் பிறகு சிவகுமார் கூடுதல் தொகையை வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் கொண்டு கொடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதனை விற்றுவிட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் மனமுடைந்த சிவகுமார், மனைவியிடம் கந்துவட்டி கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிவகாமிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் உங்கள் கணவர் சிவகுமார் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து சிவகாமி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் இறந்துவிட்டார்.

    இதனை தொடர்ந்து கந்துவட்டி கொடுமையால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் சிவகாமி புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி காளியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


    கடந்த சில நாட்களாக சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
    விருதுநகர்:

    சமீபகாலமாக மழை மறைவு பிரதேசமாக நீடித்து வரும் விருதுநகரில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்களில் பெய்த மழையால் நகரின் பிரதான சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் பழைய பஸ் நிலையத்தை சுற்றிலும் மழை நீர் வெள்ளமாக ஓடியது. இதனால் பயணிகளுக்கும், பஸ் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. எனினும் நகரில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் இருந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பெய்த 1 மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. கடந்த சில நாட்களாக சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
    கடந்த ஆண்டு வெங்காயம் முழுவதும் அழுகி விட்டதால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்தனர். வெங்காயத்திற்கு காப்பீடு செய்தும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
    காரியாபட்டி:

    காரியாபட்டி தாலுகா ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி, மறைக்குளம், சொக்கனேந்தல், சித்தனேந்தல், முஷ்டக்குறிச்சி, தோப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். கடந்த வருடம் இந்த பகுதியில் வெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டது.

    ஆனால் அப்போது பெய்த மழையின் காரணமாக வெங்காய பயிர்கள் முழுவதும் அழுகி எந்த மகசூலும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு ஏக்கர் வெங்காயம் பயிரிடப்பட வேண்டும் என்றால் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஒவ்வொரு விவசாயும் 5 ஏக்கர் வரை விவசாயம் செய்கின்றனர்.

    கடந்த ஆண்டு வெங்காயம் முழுவதும் அழுகி விட்டதால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்தனர். வெங்காயத்திற்கு காப்பீடு செய்தும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.

    இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு வெங்காய விளைச்சலை அதிகமாக்க வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில 301 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை மையங்களில் 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 44,604 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43, 525 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 96 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். 551 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதுடன் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று யாரும் பலியாகவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில 301 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை மையங்களில் 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரியாபட்டி நார்த்தம்பட்டி. விளாம்பட்டி. புதுப்பட்டி விருதுநகர் லட்சுமி நகர், சூலக்கரை, கருப்பசாமி நகர், பாண்டியன் நகர், மாடர்ன்நகர், அருப்புகோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், எம்.ரெட்டியபட்டி, வன்னியம்பட்டி இளம்திரைக்கொண்டான், மம்சாபுரம், நக்கனேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்ட பட்டியலின்படி 20 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகாசியில் ரேஷன் கடையில் சமூக இடைவெளி மாயமானதால் கொரோனா தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.
    சிவகாசி:

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் அரசு சார்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் கூடி வருகிறார்கள். இதனால் கொரோனா மீண்டும் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சிவகாசி நேரு காலனியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று காலை பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் கூடினர்.

    இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அரசு அறிவித்து இருந்த வழிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், முக கவசம் அணியாமல் நின்று கொண்டு இருந்தனர். இதனால் தொற்று பரவும் அபாய நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    சிவகாசி தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வட்ட வழங்கல் அலுவலர் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

    அவ்வாறு இல்லை என்றால் குறைந்து வரும் கொரோனா தொற்று விரைவில் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ரேஷன் கடைகள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    சாத்தூர் அருகே மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
    சாத்தூர்:

    விருதுநகர் ராஜலெட்சுமி தியேட்டர் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 48). இவர் பந்தல்குடியில் உள்ள உறவினர் இறுதிச்சடங்கிற்கு சென்று விட்டு அங்கிருந்து இவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். அப்போது ஆர்.ஆர்.நகர் - பந்தல்குடி செல்லும் சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக இவர் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் துரைப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பையநாயக்கன்பட்டி போலீசார் துரைப்பாண்டியின் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், புல்லலக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் குமார் (20) என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள காளியம்மன் கோவிலில் திருமணம் நடந்ததாக தெரியவந்தது.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளதாக சைல்டு லைன் அமைப்பினர் கொடுத்த தகவலின் பேரில் விருதுநகர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் புஷ்பவல்லி (வயது59) என்பவர் அல்லம்பட்டி மற்றும் புல்லலக்கோட்டை பகுதியில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், புல்லலக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் குமார் (20) என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள காளியம்மன் கோவிலில் திருமணம் நடந்ததாக தெரியவந்தது. அதன்பேரில் மேலும் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமி வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை கடத்தி வந்து சிறுமியை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதன்பேரில் புஷ்பவல்லி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் புறநகர் போலீசார் ரமேஷ்குமார், அவரது பெற்றோர் மொட்டையசாமி (42), தமிழ்செல்வி (39), சிறுமியின் தந்தை ஆகிய 4 பேர் மீதும் குழந்தை திருமணத்தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 154 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கூமாபட்டி பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்து வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருத்தப்பாண்டி, பாபு, மணிகண்டன், கருணாகரன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர், கூமாபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 52 மது பாட்டில்களும் மானகசேரி பகுதியில் 18 மது பாட்டில்களும், கூமாபட்டி பகுதியில் 84 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மங்காபுரம் தேவர் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 42), கல்லணை ஓடை தெருவைசேர்ந்த கருப்பசாமி (38), வடக்குத்தெரு மானகசேரியை சேர்ந்த குருவைய்யா (38), கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (54), பாரதியார் காலனியை சேர்ந்த விஜயகுமார் (33) உள்பட 6 பேர் சேர்ந்து விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 154 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    சிவகாசி அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் ரிசர்வ்லைன் இந்திராநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு காசு வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்த விஜயராகவன் (வயது39), மகேஷ்குமார் (49), மாரிமுத்து (35), நாகராஜன் (61), கேசவன் (36) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1700-யை பறிமுதல் செய்தனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 43,200 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44,415 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 43,200 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 106 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 692 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 524ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று அரசு ஆஸ்பத்திரிகளில் 184 பேரும், சிகிச்சை மையங்களில் 42 பேரும் நோய் பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 15 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப்பட்டியலில் 59 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு 2 சதவீதமாக உள்ளது.
    தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட வாய்ப்பு அளித்தால் கிராமமக்கள் அருகிலுள்ள இம்மாதிரியான ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட முன்வருவார்கள் என மத்திய அரசு கருதுகிறது.
    விருதுநகர்:

    மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையை வேகப்படுத்தி உள்ளது. 3-ம் அலை தாக்கம் இருக்கும் என்று பல்வேறு மருத்துவ வல்லுனர்கள் கூறி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதற்குள் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.

    அதற்கு காரணம் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து தடுப்பூசி போட வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி கிராமப்பகுதிகளில் ஒரு டாக்டர் பணியாற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட வாய்ப்பு அளித்தால் கிராமமக்கள் அருகிலுள்ள இம்மாதிரியான ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட முன்வருவார்கள் என மத்திய அரசு கருதுகிறது.

    இதன் மூலம் கிராம மக்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போட முன்வரும் நிலை ஏற்படும். எனவே இதற்cகான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

    விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. தற்போதுள்ள நிலையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    ஆனால் கிராமப்புறங்களில் உள்ள இம்மாதிரியான ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டால் கட்டணமில்லாமல் கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்யும்.


    கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக நாளை (திங்கட்கிழமை) முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக நாளை (திங்கட்கிழமை) முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட்., விருதுநகர் மண்டலம் மூலம் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நாளை காலை 6 மணிமுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மற்றும் மயிலாடு துறை உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பஸ்களை இயக்க ஏதுவாக அனைத்து பஸ்களுக்கும் கிருமிநாசினி அடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    மேலும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். தமிழக அரசு ஆணைப்படி விருதுநகர் மாவட்டத்தில் இயக்கப்படும் சாதாரண நகர பஸ்களில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அதேபோன்று மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்ய கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் பாதுகாப்பான பொது போக்குவரத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
    ×