என் மலர்tooltip icon

    விருதுநகர்

    திருத்தங்கல் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சுக்கிரவார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்கிற பெரியமாரியப்பன் (வயது 50) என்பவர் தனது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பெரியமாரியப்பனை கைது செய்தனர். இதேபோல் சத்யாநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்த சிட்டி (69), பால்பாண்டி (42) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 11 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருத்தங்கல் போலீசார் அதிவீரன்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு கஞ்சா விற்பனை செய்த சிவகுமார் (40) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 43,977 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,013 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,977 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 499 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதுடன் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பிற்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் 244 பேரும், மையங்களில் 14 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் நேற்று 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநில பட்டியலில் 39 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குருவிகுளம் அருகே நகை வியாபாரி கொலை வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    திருவேங்கடம்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருணாசலம் ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). நகை பட்டறை உரிமையாளரான இவர், வங்கிகளில் ஏலத்துக்கு வரும் நகைகளை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.

    இவர் கடந்த 5-ந்தேதி தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே மலையாங்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளியை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

    விசாரணையில், செந்தில்குமாரை கொலை செய்தது அவரது நண்பரான அருப்புக்கோட்டை அருகே நல்லான்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் (21) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான செல்வகுமார் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    வங்கிகளில் ஏலத்துக்கு வரும் நகைகளை செந்தில்குமார் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தார். அவருக்கு உதவியாக நான் செயல்பட்டு வந்தேன். எனவே அவர் எனக்கு கமிஷன்தொகை கொடுத்து வந்தார். இதனால் நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனில் இருந்த மனைவியின் புகைப்படத்தை செந்தில்குமாரிடம் காண்பித்தேன். அப்போது எனது மனைவியின் உருவத்தைப் பார்த்து செந்தில்குமார் கேலி கிண்டல் செய்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவரைக் கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அதன்படி சம்பவத்தன்று குருவிகுளம் அருகே மலையாங்குளம் கிராமத்தில் உள்ள எனது குல தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட செல்வோம் என்று செந்தில்குமாரை அவரது காரில் அழைத்து வந்தேன். மலையாங்குளம் கிராமத்தில் உள்ள குளத்தின் அருகில் காரை நிறுத்தி விட்டு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டோம்.

    பின்னர் குளத்தின் வழியாக திரும்பி வந்தபோது, நான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டிக்ெகாலை செய்தேன்.

    இவ்வாறு செல்வகுமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் செல்வகுமாரை சங்கரன்கோவில் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 488 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44,974ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,961 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 37 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 488 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 112 பேரும் சிகிச்சை மையங்களில் 17 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றும் மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலப்பட்டியலில் 43 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தற்போதைய நிலவரப்படி பெரியகுளம் கண்மாயை பொறுத்தவரை 3 மாதத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் ஆண்டாள் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. அத்துடன் எண்ணற்ற மரங்களும் சேதமடைந்தன. இந்தநிலையில் பலத்த மழையினால் நீர்நிலையில் நீர்வரத்து அதிகரித்தது.

    விருதுநகர் மாவட்டத்திலுள்ள கண்மாய் மற்றும் குளங்களில் மிகவும் பெரியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய். இந்த கண்மாய்க்கு பலத்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தொடர்மழையின் காரணமாக பெரியகுளம் கண்மாயில் நீர் வரத்து அதிகரித்ததுடன், கண்மாய் நிரம்பி உள்ளது. தற்போதைய நிலவரப்படி பெரியகுளம் கண்மாயை பொறுத்தவரை 3 மாதத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்தால் கூடுதலாகவும் தண்ணீர் தேங்கிவைக்க வாய்ப்பு உள்ளது.

    ராஜபாளையம் அருகே 2 மகள்களும் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பாரதி நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி- தங்கம் தம்பதியினரின் மூத்த மகள் பேச்சியம்மாள். இவர் அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து திருமணம் செய்து அங்கேயே வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இளையமகளான கலாவும் காதலில் விழுந்துள்ளார். அவர் தனது சகோதரி கணவரின் சகோதரர் மருதுபாண்டியை காதலித்தார்.

    இந்த காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என கருதிய கலா அவர்களுக்கு தெரியாமல் மருதுபாண்டியை சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

    2 மகள்களும் தன்னிடம் காதலை மறைத்து அதே ஊரில் அண்ணன்- தம்பியை திருமணம் செய்து கொண்டது தாயார் தங்கத்துக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

    மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். கணவர் கிருஷ்ணசாமி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தங்கம் உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொண்டனர். மேலும் பிரியங்காவுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே கோதைநாச்சியார்புரம் பகுதியில் இருதரப்பினர் இடையே கோவில் மற்றும் நடைபாதை பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்கள் குடிபோதையில் வாகனத்தில் வேகமாக சென்றபோது அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியங்கா மற்றும் சிலர் அவர்களை கண்டித்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

    இதைதொடர்ந்து இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொண்டனர். மேலும் பிரியங்காவுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோதலில் ராஜகுரு என்ற வாலிபருக்கு கால் முறிந்தது. அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருதரப்பினர் மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சம்பவ இடத்தில் போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு மாரிராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரு பிரிவினர் மீதும் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் ஊரில் இருந்து வெளியே யாரும் செல்வதற்கு போலீசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    ஆலங்குளம் கூட்டுறவு வங்கி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் கூட்டுறவு வங்கி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. டாக்டர் செந்தட்டி காளை தலைமையில், சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் காளீஸ்வரி, மகாலட்சுமி, ஆகியோர் அடங்கிய சுகாதார குழு 177 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதில் சமூக ஆர்வலர் ராதா கிருஷ்ணன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் ரவிசங்கர், தி.மு.க. பிரமுகர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    டாஸ்மாக்கடையில் மது பாட்டில்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாயில்பட்டி:

    தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் பஸ் ஸ்டாப்பில் அரசு மதுபானக்கடை உள்ளது. இதில் விற்பனையாளராக விஜயகரிசல்குளத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது 47) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் டாஸ்மாக்கடையை திறக்க சென்றார். அப்போது ஷட்டரில் இருந்த பூட்டு காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்குள் சென்றபோது 31 மதுபாட்டில்கள், ரூ.5,760 ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக வெம்பக்கோட்டை போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
    ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கீழ செல்லையாபுரத்தில் 150 பொது மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    தாயில்பட்டி:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின்பேரில் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி, செவல்பட்டி, நதிகுடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் 510 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமிற்கு தாயில்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தட்டி காளை தலைமை தாங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கீழ செல்லையாபுரத்தில் 150 பொது மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    சாத்தூர் அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டமலையில் உள்ள மீன் குடோன் அருகில் பணம் வைத்து சூதாடிய அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது46), கருப்பசாமி (43), வனமுருகன் (45), செல்வம் (58) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சீட்டுக்கட்டுகளையும், ரூ.1,240-யும் பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் கந்துவட்டி கொடுமையால் ஜவுளி கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 38), ஜவுளி கடை ஊழியர். இவரது மனைவி சிவகாமி.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகுமார் அதே ஊரைச் சேர்ந்த காளி என்பவர் மூலம் ராமு என்ற ராமசாமியிடம் ரூ. 40,000 கடன் வாங்கினார். 3 சதவீத வட்டி என்ற நிபந்தனையின் பேரில் அவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பெரும் தொகையை கொடுத்த பிறகும் கடன் கொடுத்தவர்கள் நீ கொடுத்தது வட்டிக்கு சரியாகிவிட்டது, இன்னும் ரூ.30 ஆயிரம் தரவேண்டும் என கூறியுள்ளனர்.

    மேலும் அவர்கள் சிவகுமாரின் மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அதன் பிறகு சிவகுமார் கூடுதல் தொகையை வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் கொண்டு கொடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதனை விற்றுவிட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் மனமுடைந்த சிவகுமார், மனைவியிடம் கந்துவட்டி கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிவகாமிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் உங்கள் கணவர் சிவகுமார் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து சிவகாமி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் இறந்துவிட்டார்.

    இதனை தொடர்ந்து கந்துவட்டி கொடுமையால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் சிவகாமி புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி காளியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×