என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகரில் திருமண மண்டப அதிபரை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    விருதுநகர் பெத்தனாட்சி நகரில் திருமண மண்டபம் நடத்தி வருபவர் பிர்லாசேகரன்(வயது 77). இவர் சம்பவத்தன்று தனது திருமண மண்டபத்தில் அலுவலக வேலையில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அங்கு ஒரு வாலிபர் வந்தார். அவர் திருமண மண்டபத்திற்கு வாடகை எவ்வளவு? என்பது உள்ளிட்ட பல் வேறு   விவரங்களை கேட்டார். பிர்லாசேகரன் அதற்கு பதில் அளித்து கொண்டிருந்தபோது  திடீரென அந்த வாலிபர் பிர்லாசேகரனை தாக்கினார்.

    இதனால் அவர் நிலைகுலைந்து போனார். இதனை பயன்படுத்தி பிர்லாசேகரன் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அந்த வாலிபர் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து விருதுநகர் புறநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

    பட்டப்பகலில் திருமண மண்டபத்தில் புகுந்து வாடகை விசாரிப்பதுபோல் நடித்து உரிமையாளரை தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார். அதன் பேரில் துணை சூப்பிரண்டு அர்ச்சனா தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். 

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் பராசக்தி நகரை சேர்ந்த சவுந்தரபாண்டியன்(38) என்பவர்தான் நகையை பறித்து சென்றவர் என தெரியவந்தது-. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. 

    குற்றவாளியை விரைந்து பிடித்த போலீசாருக்கு வெகுமதி மற்றும் நற்சான்றிதழகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் வழங்கினார்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்றுமதி நிறுவன அதிபரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் கணேஷ்பாபு(வயது56). இவர் பஞ்சவர்ணம் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு வாட்ஸ்அப் மூலம் கனடாவை சேர்ந்த பெஞ்சமின் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. 

    அவர் கால்நடை தீவனம் தயா ரிக்க மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. அதனை இந்தியாவில் இருந்து கவிதா கம்பெனி மூலம் அனுப்பினால் 2மடங்கு லாபம் கிடைக்கும்  என கணேஷ்பாபுவிடம் கூறினார்.

    இதனை ஏற்றுக்கொண்ட கணேஷ்பாபு ஏற்றுமதி செய்வதாக உறுதி அளித்தார். அப்போது பெஞ்சமின் முன்பணம் கட்டவேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பல்வேறு தவணைகள் மூலம் ரூ.4லட்சத்து 96 ஆயிரத்தை கணேஷ்பாபு அனுப்பியுள்ளார்.

    ஆனால் அதன் பிறகு பெஞ்சமினை தொடர்பு கொள்ள முடியவில்லை.  தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கணேஷ்பாபு விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் புகார் செய்தார்.

    அவரது உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி பெஞ்சமின், ரிச்சர்டு, கவிதாசர்மா, சந்தீப்குப்தா, ஜோதிஷா உள்பட 10பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கற்பகச்செல்வி(வயது 19). இவரும் கரைவளந்தான்பட்டியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.தனது காதல் விவகாரத்தை கற்பகச்செல்வி தனது பெற்றோரிடம் தெரிவித் துள்ளார். 

    இதையடுத்து அவரது தந்தை முருகன், முறைப்படி பெண் பார்க்க வரச்சொல்லுமாறும், பேசி முடிவெடுக்கலாம் என்று மகளிடம் கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த கற்பகச்செல்வி காதலனிடம், குடும்பத்துடன் வந்து முறைப்படி பெண்பார்க்க வருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து குறிப்பிட்ட நாளில் காதலன் வீட்டுக்கு வந்து பெண்பார்க்க வருவார் என்று கற்பகச்செல்வி மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். ஆனால் அன்று அவர்கள் வரவில்லை. இதனால் கற்பகச்செல்வி சோகமாக காணப்பட்டார்.

    காதலன் தன்னை ஏமாற்றியதால் விரக்தியடைந்த கற்பகசெல்வி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காதலன் பெண் பார்க்கவராமல் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர் மாவட்ட விவசாயிகள் ஆதார் விவரங்களை திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    --பி.எம். கிஷான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ6ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 80,150 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். 

    இதுவரை இந்த திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து விவசாயிகளுக்கு 10 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. தற்போது விவசாயிகள் 11வது தவணை (1.4.2022முதல்31.7.2022 வரை) தொகையை பெறுவதற்கு ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம். 

    ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்து விவசாயிகள் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து பி.எம். கிஷான் திட்ட வலைதளத்தில் ஓ.டி.பி. மூலம் சரிபார்க்கலாம். ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ&சேவை மையங்களின் மூலம் பி.எம். கிஷான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்க்கலாம். 

    இதற்கு கட்டணமாக ரூ.15 பொது சேவை மையங்களுக்கு செலுத்தவேண்டும். இந்த இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனடைந்த விவசாயிகள் தங்கள் ஆதார் விவரங்களை உடனடியாக திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ராமேசுவரம் ராம நாதசுவாமி கோவிலுக்கு அமாவாசை, சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதலே திரளான பக்தர்கள் வருகை தந்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை சதுர கிரியில் அமைந்துள்ள சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இக்கோவில் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    ஒவ்வொரு மாதம் வரும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நாட்களில் சதுரகிரி மலையேற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக ஆடி, தை அமாவாசை, மகா சிவாரத்திரி தினத்தன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

    அதன்படி இன்று மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை (நாளை) முன்னிட்டு நேற்று முதல் வருகிற 3-ந் தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    சிவனுக்கு விசே‌ஷமான சிவராத்திரியான இன்று மலையேறுவதற்கு மலை அடிவாரத்தில் அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறையினர் பக்தர்களின் உடமைகள் சோதனை செய்து மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிவரை மலையேற அனுமதி வழங்கப்பட்டது.

    சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர -சந்தன மகாலிங்கத்துக்கு 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இன்று இரவு முதல் நாளை காலை வரை 4 கால பூஜைகள் நடைபெறுகிறது.

    ராமேசுவரம் ராம நாதசுவாமி கோவிலுக்கு அமாவாசை, சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதலே திரளான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு இக்கோவிலில் நடக்கும் 4 கால பூஜையில் பக்தர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருஉத்தரகோசமங்கை மங்கள நாதர் கோவிலில் இன்று மாலை முதல் சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.

    இதேபோல் சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் இன்று காலை முதல் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேற்கண்ட கோவில்களில் இன்று இரவு முதல் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் 4 கால பூஜைகள் பூஜைகள் நடக்கிறது. இரவு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 
    விருதுநகரில் 10ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தையல் ஆசிரியையாக வேலை பார்ப்பவரின் மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், சின்னபேராலி கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 23ந்தேதி மாணவியின் தாயார் பணி நிமித்தமாக  சென்னை சென்றுவிட்டார். இதனை அறிந்த அய்யனார் மாணவியை குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததால் மிரட்டியுள்ளார்.

    பின்னர் மாணவியை புல்லலக்கோட்டையில் உள்ள பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்ற அய்யனார், அங்கு வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.  அதன் பிறகு நேற்று முன்தினம் (26ந்தேதி) மாணவியை சின்னபேராலிக்கு வர வழைத்து அங்குள்ள கருப்பசாமி கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.

    தொடர்ந்து நேற்று புல்லலக்கோட்டைக்கு  மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றிய விவரங்கள் மாணவியின் தாயாருக்கு தெரியவந்ததும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில்  புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் அய்யனார் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    வத்திராயிருப்பு அருகே தொழிலாளியை தாக்கி செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் சின்னஒட்டக்காரன்(வயது 52). தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளி. இவர் சம்பள பணத்துடன் சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த தினேஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் வழிமறித்து பணத்தை கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அரிவாள் மற்றும் கம்பால் தாக்கினர். 

    இதில் சின்னஒட்டக்காரன் காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.11 ஆயிரத்தை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கூமாபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. 

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், விக்னேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
    நாளை மறுநாள் (2-ந்தேதி) கவுன்சிலர்கள் பதவியேற்க உள்ள நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் எப்போது சிவகாசி திரும்புவார்கள்? என்பது மர்மமாக உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக உருவாக்கப்பட்டு முதன் முறையாக தேர்தலை சந்தித்தது. இந்த மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 24-யை வென்று தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்று விட்டது. 11 வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    ஆனால் அதில் 10 பேர் திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் தி.மு.க.வுக்கு தாவலாம் என கருத்து நிலவியது. இருப்பினும் 10 பேரும் ஆன்மீக தலங்களுக்கு சென்றிருப்பதாக கூறப்பட்டது. கும்பகோணம், திருநள்ளாறு பகுதிகளில் 10 பேரும் இருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது.

    ஆனால் இன்று அவர்கள் சென்னையில் முகாமிட்டிருப்பதாக தெரிகிறது. இவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவரை சந்தித்து அக்கட்சியில் இணைய உள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இது தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

    நாளை மறுநாள் (2-ந்தேதி) கவுன்சிலர்கள் பதவியேற்க உள்ள நிலையில் இவர்கள் எப்போது சிவகாசி திரும்புவார்கள்? என்பது மர்மமாக உள்ளது.

    அருப்புக்கோட்டை அருகே தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெம்பக்கோட்டையை  சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 55), தொழிலாளி. இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது தாயுடன் வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கிய அருணாசலத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் இயல்பான நிலைக்கு வரவில்லை. இதனால் விரக்தியில் இருந்த அருணாசலம் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள பலபட்டியை சேர்ந்தவர் பாலுமகேந்திரன் (38). இவர் அதே பகுதியில் அச்சாபீஸ் நடத்தி வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையான பாலுமகேந்திரனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

    இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பட்டாசு விபத்தில் தீக்காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மண்குண்டாம்பட்டியில் சண்முகையா என்பவர் ரோல் கேப் தயாரிக்கும் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். 

    இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். திருத்தங்கல் அருகே உள்ள ஆலமரத்து பட்டியை சேர்ந்த வைரமுத்து மகன் வைகுண்ட ராஜா (36) என்ற தொழிலாளி நேற்று பட்டாசு ஆலையின் தனியறையில் பாம்பு மாத்திரை உற்பத்திக்கு மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

    அப்போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென தீப்பிடித்தது.  இதில் உடல் கருகிய வைகுண்ட ராஜாவை சக தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வைகுண்டராஜா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வெம்பகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இறந்த வைகுண்டராஜாவுக்கு தனலட்சுமி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
    சாத்தூர் அருகே அழுகிய நிலையில் ஆண்பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள எம்.சுப்பையாபுரம் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் உடல், மண்டைஓடு, எலும்புக்கூடு கிடப்பதாக பெத்துரெட்டியபட்டி கிராம நிர்வாக அதிகாரி மதன்குமாருக்கு தகவல் கிடைத்தன. 

    அவர் சாத்தூர் போலீசுக்கு இது தொடர்பாக புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூர் போலீசார் அங்கு கிடந்த மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளை சேகரித்து தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    மேலும் அதன் அருகில் கிடந்த பொருட்களையும் சேகரித்தனர். இறந்து கிடந்தவர் 50 வயது மதிக்கத்தக்க ஆணாக இருக்கலாம் என தெரிகிறது. 

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை வீசி விட்டுச்சென்றார்களா? என்ற கோணத்தில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே அனுமதியின்றி பதுக்கிய மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தண்டியனேந்தல் பகுதியில் குண்டாறு அருகே உள்ள தனியார் இடத்தில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

    அதையடுத்து தாசில்தார் தனக்குமார் உத்தரவின் அடிப்படையில் மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், வடக்கு புளியம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரத்தினம், தலையாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் தண்டியனேந்தல் பகுதியில் ஆய்வு செய்தனர். 

    அப்போது தண்டியனேந்தல் கிராமம் அருகே அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 20 யூனிட் மணலை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரியாபட்டி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர்.
    ×