என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள்
    X
    சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள்

    மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

    ராமேசுவரம் ராம நாதசுவாமி கோவிலுக்கு அமாவாசை, சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதலே திரளான பக்தர்கள் வருகை தந்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை சதுர கிரியில் அமைந்துள்ள சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இக்கோவில் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    ஒவ்வொரு மாதம் வரும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நாட்களில் சதுரகிரி மலையேற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக ஆடி, தை அமாவாசை, மகா சிவாரத்திரி தினத்தன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

    அதன்படி இன்று மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை (நாளை) முன்னிட்டு நேற்று முதல் வருகிற 3-ந் தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    சிவனுக்கு விசே‌ஷமான சிவராத்திரியான இன்று மலையேறுவதற்கு மலை அடிவாரத்தில் அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறையினர் பக்தர்களின் உடமைகள் சோதனை செய்து மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிவரை மலையேற அனுமதி வழங்கப்பட்டது.

    சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர -சந்தன மகாலிங்கத்துக்கு 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இன்று இரவு முதல் நாளை காலை வரை 4 கால பூஜைகள் நடைபெறுகிறது.

    ராமேசுவரம் ராம நாதசுவாமி கோவிலுக்கு அமாவாசை, சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதலே திரளான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு இக்கோவிலில் நடக்கும் 4 கால பூஜையில் பக்தர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருஉத்தரகோசமங்கை மங்கள நாதர் கோவிலில் இன்று மாலை முதல் சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.

    இதேபோல் சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் இன்று காலை முதல் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேற்கண்ட கோவில்களில் இன்று இரவு முதல் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் 4 கால பூஜைகள் பூஜைகள் நடக்கிறது. இரவு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×