என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான சவுந்தரபாண்டியன்
திருமண மண்டப அதிபரை தாக்கி நகை பறித்தவர் கைது
விருதுநகரில் திருமண மண்டப அதிபரை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் பெத்தனாட்சி நகரில் திருமண மண்டபம் நடத்தி வருபவர் பிர்லாசேகரன்(வயது 77). இவர் சம்பவத்தன்று தனது திருமண மண்டபத்தில் அலுவலக வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் வந்தார். அவர் திருமண மண்டபத்திற்கு வாடகை எவ்வளவு? என்பது உள்ளிட்ட பல் வேறு விவரங்களை கேட்டார். பிர்லாசேகரன் அதற்கு பதில் அளித்து கொண்டிருந்தபோது திடீரென அந்த வாலிபர் பிர்லாசேகரனை தாக்கினார்.
இதனால் அவர் நிலைகுலைந்து போனார். இதனை பயன்படுத்தி பிர்லாசேகரன் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அந்த வாலிபர் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து விருதுநகர் புறநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பட்டப்பகலில் திருமண மண்டபத்தில் புகுந்து வாடகை விசாரிப்பதுபோல் நடித்து உரிமையாளரை தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார். அதன் பேரில் துணை சூப்பிரண்டு அர்ச்சனா தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் பராசக்தி நகரை சேர்ந்த சவுந்தரபாண்டியன்(38) என்பவர்தான் நகையை பறித்து சென்றவர் என தெரியவந்தது-. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.
குற்றவாளியை விரைந்து பிடித்த போலீசாருக்கு வெகுமதி மற்றும் நற்சான்றிதழகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் வழங்கினார்.
Next Story






