என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சிவகாசி சித்திரை திருவிழாவில் பிரம்மாண்ட சாமி ஊர்வலம் நடந்தது.
    சிவகாசி

    சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. 3-ம் நாளான நேற்று நடந்த திருவிழாவில் காளீஸ்வரி மற்றும் கல்லூரி குழுமம் சார்பில் நடைபெற்ற திருவிழாவில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் கேரளாவின் பாரம்பரியமிக்க பஞ்ச வாத்தியங்கள் முழங்கியும், ஸ்ரீகிருஷ்ணா காளிங்க நர்த்தனம், மற்றும் அர்த்தநாரீஸ்வரர் நர்த்தனம், ஸ்ரீவிநாயகர், சம்கார பைரவி, பிரம்மாண்டமான சிலை ஊர்வலம் தனித்தனி வாகனங்களில் தத்ரூ பமான காட்சிகளாக சிறப்பு ஒலி-ஒளியுடன் கூடிய அழகு ரதங்கள் முன்செல்ல பத்திரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் 4 ரத வீதிகளில் நடந்தது. 

    காளீஸ்வரி இன்ஸ்டிட்யூட் ஆப்  மேனேஜ்மென்ட் அண்ட்  டெக்னாலஜி மற்றும் காளீஸ்வரி கல்லூரி, காளீஸ்வரி குடும்பத்தினர் சார்பில் கல்லூரி செயலாளர் செல்வராஜன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 

    சுமார்  2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிவகாசியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான ஊர்வலம் இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு நிறைவடைந்தது. 

    அதனைத் தொடர்ந்து சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்ப ள்ளி மைதானத்தில் லட்சுமணன் சுருதி  இன்னிசை  நிகழ்ச்சியை திரளானோர் கண்டுகளித்தனர். 

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காளீஸ்வரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    தென்காசி ரோட்டுக்கான இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருப்பதால் புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோடு வரை இணைப்புசாலை அமைக்க வேண்டி பொதுமக்கள் நீண்ட நாட்களாக என்னிடம் வலியுறுத்தி வந்தனர். 

    கடந்த ஆட்சியில் (2016-2021) நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசு அதிகாரிகள் மேற்கண்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிடாமல், நிதி வழங்காமல் மக்களின் அத்தியாவசிய தேவைக்கு முக்கியத்துவம் தராமல் இழுத்தடித்ததுடன் பணியை நிறுத்தி வைத்திருந்தனர். 

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் என்னுடைய  தொடர் முயற்சியால் சட்டமன்றத்தில் குரல் எழுப்பி துறை சார்ந்த அதிகாரிகளிடம் கவனத்திற்கு கொண்டு சென்றேன். மக்களுக்காக செயல்பட்டு வரும் தமிழக அரசு தற்போது பணி தொடங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தி பணிகள் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

    மேலும் பணி தொடங்கிட அரசாணை வெளியிட்ட  முதலமைச்சருக்கும், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கும், இதற்கு பரிந்துரை செய்த  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருக்கும்,  தொழில்துறை அமைச்ச ருக்கும், ராஜபாளையம் தொகுதி மக்கள் சார்பாகவும், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரான எனது சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    சாத்தூர் அருகே கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சடையம்பட்டியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதியை சேர்ந்த சுமார் 60 மாணவிகள் கல்லூரி பஸ்சில் இன்று வந்தனர்.

    அந்த பஸ்சை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (வயது 63) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி பகுதியில் வந்த போது பஸ்சின் மெயின் ஆக்சில் கட்டானது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதியது.

    இந்த விபத்தில் அந்த பஸ்சில் பயணம் செய்த கரிசல்குளம் கவுரி, அமுதா (20), ஆலடிபட்டி சுபத்ரா (21), ஏழாயிரம்பண்ணை சுபலட்சுமி (22), செவல்பட்டி பானுஷா (20), அழகுச் செல்வி (20), முத்தீஸ்வரி (20), சந்தனமாரி(20), திருவேங்கடம் அனுஷா (19), புதுப்பட்டி ரேணுகாதேவி (20), மகாலட்சுமி (20), சங்குப்பட்டி கவிதா (20), ஆண்டையாபுரம் ஜெயமாலா (20), ஆவுடை யாள்புரம் மாதவி (20), திருவேங்கடம் சாந்தாராணி (20) சங்குப்பட்டி பிரியா (22), மஞ்சுளா (22), ஆலமநாயக்கன்பட்டி சுவேதா (22) உள்பட 21 மாணவிகள் காயமடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த மாணவிகளை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அவர்களில் படுகாயமடைந்த 6 மாணவிகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
    ராஜபாளையம் அருகே விவசாய தொழிலாளி-முதியவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தனர்.
    ராஜபாளையம்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா வடக்கு பாளையத்தைச் சேர்ந்தவர் அருள் (வயது 45), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த சில வாரங்களாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் வேலை பார்த்த அருள் மதியம் சாப்பிட்டுவிட்டு அங்குள்ள விவசாய கிணற்றில் கை கால் கழுவ இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அருள் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அருள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் குருசாமி (70). குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசி த்து வரும் இவர் சம்பவத்தன்று சேத்தூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகாசி பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
    சிவகாசி

    சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    3-ம் நாளான இன்று  (வியாழக்கிழமை) சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மற்றும் காளீஸ்வரி இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு டெக்னாலஜி  சார்பில் இரவு 7 மணிக்கு மேல்கடை கோவிலில் இருந்து அம்மன் கைலாச பர்வத வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடக்கிறது.  

    ரதவீதியில் வலம் வரும் சமயத்தில் கேரள பாரம்பரியமிக்க அர்த்தநாரீஸ்வரர் நர்த்தனம், ஸ்ரீவிநாயகர், பைரவி, தத்ரூப காட்சிகள் சிறப்பு ஒலி -ஒளியுடன் கூடிய அழகுரதங்கள் முன்செல்ல பத்ரகாளி அம்மன் நகர்வலம் விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்குமாறு காளீஸ்வரி நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

    மேலும் நிர்வாகத்தின் சார்பில் விஜய்டிவி சூப்பர் சிங்கர் புகழ் பரத் & ரக்சிதா பங்கேற்கும் லட்சுமணன் சுருதியின் பிரமாண்டமான இசைநிகழ்ச்சி இரவு 10 மணிக்கு சிவகாசி இந்துநாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் துறையின் விரிவாக்கப்பணி சார்பில் சாட்சியாபுரம் எல்வின் மைய  மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. 

    முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். எல்வின் மையத்தின்  நிர்வாகி தயாளன் பர்னபாஸ், தலைமை ஆசிரியர் ஜோசப்தினகரன் ஆகியோர் பேசினர். 

    சிறப்பு விருந்தினர்களாக 130 மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள், 25 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் மற்றும் இளங்கலை வணிகவியல் துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. 

    இதையடுத்து ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள், அரிசி, கோதுமை, இனிப்பு மற்றும் மதிய உணவுப்பொருட்களை காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் வழங்கி மகிழ்ந்தனர். 

    இளங்கலை வணிகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் சொர்னேஷ் வரவேற்றார். மாணவர் சரவணக்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை இளங்கலை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் விரிவாக்க பணி பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். ெபாறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) வருடாந்திர பயிற்சி முகாம் 10 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. 

    இந்த முகாமில்  கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி-கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு தூத்துக்குடி என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் சுனில்உத்தம் பயிற்சி அளித்தார். 

    நிறைவு விழாவில் காமராஜர் கலை அறிவியல் கல்லூரி மாணவி துர்கா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி கலந்து கொண்டார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    என்.சி.சி. மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. 1,600 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் 2-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல்- எலக்ட்ரானிக்  என்ஜினீயரிங் மாணவர் ரங்கராஜ் முதல் பரிசை தட்டிச்சென்றார். 

    800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கணிப் பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி ஜெயசுதா 2-வது பரிசு பெற்றார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் உயிரியியல் மருத்துவ பொறியியல் துறையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி பரமேஸ்வரி 2-வது பரிசு பெற்றார். 

    நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், (29 தமிழ்நாடு) இன்டிபெண்டன்ட் கம்ெபனி (என்.சி.சி.) மற்றும் தேசிய மாணவர்படையின் இணை அதிகாரி மாதவன் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.  மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கோவில்பட்டி அரசு கல்லூரி மாணவி கவுரி நன்றி கூறினார்.
    விருதுநகரில் வருகிற 6-ந் தேத வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

    அதன்படி  படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளை (6-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 10 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ.,  டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய வர்களை விருதுநகர், சிவகாசி, கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். 

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் நாளை நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும். 

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். 

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.


    ராஜபாளையம் அருகே வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள அருள்புதூரைச் சேர்ந்தவர் மேரி (வயது 40). இவரது தம்பி பாக்கியராஜ் (38). இவர் கடந்த 30ந்தேதி தலையில் காயங்களுடன் ரோட்டில் இறந்து கிடந்தார்.

    விபத்தில் பாக்கியராஜ் இறந்து இருக்கலாம் என கருதி உறவினர்கள் அவரது உடலை மீட்டு இறுதிச்சடங்கு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று 3ம்நாள் சடங்கு நிகழ்ச்சிக்காக வீடு சுத்தம் செய்யப்பட்டது. அப்போது வீட்டில் ரத்தக்கறையை துடைக்க அடையாளங்கள் தென்பட்டன. அதிர்ச்சி அடைந்த மேரி இதுதொடர்பாக தளவாய்புரம் போலீசில் புகார் செய்து ள்ளார்.

    அதில், எனது தம்பி பாக்யராஜ் சாவில் சந்தேகம் உள்ளது. மூத்த சகோதரர் அந்தோணிராஜ்க்கும், தம்பி பாக்கியராஜ்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே பாக்யராஜ் மரணத்தில் அந்தோணிராஜ்க்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 

    இந்தபுகாரின் அடிப்படையில் தளவாய்புரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் “நிதிசந்தையில் தொழில் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்வு நடந்தது. 

    இந்தியாவின் தலைசிறந்த நிதி சந்தை ஆய்வாளர் மற்றும் மும்பை ஐ.டி.பி.ஐ. கேபிடல் மார்க்கெட் மற்றும் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சண்முக நடராஜன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், உற்பத்தி துறையில் இந்தியா தனது போட்டி நாடான சீனாவின் உற்பத்தி திறனில் 10-ல் ஒரு பங்கே கொண்டுள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய இந்த கால கட்டத்தில், ரஷியா-உக்ரைன் போர் சூழலில் மேற்கத்திய நாடுகள் தங்கள் வர்த்தக தேவைகளுக்கு இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளையே விரும்புகின்றன.  இது நமக்கு பல வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

    வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒழுங்க மைக்கப்பட்ட துறையில் மாதம் தோறும் 1 லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாவதை மேற்கோள் காட்டிய அவர், இதன்மூலம் தென் மாநிலங்களான தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகியவை அதிக பயன்பெறும்.

    எனவே மாணவர்கள் வேலைவாய்ப்பை பற்றி கவலை கொள்ளாமல் தங்களை தகுதி படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.மாணவர்களின் சந்தேகங்களுக்கும் அவர் பதில் அளித்தார். 

    “கிரேட் பைனான்சியல் சர்வீசஸ்” தலைமை நிர்வாக அதிகாரி ஞானசக்திவேல் பேசுகையில், வாடிக்கையாளரிடம் நம் பொருளையோ சேவை யையோ திணிக்கக்கூடாது. வாடிக்கையாளரின் தேவை அறிந்து சேவை செய்வதின் அவசியத்தை எடுத்துரைத்தார். காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் வளர்மதி நன்றி கூறினார்.
    விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி மாணவர்களின் கற்றல் நிலையை அறிய ஆய்வு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் 

    இல்லம்தேடி கல்வி மையங்களுக்கு வரும் மாணவர்களின் கற்றல் நிலை அறிய, ஆய்வு செய்ய தன்னார்வலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வருகிற 6ந்தேதிக்குள் இந்த ஆய்வினை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் இல்லம் தேடி கல்வியின் மாநில திட்ட இயக்கத்தின் சிறப்பு அலுவலர் தெரிவித்தார். 

    இதன் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவிதிட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் ஆகியோர் இந்த பணிகளை தன்னார்வலர்கள் விருதுநகர் மாவட்டத்தில் விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தனர்.

    கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சீர்செய்ய தமிழக அரசு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையங்கள் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் பயன் பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.

    மையங்களுக்கு வரும் மாணவர்களின் கற்றல் நிலையினை அறிந்து கொள்ளும் வகையில், மாணவர்கள் குறைந்தபட்சம் அடைய வேண்டிய அடைவுகளின் அடிப்படையில் அனைத்துப் பாடங்களுக்கும் அடிப்படை ஆய்வு இல்லம்தேடி கல்வி கைப்பேசி செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை ஆய்வினை தன்னார்வலர்கள் வரும் அனைத்து மாண வர்களுக்கும் மேற்கொண்டு,  மே 6-ந்தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் இந்த ஆய்வுப் பணிகளை இல்லம் தேடி கல்வியின் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், மல்லி கிராமத்தில் செயல்பட்டு வரும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு மாணவர்கள் பதிலளித்தனர். அப்போது தன்னார்வலர் மகாலட்சுமி உடனிருந்தார்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டி கிராமத்தில் சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் பெரியகருப்பன் (வயது 57) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலை டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று 5 அறைகளில் 20 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சக்கரம் உள்ளிட்ட சிறியரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    குடும்பன்பட்டியைச் சேர்ந்த சோலை குருசாமி என்பவரது மகன் சோலை விக்னேஸ்வரன் (வயது 25) இன்று காலை ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் அந்த அறை தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய வாலிபர் சோலை விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவலறிந்த சாத்தூர் தீயணைப்பு அலுவலர் கதிரேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பலியான சோலை விக்னேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனரா? என்று தேடிவருகின்றனர்.

    இந்த வெடி விபத்து தொடர்பாக சாத்தூர் டி.எஸ்.பி. நாகராஜன், டவுன் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×