என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சிவகாசியில் பெய்த மழை காரணமாக சித்துராஜபுரம், விஸ்வநத்தம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
    • தொடர்மழையால் அணை, ஏரி, கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    விருதுநகர்:

    கேரளாவின் அரபிக்கடலில் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் சில இடங்களில் டிசம்பர் 2-ந்தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.

    அதன்படி தென்மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. விருதுநகரில் நேற்று மாலை ஒரு சில இடங்களில் சாரல்மழை பெய்தது.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோல் சிவகாசி பகுதியில் அதிகாலை முதல் மழை பெய்தது.

    சிவகாசியில் பெய்த மழை காரணமாக சித்துராஜபுரம், விஸ்வநத்தம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. விருதுநகர், சாத்தூர், இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்தது. ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 6-வது குடிநீர் தேக்க ஏரி, அய்யனார் ஆற்றில் கணிசமான நீர்வரத்து இருந்தது.

    தொடர்மழையால் அணை, ஏரி, கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை வரை மழை நீடித்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தர விட்டார்.

    மாவட்டத்தில் இன்று காலை 7 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    வத்திராயிருப்பு-39.8

    சிவகாசி-23.2

    வெம்பக்கோட்டை-10.7

    காரியாபட்டி-8.20

    விருதுநகர்-5

    மொத்த மழையின் அளவு 193.90 மில்லி மீட்டர். சராசரி மழை அளவு 16.6 மில்லி மீட்டர் ஆகும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை கீழக்கரை, ராமநாதபுரம் நகர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சிவகங்கையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மட்டும் தூரல் இருந்தது.

    • வேளாண் விளைபொருட்கள் கிட்டங்கியை தரமானதாக கட்டி முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப்பணிகளின் ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் ஆகிய வட்டாரங்களில் விருதுநகர் மாவட்ட திட்டப்பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப்பணிகளின் ஆய்வு கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடந்தது.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    இந்த திட்டத்தின் மூலம் வேளாண் பொறியியல் துறையினரால் கட்டப்படும் தடுப்பணைகள்நல்ல நிலையிலும், தரமானதா கவும், விவசாயி களுக்கு பயன்தரக்கூடிய வகையி லும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களை தேர்வு செய்து கட்டப்பட வேண்டும்.

    கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீரின் அளவு மற்றும் அருகில் உள்ள கிணறுகளின் நீர்மட்ட அளவு மேலும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயன்களை நேரில் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேளாண்மை துறையினரால் இந்த திட்டத்தின் மூலம் ராஜபாளையம் வடக்கு தேவதானத்தில் கட்டப்பட இருக்கும் வேளாண் விளை பொருட்களின் கிட்டங்கி கட்டுமான பணிகளை விரைவாக தொடங்கி, தரமானதாக கட்டி முடித்து, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், இணை இயக்குநர் (வேளாண்மை) உத்தண்டராமன், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) கோவில் ராஜா, மாவட்ட ஊராட்சி செயலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக்குழுவில் சேர ஆதிதிராவிடர், பழங்குடியினர், சமூக ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளர் உறுப்பினர்- செயலாளரும், தொழிலாளர் உதவி ஆணையருமான (அமலாக்கம்) காளி தாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின்படி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    மேற்கண்ட விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமை யிலான கொத்தடிமைத் தொழிலாளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவை திருத்தி அமைக்க கலெக்டர் மேகநாதரெட்டி ஒப்புதல் அளித்துள்ளார்.

    கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டப்பிரிவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 3 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் 2 பேரும் கலெக்டரால் கொத்தடிமைத் தொழிலா ளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் விருதுநகர் மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவிற்கு உறுப்பினராக சமீபத்திய புகைப்படம் ஒட்டப்பட்ட சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், சுய விருப்பக் கடிதம், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை ''தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), 1/13சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர்'' என்ற முகவரிக்கு வருகிற 2.12.2022அன்று மாலை 5.00மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய கருத்தரங்கு சாத்தூரில் இன்று நடைபெற்றது.
    • வேப்ப மரம் உள்ளிட்ட மரங்களை வளர்த்தால் விவசாயிகள் நல்ல வருமானம் பார்க்கலாம் என்றார் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ.

    சாத்தூர்:

    காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'லட்சங்களை கொட்டி தரும் மானாவாரி மரப் பயிர் சாகுபடி'என்ற தலைப்பிலான விவசாய கருத்தரங்கு சாத்தூரில் உள்ள ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நிகழ்ச்சியில் பேசியதாவது:

    33 சதவீதம் பசுமை பரப்பை அடைய வேண்டும் என்பது நம்முடைய இலக்காக உள்ளது. தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பு சுமார் 24 சதவீதமாக உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 3.8 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. அதை அதிகரிக்க எங்களால் முடிந்த செயல்களை நாங்கள் செய்து வருகிறோம்.

    என்னுடைய சட்டமன்ற தொகுதியில் 'வனத்திற்குள் விளாத்திக்குளம்'என்ற பெயரில் 5 ஆண்டுகளில் 1 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக 25 லட்சம் பனை விதைகளையும் நட உள்ளோம்.

    விவசாயிகள் ஆசைக்காக மரம் வைக்காமல், வாழ்விற்காக மரம் வைக்க வேண்டும். விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மானாவாரி மாவட்டங்களில் நெல், வாழை போன்ற மரங்களை நட்டு சிரமப்படுவதற்கு பதிலாக வேப்பமரம், நாவல், பனை கொடுக்காப்புளி போன்ற மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். அவை மானாவாரியில் நன்கு வளர்ந்து நல்ல வருமானமும் தரும்.

    நம் நாட்டிற்கு ஒரு நம்மாழ்வார் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் நம்மாழ்வாராக உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    மற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரகுராம் பேசுகையில், "விவசாயிகள் விவசாயத்தை லாபகரமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக, கிராமங்களில் ஒரு வேப்பமரம் இருக்கும். அது எவ்வித பராமரிப்பும் இன்றி தானாக நன்றாக வளர்ந்து இருக்கும். அதேசமயம், ஏக்கர் கணக்கில் வேப்ப மரங்களை நாம் வளர்க்க விரும்பினால், நாம் எதிர்பார்ப்பதை போல் தானாக வளர்ந்துவிடாது. அதற்கென்று சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    அந்த வகையில், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் இக்கருத்தரங்கின் வல்லுநர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். மரம் வளர்ப்பது சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் மிகவும் அவசியமானது. எனவே, இந்த தொகுதியில் மரம் வளர்க்கும் பணியில் என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

    இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு முன்னோடி விவசாயிகளும், விஞ்ஞானிகளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    குறிப்பாக, ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குநர் ராமமூர்த்தி வேப்ப மரத்தில் இருந்து லாபம் எடுக்கும் வழிமுறைகள் குறித்தும், தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் 'கொடுக்காப்புளி'மர வளர்ப்பு குறித்தும் பேசினர். பெங்களூருவில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராஜன் சந்தன மர வளர்ப்பு குறித்தும், செட்டிநாடு மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் குருசாமி இலுப்பை மர வளர்ப்பு குறித்தும் பேசினர்.

    காவேரி கூக்குரல் இயக்கமானது மரம் சார்ந்த விவசாயம் குறித்த பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வியக்கம் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களில் இதுவரை சுமார் 24 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விவசாயிகள் பயன் பெறும் விதமாக அனைத்து வகையான டிம்பர் மரக்கன்றுகளும் ரூ.3-க்கு விநியோகம் செய்யப்படுகிறது.

    • மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 25). இவரும், முத்துப்பாண்டி என்பவரும் சிவகாமிபுரம் தெருவில் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கார்த்திக் ஒரு பிரிட்ஜை பழுது பார்க்கும்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாநில சிலம்ப போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டார்.
    • தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தன. இதில் அருப்புக்கோட்டையில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவிகள் அக்‌ஷயபுஷ்பா, பவித்ரா சகி முதலிடமும், மாணவிகள் பிரியதர்ஷினி, துர்கா நந்தினி 2-ம் இடமும் பெற்றனர். முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் சிலம்ப போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களையும் உடற்கல்வி ஆசிரியைகளையும் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, பள்ளி தலைவர் ஜெயவேல் பாண்டியன், உதவி தலைவர் அஜய், தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர். 

    • நிலுவை தொகை செலுத்தாத டிரஸ்ட் அலுவலகத்துக்கு சீல்வைக்கப்பட்டது.
    • நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஏ.கே. டி. டிரஸ்டுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் கடைகள் உள்ளன. இதற்கு 2011-12 முதல் 2022-23 வரை சுமார் ரூ.30 லட்சம் நிலுவை தொகை உள்ளது. இந்த டிரஸ்டுக்கும், நகராட்சிக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்தது.

    இதில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகும் டிரஸ்ட் அலுவலகம் நிலுவை தொகையை செலுத்தவில்லை. நிலுவை தொகையை செலுத்தக்கோரி அலுவலகம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான கடைகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பிறகும் நிலுவை தொகைகள் நகராட்சிக்கு செலுத்தப்படவில்லை.

    இதையடுத்து ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் வருவாய் அலுவலர் முத்துசெல்வம், வருவாய் ஆய்வர்கள் பாண்டி, நாகராஜ், சிவராமன் மற்றும் நகராட்சி வருவாய் உதவியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், பணியாளர்களால் டிரஸ்ட் அலுவலகத்தை ஜப்தி செய்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    • அருப்புக்கோட்டையில் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை 12-வது வார்டில் மகாலிங்கம் மூப்பனார் தெரு, பெருமாள் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை கொட்டி பல நாட்கள் ஆகிவிட்டது. இதனால் இந்த பகுதி மக்கள் கற்களில் நடப்பதற்கு சிரமமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நடப்பதற்கும், சைக்கிளில் சென்று வருவதற்கும் சிரமமாக இருக்கிறது என்றும் கூறினர். இந்தப் பகுதியில் குடிநீர் வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    விரைவில் எங்கள் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அந்த வார்டு கவுன்சிலர் அல்லிராணியிடம் கேட்டபோது, விரைவில் சாலை சீரமைக்கப்படும். குடிநீர் விநியோகமும் சரிசெய்யப்படும் என்றார்.

    • விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இணையதள முகவரியில் இருந்தும்் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொ கையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரையோ அணுகலாம்.

    மேலும் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் இருந்தும்் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    2022-23-ம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தை மாண வர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ''ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண். 044-29515942, மின்னஞ்சல் முகவரி:tngovtiitscholarship@gmail.com'' என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜனவரி 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற மகன் குரு மூர்த்தியை கைது செய்தனர்.
    • பண விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி தந்தையை மகன் எரித்துக்கொன்ற சம்பவம் பந்தல்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகே உள்ள வதுவார்பட்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 63), விவசாயி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் பாக்கியராஜ் புதிதாக டிராக்டர் வாங்கி உள்ளார். அதனை வாழ்வாங்கி கிராமத்தில் வசித்து வரும் தனது மகன் குருமூர்த்தி (32) என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர் அதனை ஓட்டி வந்தார்.

    இதற்கிடையே பாக்கியராஜ், தனது மகனிடம் டிராக்டர் ஓட்டுவதற்கான கூலி தொகை ரூ.1000-ஐ எடுத்துக் கொண்டு மீதி தொகையை தன்னிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது பாக்கிய ராஜ் பணத்தை கொடுக்கா விட்டால் டிராக்டரை கொண்டு வந்து விட்டுவிடு என்று கண்டிப்புடன் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு குருமூர்த்தி வதுவார்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது தந்தை பாக்கியராஜ் தூங்கி கொண்டிருந்தார். ஆத்திரத்தில் இருந்த குருமூர்த்தி தந்தை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அறை கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய பாக்கியராஜ், நடந்த சம்பவம் குறித்து தனது மகளுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது மகள், பாக்கியராஜை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி பந்தல்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற மகன் குரு மூர்த்தியை கைது செய்தனர்.

    பண விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி தந்தையை மகன் எரித்துக்கொன்ற சம்பவம் பந்தல்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கிராம உதவியாளர் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 114 கிராம உதவியாளர் பணியிட ங்களுக்கு இன சுழற்சி முறையில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்ப ங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 4.12.2022 அன்று நடைபெற இருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டனாது (ஹால் டிக்கெட்) விண்ணப்ப தாரர்களின் கைப்பேசி எண்ணிற்கு குறுசெய்தியாக அனுப்பப்படும்.

    மின்னஞ்சல் முகவரி வழியாக நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது விண்ணப்பதாரர் தமிழக அரசின் இணைய தளமான https://www.tn.gov.in, வருவாய் நிர்வாகத்துறையின் இணையதளமான https://cra.tn.gov.in மற்றும் விருதுநகர் மாவட்ட இணையதளமான https://virudhunagar.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
    • நாய் துரத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி முத்துசுப்பையாபுரத்தை சேர்ந்தவர் சித்திரைகனி.இவரது மனைவி பூசணம் (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது மகன் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    செட்டியார்பட்டி ஆசிரியர் காலனி அருகே சென்றபோது திடீரென ஒரு நாய் பின்னால் அமர்ந்திருந்த பூசணத்தை பார்த்து குரைத்தபடி துரத்தி வந்தது. இதனால் பீதியடைந்த அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்தார். தலையில் படுகாயமடைந்த பூசணத்தை சேத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூசணம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×