என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை: பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- சிவகாசியில் பெய்த மழை காரணமாக சித்துராஜபுரம், விஸ்வநத்தம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
- தொடர்மழையால் அணை, ஏரி, கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
விருதுநகர்:
கேரளாவின் அரபிக்கடலில் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் சில இடங்களில் டிசம்பர் 2-ந்தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.
அதன்படி தென்மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. விருதுநகரில் நேற்று மாலை ஒரு சில இடங்களில் சாரல்மழை பெய்தது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோல் சிவகாசி பகுதியில் அதிகாலை முதல் மழை பெய்தது.
சிவகாசியில் பெய்த மழை காரணமாக சித்துராஜபுரம், விஸ்வநத்தம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. விருதுநகர், சாத்தூர், இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்தது. ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 6-வது குடிநீர் தேக்க ஏரி, அய்யனார் ஆற்றில் கணிசமான நீர்வரத்து இருந்தது.
தொடர்மழையால் அணை, ஏரி, கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை வரை மழை நீடித்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தர விட்டார்.
மாவட்டத்தில் இன்று காலை 7 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
வத்திராயிருப்பு-39.8
சிவகாசி-23.2
வெம்பக்கோட்டை-10.7
காரியாபட்டி-8.20
விருதுநகர்-5
மொத்த மழையின் அளவு 193.90 மில்லி மீட்டர். சராசரி மழை அளவு 16.6 மில்லி மீட்டர் ஆகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை கீழக்கரை, ராமநாதபுரம் நகர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகங்கையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மட்டும் தூரல் இருந்தது.






