என் மலர்
வேலூர்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டு தற்காலிகமாக அமைக்கப்படடுள்ளது. இந்த வார்டில் 200 படுக்கைகள், சிகிச்சை அளிக்க மருத்துவ உபகரணங்கள் உள்ளன. இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவிற்காக புதிதாக கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. அந்த கட்டிடத்தில் தற்காலிகமாக கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி 144 தடை உத்தரவு இன்று 6 மணி முதல் வேலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்படுகிறது. அதனால் பெட்ரோல், பால், காய்கறி, சமையல், கியாஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மளிகைக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஓட்டல்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக- ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கள் இயக்ககூடாது என்றும், தங்கும் விடுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தங்கும் விடுதிகளுக்கு வரும் நபர்கள் குறித்து அதன் உரிமையாளர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கவும், கிராமப்புற பகுதிகளில் வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்து தங்கும் நபர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 62 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காவிட்டால் அவர்களின் பாஸ்போர்ட் புதுப்பிக்கும்போது ரத்து செய்யப்படும்.
வேலூர் சி.எம்.சி. அடுக்கம்பாறை மற்றும் பெண்ட்லேன்ட் ஆகிய 3 மருத்துவமனைகளில் கொரோனா தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி காணப்படுபவர்களை தனிமைப்படுத்த வி.ஐ.டி.யில் ஒரு மையம் தயார் செய்யப்படுகிறது.
கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்களை கண்காணிக்க 3 குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்யாணம் முதல் இறப்பு வரையிலான நிகழ்ச்சியில் அதிகளவில் பொதுமக்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தை பார்வையிட்டார்.
வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
இவர்கள் வேலூர் மெயின் பஜார், காந்தி ரோடு, ஆற்காடு ரோடு, சத்துவாச்சாரி பகுதியில் உள்ள லாட்ஜூகளில் தங்கி உள்ளனர். குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து தங்கியுள்ளனர். லாட்ஜூகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்கள் குறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
வேலூரில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தங்கியுள்ளனர். அவர்கள் எந்தவிதமான சிகிச்சைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா? என்பது போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும் அதிக காய்ச்சல் இருமல் சளி போன்றவை ஏற்பட்டால் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஒருவரும், வாணியம்பாடி ஜெயில் கைதி ஒருவரும் நேற்று கொரோனா அறிகுறியுடன் வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு மேற்குவங்க வாலிபர் அதிக காய்ச்சல், இருமல், சளி ஆகியவை இருந்தன. அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய ரத்தம், சளி போன்றவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் இன்று தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
லாட்ஜூகளில் தங்கி இருப்பவர்கள் காய்ச்சல் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
லாட்ஜூகளில் தினமும் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். வடமாநிலங்களை சேர்ந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டை சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடந்த மாதம் ஆன்-லைனில் பொருள் வாங்கியுள்ளார்.
அதன் பின்னர் உதயகுமார் போனுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில் உங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக விழுந்துள்ளது. அதற்கு ரூ.3 லட்சம் கட்டினால் போதும் என தெரிவித்தித்தனர். முன் பணமாக ரூ.1 லட்சம் தரவேண்டும் எனவும். காருக்கு உண்டான ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை உதயகுமாரின் வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர்.
இதனால் உதயகுமார் அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்தி உள்ளார். அதன்பின் சர்வீஸ் சார்ஜ் ரூ.25 ஆயிரம் அனுப்ப கூறினர்.
அதையும் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கார் வராததால் அவர்கள் தகவல் அனுப்பிய செல்போனில் தொடர்பு கொண்ட போது போன் ஸ்விட்ச் ஆக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து உதயகுமார் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் ஜெயகுமார். இவருடைய மனைவி கலைவாணி (வயது42). இவர்களுக்கு விக்ரம் (22) என்ற மகனும், நர்மதா என்ற மகளும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் இறந்து விட்டார்.
இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கலைவாணி தனது மகன் விக்ரமுடன் பள்ளிகொண்டாவை அடுத்த ஒக்கணாபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் கலைவாணி உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
விக்ரமுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. அடிக்கடி தனது தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். விக்ரம் ஒரு பெண்னை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனை கலைவாணி கண்டித்துள்ளார். இந்த நிலையில் கலைவாணிக்கும், விக்ரம் காதலிக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விக்ரம் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது கலைவாணி, மகனின் காதலை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விக்ரம், தனது தாய் கலைவாணியை அடித்து உதைத்தார். இதில் வலிதாங்க முடியாத அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடினார். விக்ரமும் பின்னாடியே சென்றார்.
அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியில் கலைவாணியை அவர் தள்ளினார். இதில் கலைவாணி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியனார்.
பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்தனர்.
பெற்ற தாயை மகனே லாரியில் தள்ளி கொலை செய்த சம்பவம் பள்ளிகொண்டா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டானங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி அஞ்சலை (வயது39). கொலை வழக்கு ஒன்றில் அஞ்சலைக்கு கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்துவந்த அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சர்க்கரை நோயும் இருந்துள்ளது. இதற்கு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அஞ்சலைக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூரில் இருந்து அப்துல்லாபுரம் செல்லும் சாலையோரம் வடக்கு மேடு கிராமத்தின் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார்.
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அரியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இறந்த பெண் பச்சை மற்றும் நீலம் கலந்த புடவை அணிந்திருந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
அவரது உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை. போலீசார் பெண்ணின் பிணத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்து சாலையோரம் வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இறந்த பெண் யார் என்பது கண்டுபிடித்தால் உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
அந்த பகுதியில் பெண் யாராவது மாயமாகி உள்ளார்களா வேலூர் மற்றும் அரியூர் பகுதியில் உள்ள லாட்ஜிகளில் தங்கியிருந்த பெண்கள் யாராவது மாயமானார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை வருகிற 31-ந் தேதி வரை உறவினர்கள் மற்றும் அவர்கள் வக்கீல்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவரது கணவர் முருகன் ஆகியோர் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.
அதன்படி வேலூர் பெண்கள் ஜெயிலில் இன்று காலை நளினி முருகன் சந்திப்பு நடைபெற இருந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கைதிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இன்று நடைபெற இருந்த நளினி முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் வனச்சரக பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வனத்துறையினர் யானைகளை தொடர்ந்து காட்டுக்குள் விரட்டி கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குடியாத்தம் அடுத்த மோர்தானா அருகே உள்ள ஜங்காலபள்ளி கிராமத்தை ஒட்டி உள்ள விவசாய நிலத்திற்குள் நேற்று இரவு 8 மணிக்கு ஒற்றை காட்டு யானை புகுந்தது. அங்கிருந்த நெற்பயிரில் புகுந்து அங்கும் இங்குமாக ஓடியது.மேலும் வாழை மரங்களை சாய்த்தது.விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த போர்வெல்களை பிடுங்கி வீசி எறிந்தது.
இதனைக் கண்ட பொதுமக்கள் அதனை விரட்ட முயன்றனர். மேலும் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
குடியாத்தம் வனச்சரகர் மகேந்திரன் வனவர் பிரகாஷ் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்து காட்டு யானையை விரட்டியடித்தனர். சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது.
காட்டு யானை புகுந்த பகுதி ஜங்காலபள்ளி கிராமத்தின் மிக அருகில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஒற்றை காட்டு யானையை அடர்ந்த காட்டுப்பகுதியில் விரட்டியடிக்க வேண்டும்.யானை சேதப்படுத்திய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் கொசப்பேட்டை கந்தசாமி ஜமீன்தார் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி தமிழரசி (வயது 38). கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். குழந்தைகள் இல்லை. வேலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி வேலை முடிந்து தமிழரசி வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று அலுவலகத்தில் இருந்து அவருக்கு போன் செய்தனர். அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அலுவலக ஊழியர்கள் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள கட்டிலில் தமிழரசி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் கமலாட்சிபுரத்தை சேர்ந்தவர் சம்பத் வயது 52. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்தனர். சம்பத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார்.
அதன்படி நடவடிக்கை எடுக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதனையடுத்து சம்பத் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் பேரணாம்பட்டு கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 43) தொடர்ந்து சாராய விற்பனை செய்து வந்தார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம்புதூரை சேர்ந்தவர் உமாபதி. இவருடைய மகள் நந்தினி (வயது 22). குடியாத்தம் சாமரிஷி குப்பம் கிராமத்தை சேர்ந்த கோதண்டன் மகன் ராமதாஸ் (வயது29). ஓசூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
ராமதாஸ் நந்தினி இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் காதல் ஜோடி நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் ஆம்பூர் பச்சகுப்பம் இடையே உள்ள தார்வழி ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர்.
தண்டவாளத்தின் அருகே அமர்ந்து காதல் ஜோடி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்தபடி செல்போனில் செல்பி எடுத்தனர்.
அப்போது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதியது.இதில் உடல் துண்டாகி இருவரும் இறந்தனர்.
இன்று காலை காதல் ஜோடி தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வேபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் ஆம்பூர் டி.எஸ்.பி சச்சிதானந்தம் ஆகியோர் வந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த செல்போனை மீட்டனர். அதில் காதல்ஜோடி செல்பி எடுத்த படம் பதிவாகி இருந்தது.
மேலும் இதுதொடர்பாக அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்தவர்களை அடையாளம் காட்டினர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில்வே போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காதல்ஜோடி சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






