search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    குடியாத்தம் அருகே ஒற்றை யானை அட்டகாசம்

    குடியாத்தம் அருகே விவசாய நிலத்திற்குள் ஒற்றையானை புகுந்து நெல் வாழை பயிர்களை நாசப்படுத்தியது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரக பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வனத்துறையினர் யானைகளை தொடர்ந்து காட்டுக்குள் விரட்டி கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குடியாத்தம் அடுத்த மோர்தானா அருகே உள்ள ஜங்காலபள்ளி கிராமத்தை ஒட்டி உள்ள விவசாய நிலத்திற்குள் நேற்று இரவு 8 மணிக்கு ஒற்றை காட்டு யானை புகுந்தது. அங்கிருந்த நெற்பயிரில் புகுந்து அங்கும் இங்குமாக ஓடியது.மேலும் வாழை மரங்களை சாய்த்தது.விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த போர்வெல்களை பிடுங்கி வீசி எறிந்தது.

    இதனைக் கண்ட பொதுமக்கள் அதனை விரட்ட முயன்றனர். மேலும் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    குடியாத்தம் வனச்சரகர் மகேந்திரன் வனவர் பிரகாஷ் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்து காட்டு யானையை விரட்டியடித்தனர். சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது.

    காட்டு யானை புகுந்த பகுதி ஜங்காலபள்ளி கிராமத்தின் மிக அருகில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    ஒற்றை காட்டு யானையை அடர்ந்த காட்டுப்பகுதியில் விரட்டியடிக்க வேண்டும்.யானை சேதப்படுத்திய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    Next Story
    ×