என் மலர்
செய்திகள்

ஆம்பூரில் தண்டவாளத்தில் படுத்தபடி செல்பி எடுத்து கொண்டு காதல் ஜோடி தற்கொலை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம்புதூரை சேர்ந்தவர் உமாபதி. இவருடைய மகள் நந்தினி (வயது 22). குடியாத்தம் சாமரிஷி குப்பம் கிராமத்தை சேர்ந்த கோதண்டன் மகன் ராமதாஸ் (வயது29). ஓசூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
ராமதாஸ் நந்தினி இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் காதல் ஜோடி நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் ஆம்பூர் பச்சகுப்பம் இடையே உள்ள தார்வழி ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர்.
தண்டவாளத்தின் அருகே அமர்ந்து காதல் ஜோடி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்தபடி செல்போனில் செல்பி எடுத்தனர்.
அப்போது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதியது.இதில் உடல் துண்டாகி இருவரும் இறந்தனர்.
இன்று காலை காதல் ஜோடி தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வேபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் ஆம்பூர் டி.எஸ்.பி சச்சிதானந்தம் ஆகியோர் வந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த செல்போனை மீட்டனர். அதில் காதல்ஜோடி செல்பி எடுத்த படம் பதிவாகி இருந்தது.
மேலும் இதுதொடர்பாக அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்தவர்களை அடையாளம் காட்டினர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில்வே போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காதல்ஜோடி சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






