என் மலர்tooltip icon

    வேலூர்

    வாணியம்பாடி அரசு வேளாண் மையத்திற்கு காய்கறி கொண்டு வந்த விவசாயி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இன்று முதல் வாணியம்பாடி முழுவதும் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள், காய்கறி, பழங்கள் என அனைத்தும் வீடு வீடாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    செட்டியப்பனூரில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிக அரசு வேளாண் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் வாங்கி அதனை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான பிரித்து வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    ஆலங்காயம் அருகே உள்ள ஓமகுப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி உமாபதி (வயது 48). இன்று காலை செட்டியப்பனூர் திருமண மண்டபத்திற்கு காய்கறிகள் கொண்டு வந்தார். அவற்றை அதிகாரிகளிடம் விற்பனை செய்துவிட்டு மண்டபம் முன்பு திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாட்டறம்பள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலி டாக்டர் ஒருவரை கைது செய்தனர்.

    வாணியம்பாடி:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையில் போலீசார் நேற்று பச்சூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஊரடங்கு உத்தரவை மீறி அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில் அந்த நபர் ஊசி, மருந்து உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் பச்சூர் பாறையூர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (40) என்பதும், இவர் மருத்துவம் படிக்காமல் அருகே உள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரை வழங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 16 பேரும் வசித்த தெருவில் உள்ளவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாதிக்பாஷா (வயது 46) சிகிச்சை பலனின்றி கடந்த 8-ந் தேதி உயிரிழந்தார். தற்போது கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட கொணவட்டத்தை சேர்ந்த 52 வயது பெண்ணும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். நேற்று முன்தினம் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த பெண்ணிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சாதிக்பாஷா மற்றும் கொணவட்டத்தை சேர்ந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைகளில் நோய் தொற்று குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விசாரணைக்கு வரும்போது அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த மருத்துவமனை மூடப்பட்டு வழக்கு தொடரப்படும்.

    பொதுமக்கள் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்றவை இருந்தால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனைக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறியுடன் வருபவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வேண்டும். சாதிக்பாஷா மற்றும் கொணவட்டத்தை சேர்ந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்களுடன் மருத்துவமனையில் இருந்த பிற நோயாளிகள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

    வேலூர் ஆர்.என்.பாளையம், முள்ளிப்பாளையம், கஸ்பா, சைதாப்பேட்டை, கொணவட்டம், சின்னஅல்லாபுரம், கருகம்புத்தூர் ஆகிய பகுதிகளில் வசித்த 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 16 பேரும் வசித்த தெருவில் உள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

    அதன்படி கொணவட்டம், முள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர்களுக்கு கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கஸ்பா பகுதியை சேர்ந்தவர்களுக்கு கஸ்பா மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், சின்னஅல்லாபுரத்தை சேர்ந்தவர்களுக்கு சின்னஅல்லாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர்களுக்கு ஆர்.என்.பாளையம் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளியிலும், சைதாப்பேட்டையை சேர்ந்தவர்களுக்கு கோடையிடி குப்புசாமி முதலியார் பள்ளியிலும், கருகம்பத்தூரை (ஹாஜிபுரா) சேர்ந்தவர்களுக்கு ஹாஜிபுரா முஸ்லிம் தொடக்கப்பள்ளியிலும் இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.

    இந்த முகாம்களில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி காணப்படும் பொதுமக்களும் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த பரிசோதனையில் மாவட்ட நிர்வாகத்துக்கு அந்தந்த பகுதி ஜமாத்தாரர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.
    குடியாத்தத்தில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கூட நகரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க ஒன்றிய துணைச்செயலாளர் ஜி.பி.மூர்த்தி என்கிற காடைமூர்த்தி. இவர் அதே பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    தற்போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் தடை உத்தரவு உள்ளதால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அந்த தென்னை நார் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. நேற்று மதியம் அந்த தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் நார்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    அங்கிருந்த எந்திரங்கள் மளமளவென எரிந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காடை மூர்த்தி உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் உதவியுடன் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 தென்னை நார் எந்திரங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

    குடியாத்தம் தாசில்தார் வத்சலா உள்ளிட்ட வருவாய் துறையினர் தீ விபத்து ஏற்பட்ட தென்னை நார் தொழிற்சாலையில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமானுஜம், தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினார்கள். 

    இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து இறைச்சி மற்றும் மீன் விற்பனைகள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு சென்று கொடுக்கும் டோர்டெலிவரி என்ற விற்பனை முறை நடைமுறைக்கு வருகிறது.
    வேலூர்:

    ஊரடங்கு உத்தரவையொட்டி வேலூர் மாவட்டத்தில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வேலூர் மாவட்ட அனைத்து இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தங்களது விற்பனையை தொடர்வதற்கு அனுமதி கேட்டனர்.

    மேலும் அவர்கள், அவ்வாறு விற்பனை செய்யும் பொழுது எக்காரணம் கொண்டும் கடைகளில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நடத்தப்படாது என்றும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே ஆர்டரின் பேரில் நேரடியாக சென்று விற்பனை செய்யப்படும் எனவும், இதனை மீறி செயல்படும் கடைகளின் மீது மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம் என்றும் தெரிவித்தனர். அதனை ஏற்று இன்று முதல் வேலூர் மாவட்டத்தில் அனைத்து இறைச்சி மற்றும் மீன் விற்பனைகள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு சென்று கொடுக்கும் டோர்டெலிவரி என்ற விற்பனை முறை நடைமுறைக்கு வருகிறது.

    இந்த கடைகள் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்க வேண்டும். இந்த கால நேரத்தினை அவர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொரு வியாபாரியிடமும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்து தங்களது வீடுகளிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.
    வேலூரில் கொரோனா பாதித்தவரின் வீட்டின் அருகில் இருந்த பெண் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூரில் முதன்முதலாக காட்பாடி பர்னீஸ் புரத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. லண்டனில் இருந்து திரும்பிய அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 26 பேர் உறவினர்களுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் வேலூர், கஸ்பா, சின்ன அல்லாபுரம், கருகம்பத்தூர், ஆர்.என். பாளையம் பகுதியை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா இருந்தது.

    இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் 4 பேரின் குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள் என 60 பேர் கண்காணிக்கப்பட்டனர்.

    டெல்லி மாநாட்டில் பங்கேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்.என். பாளையத்தை சேர்ந்த ஒருவரின் மாமனார், மாமியார், மனைவி மற்றும் 7 வயது மகள் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே வேலூர் காந்தி ரோட்டில் டீக்கடை வைத்திருந்த சைதாப்பேட்டையை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

    இதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி முழுவதும் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி காய்ச்சல் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆர்.என்.பாளையம் பகுதியில் ஆய்வு செய்தபோது ஏற்கனவே ஒரே குடும்பத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் அருகே உள்ள 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனாஅறிகுறி இருந்தது.

    இதனைத் தொடர்ந்து அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 35 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து இளம்பெண் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றதால் கொரோனா பரவியதா? என ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை முதல் 2 நாட்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காத மளிகை கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடுவதை தவிர்க்க ஞாயிறு, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே மளிகைக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    2 நாட்களுக்கு பிறகு நாளை முதல் 2 நாட்கள் மளிகைக் கடைகள் திறந்திருக்கும். இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மளிகை கடை வியாபாரிகள் தங்களது கடைகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க வசதியாக வட்டம் வரைய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 200 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீங்கிய பிறகும் இந்த கடைகளை திறக்க சில மாதங்களாகும். எனவே வியாபாரிகள் இதில் கட்டுப்பாடாக நடந்து கொள்ளவேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூரில் இன்று தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 200 கிலோ சிக்கனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக மீன் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை இந்த கடைகள் திறக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் சில இடங்களில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்கின்றனர்.

    வேலூர் சேண்பாக்கத்தில் இன்று தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 200 கிலோ சிக்கனை வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    வேலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூரில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்தார்.

    வெளிநாடு, வெளிமாநிலத் தொடர்பு இல்லாத ஒருவர் இந்நோய்த் தொற்றுக்கு உயிரிழந்ததை அடுத்து வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூகத் தொற்றாக மாறியிருக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மாவட்டத்தில் உள்ள காய்கறிக் கடைகள் அனைத்தும் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மளிகை, சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியவை வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், ஆகிய 3 நாள்களில் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கவும், பால் விற்பனை நிலையங்கள் தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்யவும், கோழி, ஆடு, மீன் இறைச்சிக் கடைகள் ஊரடங்கு காலம் முடியும் வரை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டும் உள்ளது. இந்த உத்தரவு கடந்த வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.

    இதன் காரணமாக வேலூர் மாநகரில் காலை முதலே வெளியில் வாகனங்களில் சென்று வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது.

    இந்த எண்ணிக்கை 10 மணிக்கு பிறகு முற்றிலுமாக குறைந்து 11 மணிக்கு பிறகு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

    எனினும், காட்பாடி, காந்திநகர், சத்துவாச்சாரி உள்ளிட்ட சில இடங்களில் வெளியில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சில நபர்களையும் வீடுகளுக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் எடப்பாடி பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மளிகை கடைகள், இறைச்சி, மீன் கடைகள், வியாபார நிறுவனங்கள் என அனைத்தும் மூடப் பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரம்கூட அந்த கடைகள் திறக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி மற்றும் தம்மம்பட்டி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டது. மளிகை பொருட்களும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    திருச்சி மாநகர் பகுதியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்துக்கு மேல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. அவசர நிலை காரணமாக செல்லும் வாகனங்கள் தவிர மற்ற 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

    மேலும் வெளியே வருபவர்கள் ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இன்று முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் சாலைகளில் கூட்டம் குறைய வாய்ப்புள்ளது.

    கடலூரில் பொதுமக்கள் வெளியே செல்ல 3 விதமான அட்டைகள் வழங்கப்படுகின்றன. பச்சை நிற அட்டைகள் வைத்திருப்பவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் வெளியே வரலாம்.

    அதேபோல் நீல நிற அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், ரோஸ் நிற அட்டைதாரர்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும் வெளியே சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    மற்றவர்கள் வெளியே வந்தால் போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். இதனால் கடலூரில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கோடை மழை பெய்தது. இதில் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று 102 டிகிரி வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் வேலூர், அணைக்கட்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. சிறிது நேரத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் மழைபெய்யத்தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் தெருங்களில் மழை நீருடன், கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது.

    ரோட்டில் உள்ள கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றாததால் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.

    ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக லேசான மழை பெய்தது.

    சூறாவளி காற்று மற்றும் மழை காரணமாக ஆம்பூர் பகுதியில் சுமார் 2 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. குமாரமங்கலம் கிராமத்தில் சூறாவளி காற்று காரணமாக சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குடியாத்தம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மழை காரணமாக மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் மீது பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். பணியாளர்கள் மரங்களை அகற்றி மின் வயர்களை சீர்செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் நேற்று மாலை 5.30 மணி அளவில் திடீரென பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது. 6.30 மணி வரை கொட்டி தீர்த்தது. மழையின் போது தண்டராம்பட்டு அருகில் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரது மனைவி அம்பிகா (வயது 60). என்பவர் வீட்டுக்கு அருகில் இருந்த மாங்காய் மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இகுறித்து தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூசி அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வமணி (60). இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள அவரது நிலத்திற்கு சென்றார்.

    அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிர்ச்சியடைந்த செல்வமணி அங்கிருந்த ஏரிக்கால்வாயில் தவறி விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் மற்றும் தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறு, வந்தவாசி பகுதியில் பெய்த திடீர் மழையால் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயில் எடை போட கொண்டு வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமானது.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வேலூரில் ஒருவர் பலியானதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கபட்டுள்ளன.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 6 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வேலூரில் நேற்று ஒருவர் இறந்தார். அவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர் வசித்த சைதாப்பேட்டை பகுதியில் 5 துறைகளை சேர்ந்த 200 அலுவலர்கள் வீடு வாரியான கணக்கெடுப்பு பணியிலும், மேலும் 50 பேர் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    இதனையடுத்து வேலூர் மாநகராட்சியில் உள்ள 2 -வது மண்டல பகுதி முழுவதும் முழு சுகாதார பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ராட்சத எந்திரம் மூலம் தடுப்பு மருந்து தெளித்து வருகின்றனர்.

    2-வது மண்டலத்தில் உள்ள சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, ஆற்காடு சாலை, சைதாப்பேட்டை பகுதி முழுவதும் வீடு வீடாக மருத்துவ பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று சத்துவாச்சாரியில் 225 பேர் கொண்ட குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை சோதனை செய்து வருகின்றனர்.

    பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்றவை உள்ளதா என அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த கணக்கெடுப்பு பணியை என்ஜினியர் சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார்.

    இதில் 2-வது மண்டல உதவி கமி‌ஷனர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இன்று முதல் 2 வது மண்டலத்தில் உள்ள 28 ஆயிரத்து 500 வீடுகளில் மருத்துவ குழுவினர் சோதனை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பரிசோதனைக்கு வரும் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு இடையூறு செய்து பணிகளை தடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    யாருக்காவது சளி இருமல் காய்ச்சல் போன்றவை இருந்தால் அல்லது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இருந்தாலோ உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை அல்லது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள் வாரத்தில் திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய 3 நாள்களில் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    வேலூர் சைதாப்பேட்டையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 45 வயது நபர் இறந்தார்.

    வெளிநாடு, வெளிமாநிலம் செல்லாதவருக்கு கொரோனா பரவி இருப்பது கவலைக்குரிய வி‌ஷயமாகும். இனிமேலும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினரும் அலட்சியமாக இருந்தால் நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த இயலாது.

    எனவே, கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவது அவசியமாகிறது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள காய்கறிக்கடைகள் இன்று முதல் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மளிகை, சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியவை வாரத்தில் திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய 3 நாள்களில் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

    மருந்துக்கடைகள் தினசரி வழக்கம் போல் இயங்கும். பால் விற்பனை நிலையங்கள் தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் மட்டுமே விற்பனை நடைபெறும்.

    கோழி, ஆடு, மீன் இறைச்சிக்கடைகள் ஊரடங்கு காலம் முடியும் வரை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. பெட்டிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் மார்க்கெட்டுக்காக ஒதுக்கியுள்ள இடங்களுக்கு வெளியே புதிதாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.

    தடையை மீறி திறந்திருந்ததாக இதுவரை மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

    இக்கடைகள் மட்டுமின்றி இனிமேலும் சீல் வைக்கப்பட உள்ள கடைகளும் ஊரடங்கு முடிந்த பின்னரும் அடுத்த 3 மாதங்கள் வரை திறப்பதற்கு அனுமதிக்கப்படாது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அனைத்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் பிரார்த்தனை செய்ய முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பிரார்த்தனையோ, தொழுகையோ, அர்ச்சனைகளோ நடந்தால் உரிய அமைப்பினர் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×