search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து கிடக்கும் காட்சி.
    X
    நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து கிடக்கும் காட்சி.

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை மழை- 3 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்

    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கோடை மழை பெய்தது. இதில் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று 102 டிகிரி வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் வேலூர், அணைக்கட்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. சிறிது நேரத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் மழைபெய்யத்தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் தெருங்களில் மழை நீருடன், கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது.

    ரோட்டில் உள்ள கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றாததால் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.

    ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக லேசான மழை பெய்தது.

    சூறாவளி காற்று மற்றும் மழை காரணமாக ஆம்பூர் பகுதியில் சுமார் 2 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. குமாரமங்கலம் கிராமத்தில் சூறாவளி காற்று காரணமாக சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குடியாத்தம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மழை காரணமாக மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் மீது பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். பணியாளர்கள் மரங்களை அகற்றி மின் வயர்களை சீர்செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் நேற்று மாலை 5.30 மணி அளவில் திடீரென பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது. 6.30 மணி வரை கொட்டி தீர்த்தது. மழையின் போது தண்டராம்பட்டு அருகில் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரது மனைவி அம்பிகா (வயது 60). என்பவர் வீட்டுக்கு அருகில் இருந்த மாங்காய் மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இகுறித்து தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூசி அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வமணி (60). இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள அவரது நிலத்திற்கு சென்றார்.

    அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிர்ச்சியடைந்த செல்வமணி அங்கிருந்த ஏரிக்கால்வாயில் தவறி விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் மற்றும் தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறு, வந்தவாசி பகுதியில் பெய்த திடீர் மழையால் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயில் எடை போட கொண்டு வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமானது.
    Next Story
    ×