search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னை நார் தொழிற்சாலை"

    • முதலிபாளையம் கிராமத்தில் இருந்து புளியம்பட்டி வழி செல்லும் சாலையில் தனியார் தென்னை நார் சாய தொழிற்சாலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பெருமாள்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வருகிற 13-ந் தேதி காலை 10 மணி அளவில் ஊதியூர் பஸ் நிறுத்தத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா முதலிபாளையம் கிராமத்தில் இருந்து புளியம்பட்டி வழி செல்லும் சாலையில் தனியார் தென்னை நார் சாய தொழிற்சாலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை நிறுவினால் கிராம மக்களின் வாழ்வாதாரம், விவசாயம், நிலம், நிலத்தடி நீர் மற்றும் கால்நடை என அனைத்திற்கும் பாதிப்பு உண்டாகும். மேலும் வேளாண்மை செய்யும் நிலங்கள் மிகவும் மோசமடையும்.

    இப்பகுதியில் ஊராட்சி மன்றத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை தொடர்ந்து வரும் இந்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் நிலத்தடி நீருக்கும் சுற்றுச்சூழலுக்கும் உயிர்வேளிகளுக்கும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் எனவும் மக்கள் அஞ்சுகிறார்கள்.

    இந்த கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பெருமாள்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வருகிற 13-ந் தேதி காலை 10 மணி அளவில் ஊதியூர் பஸ் நிறுத்தத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாயிகள், தொழிலாளர்கள், அரசியல் கட்சியினரும், மற்ற அமைப்பினரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இந்த பிரச்சினை ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் பேசப்பட்டு ஒருமனதாக தொழிற்சாலை அமைய கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் பச்சாபாளையம் பகுதியிலும் தார் தொழிற்சாலை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை தடுக்க வேண்டும் என பச்சாம்பாளையம் பகுதி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊராட்சி அனுமதியின்றி நிறுவப்படும் தொழிற்சாலைகளை நிறுத்த வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • தென்னை நார், கோகோ பித் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • 95 சதவீதம் இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் தான் இயங்குகின்றது.

    உடுமலை:

    தென்னை நார் தொழிற்சாலைகளை, வெள்ளை நிற பிரிவில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்குரிய தீர்வை எதிர்பார்க்கிறோம் என கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளில் தென்னை நார், கோகோ பித் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தொழில் வெள்ளை நிற பிரிவில் இருந்து ஆரஞ்ச் பிரிவுக்கு மாற்றப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இந்நிலையில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ளை நிற பிரிவிலேயே தொடர வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தென்னை நார் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுதாகர் கூறியதாவது:-

    தேசிய பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தென்னை நார் தொழிலால் மாசு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் சென்றன. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு தமிழக அரசு வெள்ளை நிற பிரிவில் இருந்து ஆரஞ்ச் பிரிவுக்கு இத்தொழிலை மாற்றியது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டதால் வெள்ளை நிற பிரிவில் தொடர்கிறது. கடந்த 6 மாதத்துக்கு முன் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி வெள்ளை, பச்சை, ஆரஞ்சு என 3 வகைகளாக பிரிக்கலாம் என கருத்து கேட்டு தெரிவிக்க தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் 2 நாட்களுக்கு முன் சென்னையில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடந்தது.

    அதில் தென்னை நார் தொழில்கள் 95 சதவீதம் இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் தான் இயங்குகின்றன. எனவே தொழில் வெள்ளை நிற பிரிவுக்கு மாற்ற வேண்டும்.5 சதவீதம் மட்டும் ரசாயனம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் ஆரஞ்ச் நிறத்துக்கு மாற்றலாம். இது குறித்து அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

    இதற்கு அமைச்சர் பரிசீலனை செய்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

    நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எந்திரத்தில் இருந்து வந்த தீப்பொறி தென்னை நார்கள் மீது விழுந்து தீ பிடித்தது.
    • பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னை நார்கள் எரிந்து நாசம் ஆனது.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டத்துக்குட்பட்ட சங்கராமநல்லூரில் ஆண்டிபட்டி ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எந்திரத்தில் இருந்து வந்த தீப்பொறி தென்னை நார்கள் மீது விழுந்து தீ பிடித்தது. இதன் காரணமாக உலர் களத்தில் காய வைக்கப்பட்டு இருந்த தென்னை நார்கள் தீப்பிடித்து எரிந்தது. இதனை தொடர்ந்து உடுமலை தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த பல மணி நேரம் போராடினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னை நார்கள் எரிந்து நாசம் ஆனது. மேலும் உற்பத்தி செய்து குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த தென்னை நார்களும் எரிந்து சாம்பலானது . 

    ×