என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் அண்ணா சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் அருகே தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள், அம்மா உணவக பணியாளர்கள், மற்றும் சுகாதாரம் பணியாளர்கள், சுமார் 1000 பேருக்கு வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் கபசுரக் குடிநீர், முககவசம் கைகளை கழுவ சோப், கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்க கிருமி நாசினி ஆகியவற்றை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ சதீஷ் குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு பகுதி செயலாளர் எஸ்.நாகு என்கிற நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சூளை மணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அண்ணாமலை, அல்லாபுரம் மேற்கு பகுதி செயலாளர் ஏ.ஜி.பாண்டியன், நிர்வாகிகள் ராமஜெயம், முனுசாமி மகேஸ்வரி, மாநகராட்சி அலுவலர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு முதல்வர் வழங்கிய அறிவுரைகளை எடுத்துக் கூறியும், முககவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதனை பொதுமக்களுக்கு விளக்கியும் சொல்லப்பட்டது. கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கழுவிய பின்னரே முகங்களில் தொடுவதும், சாப்பிடுவதற்கு முன்னரும், பின்னரும் கைகளை கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும் அம்மா உணவகத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வரும் மதிய உணவானது ஊரடங்கு முடியும் வரை தொடரும் என சதீஷ்குமார் தெரிவித்தார்.
வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் வேலூரில் தங்கியுள்ளனர். இவர்கள் லாட்ஜிகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
இதில் வங்காளதேச நாட்டை சேர்ந்த 50 பேர் 28 நாட்களுக்கு மேல் தனிமையில் இருந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இதை தொடர்ந்து அவர்கள் தங்களது நாட்டுக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து வேலூரில் இருந்து 50 பேரும் நேற்று மாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று வங்காளதேசத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு மீறி வெளியே சுற்றுபவர்களின் வானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை திருப்பி ஒப்படைக்கும் பணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
வாகனங்களை ஒப்படைக்கும் போது அதன் உரிமையாளரிடம் போலீசார் லஞ்சம் வாங்க கூடாது. அதனை மீறி பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஊரடங்கு மீறியதாக தள்ளுவண்டி ஒன்றை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார், ஏட்டு மணிமேகலை ஆகியோர் பறிமுதல் செய்துள்ளனர். அந்த வண்டியை திருப்பி ஒப்படைக்க பணம் கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக டி.ஐ.ஜி காமினிக்கு புகார் வந்தது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் இதுபற்றி விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் பணம் வசூல் செய்தது உறுதியானது.
இதனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் ஏட்டு மணிமேகலை ஆகியோரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதேபோல் வேலூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மஞ்சுநாதன் ஊரடங்கின் போது அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் வந்தது. அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
வேலூர் வடக்கு போலீஸ் நிலைய எழுத்தர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி பனமடங்கி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர், பாகாயம், போலீஸ் நிலையத்தில் எழுத்தராக உள்ள சப்-இன்ஸ் பெக்டர் பாலமுருகன் வாகனங்களை ஒப்படைக்க பணம் கேட்டதாக புகார் வந்தது. இதனையடுத்து அவர் பனமடங்கி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
இந்த அதிரடி நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கருகம்பத்தூர், கஸ்பா, சின்னஅல்லாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 குணமடைந்து நேற்று முன் தினம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது வீடுகளில் 14 நாள்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 3 பேரில் 2 பேர் தங்களது சிகிச்சை அனுபவம் குறித்து தெரிவித்துள்ளனர்.
கஸ்பா பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வரும் 41 வயது நபர் கூறியதாவது:-
கடந்த 30-ந்தேதி அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது.
அப்போது எனது உடலில் சளி, இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை.
தொடர்ந்து நாள்தோறும் காலை, இரவு வேளையில் மாத்திரைகள் மட்டுமே அளிக்கப்பட்டன. ஊசிகள் ஏதும் போடவில்லை. 3 வேளையில் சிறப்பான சைவ உணவுகள் வழங்கப்பட்டன. டாக்டர்களும், நர்சுகளும் நல்லமுறையில் எங்களை கவனித்துக் கொண்டனர்.
தொடர்ந்து வாரத்துக்கு ஒருமுறை என 3 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் கடைசி 2 பரிசோதனை முடிவுகளில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் பொதுமக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
பாதிப்பு ஏற்பட்டவர்கள் டாக்டர்கள் கூறும் வழிமுறைகளை முறையாக பின்பற்றினாலே கொரோனாவில் இருந்து எளிதில் விடுபடலாம் என்றார்.
சின்னஅல்லாபுரம் பகுதியை சேர்ந்த வாசனைப் பொருள்கள் வியாபாரியான 25 வயது வாலிபர் கூறியதாவது:-
டாக்டர்கள் கூறும் வழிமுறைகளை முறையாக பின்பற்றி மாத்திரைகளையும், அவர்கள் அளித்த உணவுகளையும் எடுத்துக் கொண்டேன்.
இதன்மூலம் 20 நாள்களில் கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளேன். தொடர்ந்து 14 நாள்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லக் கூடாது என்றும் அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர்.
அதன்படி, தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறேன். கொரோனா நோய்த் தொற்று குறித்து மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதைக் கைவிட்டு அரசும், மருத்துவர்களும் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றினாலே கொரோனா நோய்த் தொற்று வராமல் தடுக்கவும், வந்தாலும் விரைவில் குணமடையவும் முடியும் என்றார்.
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ஹவுசிங் போர்டு பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு 4வாலிபர்கள் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தனர். அதில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் ராணிப்பேட்டையை சேர்ந்த யுவராஜ், வாசு, அரவிந்தன் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய ஜெயபிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
இவர்கள் கடந்த மார்ச் மாதம் ராணிப்பேட்டை சிப்காட்டில் பெண்ணிடம் நகை பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்தனர்.தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தப்பி ஓடிய ஜெயபிரகாஷ் மற்றும் சென்னையை சேர்ந்த 4 பேர் என 8 பேர் சேர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருட்டு மற்றும் வழிப்பறி செய்வதில் ஏற்பட்ட போட்டி காரணமாக சென்னையை சேர்ந்த ஆசிப் விழுப்புரத்தைச் சேர்ந்த நவீன், சூர்யா ஆகிய 3 பேரையும் வெட்டிக் கொலை செய்து திருவலம்கெம்பராஜபுரம் கிராமத்தில் உள்ள பனந்தோப்பு பகுதி பொன்னையாற்றில் புதைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் 3 பேரின் புகைப்படங்களையும் குற்றவாளிகள் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களை வைத்து சென்னை விழுப்புரத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார். வேலூரில் கிளப் நடத்தி வந்தார். நேற்று மதியம் சாப்பிடுவதற்காக குட்டை மேடு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஆட்டோவில் வந்த 6 பேர் கும்பல் உதயகுமாரை வழிமறித்து கத்தியால் வெட்டி கொன்றனர்.பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
விசாரணையில் உதயகுமாரை வெட்டிக் கொன்றது அதே பகுதியை சேர்ந்த அப்பு என்கிற இமானுவேல், அட்டப்பா என்கிற நவீன்குமார் அந்திரேஷ், நிர்மல், வெங்கடேசன், ஆல்வா என்கிற ஆரோக்கிய மேரி என்பது தெரியவந்தது. இன்று காலை 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கொலையான உதயகுமார் மீது கட்டப்பஞ்சாயத்து உட்பட அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. உதயகுமாருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்து 6 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அந்திரேஷ் என்பவரின் தங்கையை 4-வதாக காதலித்து திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதற்கு அந்திரேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அந்திரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து உதயகுமாரை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 21 பேர் மாநகராட்சிக்கு உட்பட்ட 30, 51, 52 மற்றும் 56 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட சைதாப்பேட்டை, ஆர்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.
இப்பகுதிகளிலுள்ள தெருக்கள் ஏற்கெனவே சீலிடப்பட்டு அங்குள்ள அனைத்து வீடுகளிலும் சுகாதாரக் குழுவினர் உடல்நல பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆர்.என்.பாளையத்தில் 9, கொணவட்டத்தில் 4, கருகம்பத்தூரில் 3, சைதாப்பேட்டையில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் அப்பகுதிகள் முழுவதும் போலீசார் மூலம் நூறு சதவீதம் சீலிடப்பட்டு முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அப்பகுதி மக்கள் எக்காரணத்துக்காகவும் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அவர்களின் வசதிக்காக பால், மளிகை, காய்கறிகள் ஆகியவை வேலூர் மாநகராட்சி, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டப் பணியாளர்களைக் கொண்டு பிரத்யேக வாகனங்கள் மூலம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை நேரடியாக விநியோகிக்கப்படும். இந்த பணியில் மொத்தம் 30 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
அப்பகுதிகளில் மருந்துக்கடைகளை மட்டும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் பணத் தேவைக்காக ஏ.டி.எம். செல்வதைத் தவிர்ப்பதற்காக வங்கி தொடர்பாளர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் பள்ளிகளிலேயே காலை 9 மணி முதல் 12 மணி வரை கையடக்க ஏ.டி.எம். எந்திரம் மூலம் பணம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களுக்கு ஆர்டரின் பேரில் மளிகைப் பொருள்களை வீடுகளுக்கு சென்று வழங்க ‘ஹலோ வேலூர்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 0416-2252501, 2252661 ஆகிய எண்களில் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
மறுநாள் காலை நகரில் தேர்வு செய்யப்பட்ட மொத்த விற்பனைக் கடைகள் மூலம் நேரடியாக அவர்களது இல்லத்துக்கே சென்று பணத்தை பெற்றுக்கொண்டு பொருள்கள் அளிக்கப்படும். இதற்காக ஒரு ஆர்டரின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் தினமும் 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். கட்டுப்பாட்டு பகுதி மக்களின் அவசரத் தேவைகள், புகார்களுக்கு கலெக்டர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 0416-2258016 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த டீக்கடைக்காரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனையடுத்து அவர் வீடு உள்ள பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கொரோனா அறிவதற்கு முன்பாக அவருக்கு சைதாப்பேட்டையை சேர்ந்த 74 வயது டாக்டர் சிகிச்சை அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் டாக்டர் மற்றும் ஏற்கனவே பலியானவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த 25 வயது வாலிபர், 30 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவி, மகன் மற்றும் அவரது கிளினீக்கில் பணியாற்றிய ஊழியர்கள் உள்பட அதே பகுதியை சேர்ந்த 30 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடைய ரத்தம், சளி சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் சுகாதார பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் 7 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதில் 185 பேர் ரத்தம், சளி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் 2 நாட்களில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆற்காடு:
திமிரி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திமிரி பஜாரில் நடந்தது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், இன்ஸ்பெக்டர் காண்டீபன், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் ஷர்மிளா, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்ஞானவேல், முன்னிலையில் திமிரிசேர்ந்த ஓவியர்கள் இளைஞர்கள் உட்பட பலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் சாலையில் வரைந்தனர். மேலும் வைரஸ் பரவலை தடுக்க உறுதி மொழி ஏற்றனர்.
வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயது வியாபாரி வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் எலுமிச்சை மொத்த விற்பனை கடை வைத்துள்ளார்.
இவரது 52 வயது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 60 வயது எலுமிச்சை வியாபாரி மற்றும் அவரது 29 வயது மகள் மற்றும் 4 வயது பேத்தி ஆகியோருக்கும் கொரோனா இருப்பது நேற்று உறுதியானது.
இதனையடுத்து அவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக வியாபாரி குடும்பத்தினர் கொணவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை, தனியார் கிளினீக்கில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து 2 ஆஸ்பத்திரிகளில் உள்ள 3 டாக்டர்கள், 10 நர்சுகள் உள்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
மேலும் கொணவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களில் சிகிச்சை பெற்ற இதர நோயாளிகளும், அவர்களுடன் வந்த உறவினர்கள் அனைவரும் உடனடியாக தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
வியாபாரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் மார்க்கெட் பகுதியில் அவரது கடைக்கு அருகில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் அங்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இன்று காலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே பழைய பஸ் நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்தனர். மார்க்கெட்டில் உள்ள அனைத்து வியாபாரிகள் மற்றும் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என அனைவரையும் சுகாதாரத் துறையினர் அழைத்துவந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதில் 50 வியாபாரிகள் ரத்தம், சளி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
வியாபாரி குடும்பத்தினர் வசிக்கும் கொணவட்டம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 12 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிந்தவர்கள் அவர்களுடன் பழக்கத்தில் உள்ளவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தாங்களாகவே பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் நேதாஜி மார்க்கெட், மண்டி தெரு, லாங்கு பஜார் பகுதியில் அனைத்து இடங்களிலும் சுகாதார பணிகள் இன்று காலையில் தீவிரப்படுத்தப்பட்டன. அங்கு லைசால் கரைசல் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டது. மார்க்கெட்டிற்கு வந்த வாகனங்களுக்கு மருந்து தெளித்தனர்.
ஒரே நாளில் வியாபாரி குடும்பத்தினர் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டதால் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூரில் சிகிச்சைக்காக வந்த வெளிமாநிலத்தவர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் லாட்ஜிகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. சிகிச்சை முடிந்தவர்கள் தங்களை ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வேலூர் நகரப்பகுதிகளில் பலூன், பொம்மை, ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
அவர்கள் கூறுகையில்:- தற்போது ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவிக்கிறோம். மேலும் வாடகை செலுத்த பணம் இல்லாததால் தங்குமிடம் இல்லை. சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுகிறோம்.
எனவே தங்குமிடம், உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வடமாநில வாலிபர்கள் சமூக இடைவெளி இல்லாமல் மொத்தமாக திரண்டு வந்து கலெக்டர் அலுவலகம் அருகே சாலையில் நின்றனர். அவர்களை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.






