என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பணியில் மருத்துவர்கள்
    X
    கொரோனா பணியில் மருத்துவர்கள்

    டாக்டர்களின் ஆலோசனைப்படி நடந்தால் கொரோனாவை வெல்ல முடியும் - வேலூரில் குணமடைந்த 2 பேர் பேட்டி

    மருத்துவர்களும் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றினாலே கொரோனா நோய்த் தொற்று வராமல் தடுக்கவும், வந்தாலும் விரைவில் குணமடையவும் முடியும் என குணமடைந்த நபர் தெரிவித்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கருகம்பத்தூர், கஸ்பா, சின்னஅல்லாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 குணமடைந்து நேற்று முன் தினம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தற்போது வீடுகளில் 14 நாள்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 3 பேரில் 2 பேர் தங்களது சிகிச்சை அனுபவம் குறித்து தெரிவித்துள்ளனர்.

    கஸ்பா பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வரும் 41 வயது நபர் கூறியதாவது:-

    கடந்த 30-ந்தேதி அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது.

    அப்போது எனது உடலில் சளி, இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை.

    தொடர்ந்து நாள்தோறும் காலை, இரவு வேளையில் மாத்திரைகள் மட்டுமே அளிக்கப்பட்டன. ஊசிகள் ஏதும் போடவில்லை. 3 வேளையில் சிறப்பான சைவ உணவுகள் வழங்கப்பட்டன. டாக்டர்களும், நர்சுகளும் நல்லமுறையில் எங்களை கவனித்துக் கொண்டனர்.

    தொடர்ந்து வாரத்துக்கு ஒருமுறை என 3 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் கடைசி 2 பரிசோதனை முடிவுகளில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் பொதுமக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

    பாதிப்பு ஏற்பட்டவர்கள் டாக்டர்கள் கூறும் வழிமுறைகளை முறையாக பின்பற்றினாலே கொரோனாவில் இருந்து எளிதில் விடுபடலாம் என்றார்.

    சின்னஅல்லாபுரம் பகுதியை சேர்ந்த வாசனைப் பொருள்கள் வியாபாரியான 25 வயது வாலிபர் கூறியதாவது:-

    டாக்டர்கள் கூறும் வழிமுறைகளை முறையாக பின்பற்றி மாத்திரைகளையும், அவர்கள் அளித்த உணவுகளையும் எடுத்துக் கொண்டேன்.

    இதன்மூலம் 20 நாள்களில் கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளேன். தொடர்ந்து 14 நாள்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லக் கூடாது என்றும் அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர்.

    அதன்படி, தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறேன். கொரோனா நோய்த் தொற்று குறித்து மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதைக் கைவிட்டு அரசும், மருத்துவர்களும் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றினாலே கொரோனா நோய்த் தொற்று வராமல் தடுக்கவும், வந்தாலும் விரைவில் குணமடையவும் முடியும் என்றார்.

    Next Story
    ×