என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயில் எரிந்து நாசமான எந்திரங்கள்.
    X
    தீயில் எரிந்து நாசமான எந்திரங்கள்.

    குடியாத்தத்தில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

    குடியாத்தத்தில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கூட நகரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க ஒன்றிய துணைச்செயலாளர் ஜி.பி.மூர்த்தி என்கிற காடைமூர்த்தி. இவர் அதே பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    தற்போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் தடை உத்தரவு உள்ளதால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அந்த தென்னை நார் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. நேற்று மதியம் அந்த தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் நார்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    அங்கிருந்த எந்திரங்கள் மளமளவென எரிந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காடை மூர்த்தி உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் உதவியுடன் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 தென்னை நார் எந்திரங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

    குடியாத்தம் தாசில்தார் வத்சலா உள்ளிட்ட வருவாய் துறையினர் தீ விபத்து ஏற்பட்ட தென்னை நார் தொழிற்சாலையில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமானுஜம், தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினார்கள். 

    இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×