என் மலர்tooltip icon

    வேலூர்

    சத்துவாச்சாரி பகுதியில் தொடர்ந்து திருட்டு நடப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் கடந்த சில நாட்களாக 3 சிறுவர்கள் சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சத்துவாச்சாரி கானாறு தெரு, பள்ளிக்கூட தெரு பகுதியில் 2 வீடுகளில் சிறுவர்கள் புகுந்து திருட்டில் ஈடுபட்டனர். பொது மக்கள் அவர்களை விரட்டிச் சென்றபோது தப்பிவிட்டனர்.

    சத்துவாச்சாரி வ.உ.சி. நகரில் உள்ள ஒரு வீட்டில் சிறுவர்கள் புகுந்து ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டனர்.

    இதேபோல் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்த வெள்ளி சாமான்கள், பூஜை பொருட்களை திருடினர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் கண்விழித்தனர். அவர்கள் வீட்டில் சிறுவர்கள் திருடிச் செல்வதை கண்டு கூச்சலிட்டனர். இதனால் பயந்துபோன சிறுவர்கள் வெள்ளி பொருட்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இந்த நிலையில் சத்துவாச்சாரி சக்திநகர் 1-வது தெருவில் ஒரு குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தனர். கடந்த ஒருவாரமாக வீடு பூட்டி கிடந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு திருட்டு கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை, மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் அங்கு வந்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

    சத்துவாச்சாரி பகுதியில் தொடர்ந்து திருட்டு நடப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ஏற்கனவே சத்துவாச்சாரியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ள 3 சிறுவர்கள் தான் இங்கும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 3 சிறுவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்த 3 சிறுவர்களுக்கும் 15 வயது முதல் 18 வயதுக்கு உள்ளாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பள்ளிகொண்டா அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் (வயது53). விவசாயி. இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    சதாசிவத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அருகே ஏரிக் கரையை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. சதாசிவம் தினமும் விவசாய நிலத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் சதாசிவம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். இன்று அதிகாலை கடுமையான பனி மூட்டம் நிலவியதால் ஓசூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் சாலையை கடக்கும் சதாசிவத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சதாசிவம் தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சதாசிவம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    வேலூர்:

    தமிழக - ஆந்திர மாநில எல்லை பகுதியான, வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் போலீஸ், வணிகவரி மற்றும் வட்டார போக்குவரத்து மற்றும் வனத்துறைகளின் சோதனைச்சாவடி தனித்தனியாக இயங்கி வருகிறது.

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர், சொந்தமாக நெல்அறுவடை இயந்திரம் வைத்துள்ளார். விஜய் உட்பட 5 பேர், ஆந்திர மாநிலத்தில் நெல்அறுவடை செய்வதற்காக, சேலத்தில் இருந்து வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக ஆந்திராவுக்கு நெல் அறுவடை எந்திரங்களை நேற்று முன்தினம் ஓட்டிச் சென்றனர்.


    காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடிக்கு அவர்கள் வந்தனர். அப்போது, அங்கு பணியிலிருந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள், இவர்களின் வாகனங்களை மடக்கியுள்ளனர். தொடர்ந்து, ஒரு வாகனத்துக்கு தலா 500 ரூபாய் வீதம் 5 வாகனங்களுக்கும் லஞ்சம் வாங்கிய பிறகே, அவர்களை தொடர்ந்து செல்ல அதிகாரிகள் அனுமதித்ததாக தெரிகிறது.

    இதனால், விஜய் உட்பட 5 பேரும், இப்படி வரும் வழியெல்லாம் சோதனை என்ற பெயரில் வசூலிக்கிறார்களே என புலம்பியபடியே வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.

    ஆந்திர எல்லையை நெருங்குவதற்கு சிறிது தூரத்துக்கு முன்னரே, அவர்களின் வாகனங்களை காட்பாடி போலீஸ் சோதனை சாவடியில் பணியிலிருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பைக்கில்ல் வேகமாகச் சென்று மடக்கினார்.

    இதைக்கண்ட விஜய் உட்பட 5 பேரும் நெல்அறுவடை எந்திரவாக னங்களை நிறுத்திவிட்டு, வேகமாக கீழே இறங்கி, பதட்டத்துடனேயே அவர் அருகில் வந்தனர். தொடர்ந்து, அவர்களிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மாமூல் தரும்படி கேட்டுள்ளார். 5 வாகனங்களுக்கும் 300 ரூபாய் வாங்கியபடியே, அவர்களிடம் டேய், என்கிட்ட பேசாதே... ஆர்டிஓக்கு வண்டிக்கு 500 ரூபாய் கொடுக்கிறீர்கள், அதெல்லாம் தெரியவில்லை எனக்கூறி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

    நெல்அறுவடை எந்திரம் ஓட்டி வந்தவர்களிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாக பரவியது. அது மட்டுமின்றி, போலீஸ் துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் நெல் எந்திரங்கள் கொண்டு வந்தவர்களிடம் ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியில் லஞ்சம் பெறும் மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

    ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கச் செல்லும்போது வாடிக்கையாளர்கள் ஹெல்மெட் அணிந்தோ, முகத்தில் துணி கட்டியோ செல்லக்கூடாது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் நிகழாமல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக வங்கி மேலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி. சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இன்ஸ்பெக்டர் அபர்ணா வரவேற்றார். எஸ்.பி. செல்வகுமார் தலைமை வகித்து பேசியதாவது:-

    சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க வாடிக்கையாளர் விவரங்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கச் செல்லும்போது வாடிக்கையாளர்கள் ஹெல்மெட் அணிந்தோ, முகத்தில் துணி கட்டியோ செல்லக்கூடாது.

    வாடிக்கையாளர் முன்பின் தெரியாத நபரிடம் பணம் எடுக்க ஏ.டி.எம். கார்டு ரகசிய நம்பரை தரக்கூடாது. ஆன்லைன் மூலமாக நடக்கும் மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் சைபர் கிரைம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உரிய ஒத்துழைப்புகளை வங்கி மேலாளர்கள் அளிக்க வேண்டும்‌. அதேபோல் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்தியும் ஏ.டி.எம். மெஷினில் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு எஸ்.பி. ஆலோசனை வழங்கினார்.

    குடியாத்தத்தில் பைக் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பைக்குகள் திருடி செல்வதாக புகார்கள் வந்தன.

    இதைதொடர்ந்து போலீசார் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடியாத்தம் கஸ்பா அரசமர தெருவைச் சேர்ந்தவர் விஷ்ணு என்கிற வசீகரன் (வயது 19) என தெரியவந்தது. மேலும் வசீகரன் ஓட்டி வந்ததது திருட்டு மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது.

    தொடர்ந்து விசாரணையில் வசீகரன் குடியாத்தம் புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெரு, கீழ் சுதந்திர வீதி, கள்ளூர் கேஎம்ஜி கார்டன், காமாட்சியம்மன்பேட்டை, திருமலை கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகளை திருடியது தெரியவந்தது.

    வசீகரனிடம் இருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு என்கிற வசீகர கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 17 வயதில் மகள் உள்ளார்.

    வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 21) என்பவர் கடந்த 25-ந் தேதி மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக பெண்ணின் தாய் உமராபாத் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பாண்டியனை மைனர் பெண்ணுடன் வடசேரி கூட்டு ரோட்டில் மடக்கிப்பிடித்தனர்.

    பின்னர் பெண்ணை கடத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
    வேலூரிலிருந்து - சென்னை, ஆற்காடு, வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருப்பத்துர், தருமபுரி மற்றும் ஓசூர் மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும் பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
    வேலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மண்டலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    திருச்சிக்கு 5, பெங்களூருக்கு 10 பஸ்களும், ஓசூருக்கு 20, தருமபுரிக்கு 5 பஸ்களும், சென்னைக்கு 75 பஸ்களும் இயக்கப்படும். மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வேலூரிலிருந்து - சென்னை, ஆற்காடு, வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருப்பத்துர், தருமபுரி மற்றும் ஓசூர் மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும் பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

    தீபாவளிக்கு பின்னர் 5-ந் தேதி முதல் 8-ந்தேதி வரை கூடுதலாக திருப்பத்துர், வேலுர் ஆற்காடு ஆகிய இடங்களிலிருந்து பெங்களுருக்கு 20 பஸ்களும், சென்னைக்கு 100 பஸ்களும் ஓசூருக்கு 30 பஸ்களும் இயக்கப்படும் என கலெக்டர்குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 49,820 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,519 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,130 பேர் பலியாகியுள்ளனர்.

    இன்று வேலூர் மாவட்டத்தில் 23 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 21 பேர் குணமடைந்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு தளர்வு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிய வேண்டாம். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    தமிழகத்தில் 106 முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக 20 ஆயிரம் புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் வேலூரில் வருகிற 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் 312 குடும்பங்களைச் சேர்ந்த 992 பேர் வசிக்கின்றனர்.

    இங்கு புதிதாக சுமார் 300 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டவும், குடிநீர், சாலை வசதி, வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான சுழல்நிதி, முகாமில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புத் தொழில் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 3-ந்தேதி வேலூருக்கு வருகைதர உள்ளார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் செய்வது குறித்து, மேல்மொணவூர் இலங்கைத் தமிழர் முகாமில் சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 106 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக 20 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இந்தத் திட்டத்தை மேல்மொணவூர் முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

    அடுத்த 10 நாள்களுக்குள் அனைத்து மாவட்டங்களிலுள்ள முகாம்களிலும் குடியிருப்புகள் கட்டும் பணியை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் தொடங்கி வைப்பார்கள்.

    வேலூர் மேல்மொணவூர் முகாமில் மட்டும் சுமார் 300 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதுதவிர, இலங்கைத் தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சட்டப்பேரவை 110 விதியின்கீழ், ரூ.317 கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றார்.

    அப்போது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    குடியாத்தம் நகராட்சியில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகளில் வாடகை பாக்கி ஒரு கோடியே 50 லட்சத்திற்கும் மேலாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வாடகை பாக்கியை வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் நகராட்சி கடைகளில் வாடகைக்கு உள்ளவர்கள் சிலர் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்குமாறு வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பி.குபேந்திரன் உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சிசில் தாமஸ் மேற்பார்வையில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் மேலாளர் டி.கே. சுகந்தி, வருவாய் ஆய்வாளர் சந்திரமோகன், நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன், உதவியாளர் யுவராஜ் உள்ளிட்டோர் கொண்ட நகராட்சி அதிகாரிகள் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட அண்ணா தெரு, அர்ஜுன முதலி தெரு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாடகை பாக்கி வைத்திருந்த 12 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    நகராட்சி அதிகாரிகள் வாடகை பாக்கி வைத்திருக்கும் கடைகளுக்கு சீல் வைக்க வரும் தகவல் அறிந்ததும் சில கடைக்காரர்கள் தங்களின் வாடகை பாக்கியை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தியுள்ளனர்.

    கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் இன்று 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    ஆனாலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று வேலூர் மாவட்டத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகராட்சி பகுதியில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் இன்று 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

    குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

    இதன்மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிர் இழப்பை தடுக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் பூவேந்தன் (வயது 54). வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணிக்கு செல்வதற்காக சேண்பாக்கத்தில் இருந்து பைக்கில் சத்துவாச்சாரி வந்துகொண்டிருந்தார்.

    புதிய பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலைதடுமாறி பூவேந்தன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×