என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இலங்கைத் தமிழர்களுக்கு 20 ஆயிரம் குடியிருப்புகள்: வேலூரில் 3-ந்தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

    தமிழகத்தில் 106 முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக 20 ஆயிரம் புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் வேலூரில் வருகிற 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் 312 குடும்பங்களைச் சேர்ந்த 992 பேர் வசிக்கின்றனர்.

    இங்கு புதிதாக சுமார் 300 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டவும், குடிநீர், சாலை வசதி, வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான சுழல்நிதி, முகாமில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புத் தொழில் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 3-ந்தேதி வேலூருக்கு வருகைதர உள்ளார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் செய்வது குறித்து, மேல்மொணவூர் இலங்கைத் தமிழர் முகாமில் சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 106 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக 20 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இந்தத் திட்டத்தை மேல்மொணவூர் முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

    அடுத்த 10 நாள்களுக்குள் அனைத்து மாவட்டங்களிலுள்ள முகாம்களிலும் குடியிருப்புகள் கட்டும் பணியை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் தொடங்கி வைப்பார்கள்.

    வேலூர் மேல்மொணவூர் முகாமில் மட்டும் சுமார் 300 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதுதவிர, இலங்கைத் தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சட்டப்பேரவை 110 விதியின்கீழ், ரூ.317 கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றார்.

    அப்போது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×