என் மலர்
செய்திகள்

வேலூர் சத்துவாச்சாரியில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் கடந்த சில நாட்களாக 3 சிறுவர்கள் சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சத்துவாச்சாரி கானாறு தெரு, பள்ளிக்கூட தெரு பகுதியில் 2 வீடுகளில் சிறுவர்கள் புகுந்து திருட்டில் ஈடுபட்டனர். பொது மக்கள் அவர்களை விரட்டிச் சென்றபோது தப்பிவிட்டனர்.
சத்துவாச்சாரி வ.உ.சி. நகரில் உள்ள ஒரு வீட்டில் சிறுவர்கள் புகுந்து ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டனர்.
இதேபோல் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்த வெள்ளி சாமான்கள், பூஜை பொருட்களை திருடினர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் கண்விழித்தனர். அவர்கள் வீட்டில் சிறுவர்கள் திருடிச் செல்வதை கண்டு கூச்சலிட்டனர். இதனால் பயந்துபோன சிறுவர்கள் வெள்ளி பொருட்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்த நிலையில் சத்துவாச்சாரி சக்திநகர் 1-வது தெருவில் ஒரு குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தனர். கடந்த ஒருவாரமாக வீடு பூட்டி கிடந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு திருட்டு கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை, மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் அங்கு வந்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
சத்துவாச்சாரி பகுதியில் தொடர்ந்து திருட்டு நடப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே சத்துவாச்சாரியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ள 3 சிறுவர்கள் தான் இங்கும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 3 சிறுவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த 3 சிறுவர்களுக்கும் 15 வயது முதல் 18 வயதுக்கு உள்ளாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.






