என் மலர்
செய்திகள்

விரட்டிச் சென்று லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
வேலூர்:
தமிழக - ஆந்திர மாநில எல்லை பகுதியான, வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் போலீஸ், வணிகவரி மற்றும் வட்டார போக்குவரத்து மற்றும் வனத்துறைகளின் சோதனைச்சாவடி தனித்தனியாக இயங்கி வருகிறது.
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர், சொந்தமாக நெல்அறுவடை இயந்திரம் வைத்துள்ளார். விஜய் உட்பட 5 பேர், ஆந்திர மாநிலத்தில் நெல்அறுவடை செய்வதற்காக, சேலத்தில் இருந்து வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக ஆந்திராவுக்கு நெல் அறுவடை எந்திரங்களை நேற்று முன்தினம் ஓட்டிச் சென்றனர்.
காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடிக்கு அவர்கள் வந்தனர். அப்போது, அங்கு பணியிலிருந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள், இவர்களின் வாகனங்களை மடக்கியுள்ளனர். தொடர்ந்து, ஒரு வாகனத்துக்கு தலா 500 ரூபாய் வீதம் 5 வாகனங்களுக்கும் லஞ்சம் வாங்கிய பிறகே, அவர்களை தொடர்ந்து செல்ல அதிகாரிகள் அனுமதித்ததாக தெரிகிறது.
இதனால், விஜய் உட்பட 5 பேரும், இப்படி வரும் வழியெல்லாம் சோதனை என்ற பெயரில் வசூலிக்கிறார்களே என புலம்பியபடியே வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.
ஆந்திர எல்லையை நெருங்குவதற்கு சிறிது தூரத்துக்கு முன்னரே, அவர்களின் வாகனங்களை காட்பாடி போலீஸ் சோதனை சாவடியில் பணியிலிருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பைக்கில்ல் வேகமாகச் சென்று மடக்கினார்.
இதைக்கண்ட விஜய் உட்பட 5 பேரும் நெல்அறுவடை எந்திரவாக னங்களை நிறுத்திவிட்டு, வேகமாக கீழே இறங்கி, பதட்டத்துடனேயே அவர் அருகில் வந்தனர். தொடர்ந்து, அவர்களிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மாமூல் தரும்படி கேட்டுள்ளார். 5 வாகனங்களுக்கும் 300 ரூபாய் வாங்கியபடியே, அவர்களிடம் டேய், என்கிட்ட பேசாதே... ஆர்டிஓக்கு வண்டிக்கு 500 ரூபாய் கொடுக்கிறீர்கள், அதெல்லாம் தெரியவில்லை எனக்கூறி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நெல்அறுவடை எந்திரம் ஓட்டி வந்தவர்களிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாக பரவியது. அது மட்டுமின்றி, போலீஸ் துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நெல் எந்திரங்கள் கொண்டு வந்தவர்களிடம் ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியில் லஞ்சம் பெறும் மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






