என் மலர்
வேலூர்
- பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டது
- ஜெயிலில் அடைத்தனர்
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா கேம்ரான்பேட்டை, கஸ்தூரி பாய் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது பைக் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து பள்ளிகொண்டா போலீசில் மதன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று சந்தேகத்தின் பேரில் பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டையை சேர்ந்த கிரிபிரசாந்த் (23) என்பதும் பள்ளிகொண்டா பகுதியில் மதனின் பைக்கை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் கிரிபிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- குப்பை கிடங்கில் கொட்டப்பட்டன
- பொதுமக்கள் சிலர் குப்பைகளை அவர்களே எரித்தனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் வழக்கமாக நாளொன்றிற்கு சுமார் 190 முதல் 200 டன் குப்பை சேரும். இந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது. இதனை அடுத்து திடக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு நகர் முழுவதும் குவிந்துள்ளன. நேற்று தீபாவளி தினத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக மாக கொண்டாடினர்.
இதனால் பல இடங்களில் பட்டாசு கழிவுகள் குவிந்தன. இது தவிர சாலையோர கடைகளில் கடந்த சில நாட்களாக புத்தாடை விற்பனை மும்முரமாக நடந்தது. அதில் தேவையில்லாத பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளும் சாலையோரம் குவிந்தன.
இப்படி பட்டாசு வெடி த்தது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என வழக்கத்தை விட கூடுதலாக 20 டன் அளவிற்கு குப்பை சேர்ந்து உள்ளது . அதாவது இன்று காலையில் அனைத்து குப்பைகள் சேர்ந்து சுமார் 220 டன் குப்பைகள் குவிந்தன.
இதனை தொடர்ந்து இன்று காலையில் வேலூர் மாநகர் முழுவதும் குவிந்திருந்த குப்பைகளை 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மை செய்தனர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டன. பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் சேர்ந்த தீபாவளி பட்டாசு குப்பைகளை அவர்களே எரித்தனர்.
- பட்டாசு வெடிக்கும் பொழுது நவிஷ்கா ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்.
- வாழைபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28), டிரைவர். இவரது மனைவி அஸ்வினி (25). தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வேண்டுமென நவீஷ்கா தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து ரமேஷ் தனது மகளுடன் கடைக்கு சென்று விதவிதமான பட்டாசுகளை வாங்கி வந்தனர்.
நேற்று மாலை நவீஷ்கா தனது குடும்பத்தினருடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். தந்தை ரமேஷ் விதவிதமான பட்டாசுகளை வெடித்தார். அதனை பார்த்து சிறுமி மகிழ்ச்சியடைந்தார்.
பட்டாசு வெடிக்கும் பொழுது நவிஷ்கா ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்.
அப்போது சிறுமியின் பெரியப்பாவான ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) பெரிய அணுகுண்டு வகை பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி பட்டாசு அருகே சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஓடிப்போய் சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறி விக்னேஷ் மற்றும் சிறுமியின் மீது விழுந்தது.
இதில் விக்னேசுக்கு வலது கையிலும், சிறுமிக்கு கை மற்றும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் நவிஷ்கா அலறி துடித்தாள்.
இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவிஷ்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.
ஆஸ்பத்திரியில் குழந்தையின் தாய் அஸ்வினி கதறி அழுதகாட்சி காண்பவர்களின் நெஞ்சை கரையச் செய்தது.
சிறுமியின் பெரியப்பா விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாழைபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தினார்
- இனிப்புகள், பட்டாசுகள் வழங்கப்பட்டது
வேலூர்:
விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து சத்துவாச்சாரியில் உள்ள ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எப்பொழுதுமே திறந்தவெளியைத் தேர்ந்தெடுத்து, அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிக்கத் தொடங்க வேண்டும். மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள், நடமாடும் இடங்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களிலிருந்து சற்று ஒதுங்கி, பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
எப்பொழுதுமே பட்டாசுகளை வெடிக்க நீளமான அகர்பத்தியை பயன்படுத்துவது நல்லது.
மரங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் இருக்கும் இடங்களுக்குக் கீழே பட்டாசுகளை வெடிக்க கூடாது.
அதே போல் எந்த ஒரு பட்டாசையும் கைகளில் வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் பொழுது தீக்காயம் பட்டுவிட்டால் அவற்றின் மீது க்ரீம், களிம்பு அல்லது எண்ணெயை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உபயோகிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
மேலும் புவி வெப்பமாவதை தடுப்பது, காற்று மாசுபடுவதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு சமூக சேவகர் சுரேஷ் துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது.
- வட்டார போக்குவரத்து அலவலர் நடவடிக்கை
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் இருந்து வேலூர் செல்லும் தனியார் பஸ்சை டிரைவர் ஓட்டி சென்றார். அப்போது அவர் பஸ்சை செல் போனில் பேசியபடி வெகுதூரம் ஓட்டி சென்றுள்ளார்.
இதனை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரு கிறது. இந்நிலையில் இந்த விதிமீறல் வீடியோவை பார்த்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர், சம்மந்தப்பட்ட பஸ் டிரைவரை அழைத்து விசாரணை நடத்தி சோதனை அறிக்கை வழங்கியுள்ளார்.
மேலும் வட்டார போக்குவரத்து அலவலர் வெங்கடேசன்(பொறுப்பு) விதிமீறிய பஸ் டிரைவரின் லைசென்சை 3 மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.
- தீபாவளி பண்டிகையொட்டி ஏற்பாடு
- பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை
வேலூர்:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
இதனை கொண்டாட வெளியூரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று மாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 135 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை பூந்தமல்லியில் இருந்து ஒசூருக்கு 10 பஸ்கள், பூந்தமல்லியில் விருந்து வேலூருக்கு 50, திருப்பத்தூருக்கு 30, ஆற்காட்டிற்கு 20, குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டுக்கு 10 பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும் வேலூரில் இருந்து திருச்சிக்கு 5 மற்றும் பெங்களூருக்கு 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வெள்ளிக்கி ழமையான நேற்று முதலே ஏராள மானோர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து இன்றும் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பொதுமக்கள் திரும்பி செல்ல ஏதுவாக வரும் 13-ந் தேதி திங்கள் கிழமை மதியம் முதல் 14 மற்றும் 15-ந் தேதி வரை வேலூரில் இருந்து சென்னை, தாம்பரம், திருச்சி, ஒசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு வழக்கமாக செல்லும் பஸ்கள் மட்டுமின்றி கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குறைந்த அளவிலான ஆடுகளே கொண்டுவரப்பட்டன
- விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆட்டு சந்தை நடக்கிறது.
இங்கு காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
இந்த ஆட்டுச் சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடந்தது. இதில் குறைந்த அளவிலான ஆடுகளே கொண்டுவரப்பட்டன. விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமான ஆடுகள் விற்பனையாகாமல் வியாபாரிகள் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி எடுத்துச் சென்றனர்.
- பற்று அட்டைகள் விணியோகம்
- கலெக்டர் வழங்கினார்
குடியாத்தம்:
தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தி ல் முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றனர்.
இதில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 443 பெண் களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதே சமயம், இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிலுவையில் வைக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்ட 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறு வதற்கான பற்று அட்டைகள் (டெபிட் கார்டுகள்) வழங்குவதை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சி களில் பயனாளி களிடம் பற்று அட்டைகள் வழங்கப் பட்டன.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெறு வதற்கான அட்டைகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 14 ஆயிரத்து 384 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், அமலு விஜயன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட வருவாய் அலு வலர் மாலதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, நகராட்சி மன்றத் தலைவர்கள் சவுந்தர ராஜன் (குடியாத்தம்), பிரேமா (பேரணாம்பட்டு), ஒன்றிய குழு தலைவர்கள் சத்யானந்தன், பாஸ்கரன், சித்ரா ஜனார்த் தனன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கேமராக்கள்- கார் கண்ணாடிகள் உடைப்பு
- உண்டியலை உடைக்க முடியவில்லை
வேலூர்:
வேலூர் அண்ணா சாலையில் மகளிர் போலீஸ் நிலையம் எதிரே புகழ்பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் உடல் நலம் சரியில்லாத குழந்தைகளுக்கு பரிகாரம் செய்தல் கயிறு கட்டுதல் உள்ளிட்டவை செய்யப்படுகின்றன.
தினமும் இரவு 9.30 மணிக்கு தர்கா மூடப்படுகிறது. இங்கு பணி செய்யும் 2 பேர் தினமும் தர்காவில் தங்குகின்றனர். அவர்கள் இருவரும் ஊருக்கு சென்று விட்டதால் நேற்று தர்காவில் யாரும் இல்லை.
இந்த நிலையில் நேற்று இரவு தர்காவிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தர்காவிற்கு வெளியே பொருத்தப்ப ட்டிருந்த 4 கண்காணிப்பு கேமரா வாசலில் பொருத்தப்ப ட்டிருந்த ஒரு கேமராவை உடைத்தனர். அவற்றை புதரில் தூக்கி வீசினர். அருகில் உள்ள முற்பதில் வீசி உள்ளனர். பின்னர் தர்காவிற்குள் உள்ள உண்டியல்களை உடைக்க முயற்சி செய்தனர். உண்டியலை உடைக்க முடியவில்லை.
ஆத்திரத்தில் தர்கா வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி மற்றும் மின் விளக்குகளை உடைத்து விட்டு சென்று விட்டனர்.
இன்று காலை வழக்கம் போல் தர்காவை திறக்க வந்த நிர்வாகிகள் கேமரா க்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் எதிரிலேயே உள்ள தர்காவில் கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கே.வி.குப்பத்தில் நாளை நடக்கிறது
- விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறுகிறது.
இங்கு காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்த ஆட்டுச் சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை 11-ந் தேதி சனிக்கிழமை சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடக்கும் சிறப்பு சந்தையில் ஆடுகளின் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2 பெண்கள் தப்பி ஓட்டம்
- ஆட்டோவில் ஏறி பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டம்மாள் (வயது 60). இவர் மருந்து வாங்க அணைக்கட்டு பகுதிக்கு ஆட்டோவில் வந்தார்.
அப்போது இடையில் 2 பெண்கள் ஆட்டோவில் ஏறி மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
அணைக்கட்டு பகுதியில் ஆட்டோவில் இருந்து இறங்கியதும் 2 பெண்கள் சேட்டம்மாளிடம் குறைந்த பணத்தில் அதிக தீபாவளி பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறினர். இதற்கு சேட்டம்மாள் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு கில்லாடி பெண்களோ காது, மூக்கில் உள்ள நகையை அடமானம் வைத்து கொடு என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து சேட்டம்மாள் அணைக்கட்டு பகுதியில் உள்ள அடகு கடையில் தனது நகையை கழற்றி அடமானம் வைத்தார். அதில் வந்த ரூ.6 ஆயிரத்தை சேட்டம்மாள் தீபாவளி பரிசு பொருட்கள் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறிய பெண்களிடம் கொடுத்தார்.
தீபாவளி பரிசு பொருட்களை எடுத்து வருவதாகவும், அதுவரை பஸ் நிலையத்தில் இருக்கும்படி சொல்லி விட்டு அங்கிருந்து மாயமாகி விட்டனர்.
தீபாவளி பரிசு பொருட்கள் எடுத்து வருவார்கள் என்று நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சேட்டம்மாள் காத்திருந்தார். ஆனால் பலே கில்லாடி பெண்கள் வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேட்டம்மாள் இது குறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் போலீசார், பொய்கை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொய்கை சமத்துவபுரம் சமுதாயக்கூடம் அருகில், சந்தேகம்படும்படி 2 பைக்குகளில் 6 பேர் சுற்றித்திரிந்தனர்.
போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் ஜீப்பில் துரத்திச்சென்று ஒரு பைக்கை மடக்கி, 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் இம்மானுவேல் என்கிற வெள்ளை விஜய் ( வயது 23) மற்றும் சென்னை நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்கிற போண்டா சதீஷ் (20) என்பது தெரிய வந்தது.
மேலும், தீபாவளி செலவுக்காக வேலூர் பகுதியில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு குழுவாக அவர்கள் சுற்றித் திரிந்ததும், அவர்கள் ஓட்டி வந்த பைக், வில்லிவாக்கம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு திருடியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பைக், 2 கத்தி, இரும்பு கம்பிகள், கயிறு மற்றும் மிளகாய் பொடி டப்பா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.






