என் மலர்tooltip icon

    வேலூர்

    • 552 பேரின் புகைப்படங்களை ஒப்பீடு செய்தனர்‌
    • ஒருவரை கைது செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன், இரவு ரோந்து வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள் தணிக்கையின் போது சந்தேகப்படும் நபர்களை அடையாளம் காணும் பேஸ் சாப்ட்வேர் ஆப் மூலம் செல்போனில் புகைப்படம் எடுத்து அவர்களின் குற்றப்பின்னணி குறித்து அறிய ஒப்பீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்பேரில் நேற்று இரவு ரோந்தின் போது மாவட்டம் முழுவதும் மொத்தம் 552 நபர்களின் புகைப்படங்களை சந்தேகத்தின் பேரில் பேஸ் சாப்ட்வேர் ஆப்பில் ஒப்பீடு செய்தனர்‌.

    பேரணாம்பட்டில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வேலூர் சின்ன அல்லா புரத்தைச் சேர்ந்த சசிகுமார் (வயது 43) என்பவரை ஒப்பீடு செய்ததில் அவர் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

    அவர் மீது 2 வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்தது.

    பின்னர் அவரை கைது செய்தது. என்ன காரணத்திற்காக பேரணாம்பட்டு விடுதியில் தங்கியிருந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    வேலூர் அடுத்த பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது லோடு ஆட்டோவின் டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்றது. லோடு ஆட்டோவை சாலையோரம் கொண்டு செல்ல டிரைவர் முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக லாரி வருவதைக் கண்ட டிரைவர் சாலையோரத்திற்கு ஓடினார். லாரி எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ மீது மோதியது. லாரி மோதியதில் லோடு ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் லோடு ஆட்டோவை சாலையோரம் கொண்டு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.6 ஆயிரம் பென்ஷன் வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன தலைவர் ராமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் திருச்செல்வன் பேசினார்.

    மாவட்ட செயலாளர் நாகேந்திரன், பொருளாளர் காசி, உதவி பொதுச் செயலாளர் சரவணன், உள்பட பலர் பங்கேற்றனர்.

    பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட வேண்டும், பீடி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

    ஓய்வு பெற்ற பீடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ.6000 வழங்க வேண்டும். பீடி மீது விதித்துள்ள 28 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    • கணவரின் மது பழக்கத்தால் விபரீதம்
    • உதவி கலெக்டர் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி கழிஞ்சூர் காந்தி தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்.ஆட்டோ டிரைவர் இவருடைய மனைவி லட்சுமி (வயது 26) தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    உறவினர்களான இருவருக்கும் பெற்றோர்கள் நிச்சயம் செய்து திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.

    ராஜேஷ் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் போதையில் வீட்டிற்கு வரும் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

    நேற்று இரவு கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    கணவரின் மது போதையால் லட்சுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குழந்தைகள் தாயை இழந்து தவித்து வருகின்றனர்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேட்டி
    • வேலூர் மாநகராட்சி பகுதியில் 48 பள்ளிகளில் படித்து வரும் 3,250 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் முதல்அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அங்கிருந்து வாகனங்கள் மூலம் தொடக்கப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழங்கி வருகின்றனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

    சத்துவாச்சாரியில் உள்ள உணவு கூடத்தில் பணியாளர்கள் காலை உணவு தயாரிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சித்தேரி, வேலப்பாடி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகள் நேரில் சென்று குழந்தை களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார். காலை உணவு தரமாக தயாரிக்கப்படுகிறதா சரியான நேரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர், மேயர் சுஜாதா ஆகியோர் குழந்தைகளுக்கு காைல உணவு பரிமாறினர்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    வேலூர் மாநகராட்சி பகுதியில் 48 பள்ளிகளில் படித்து வரும் 3,250 குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மாநகராட்சி பகுதியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு தரமாக உள்ளது. இதனை சாப்பிடும் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பணியாளர்கள் திறம்பட இதில் ஈடுபட்டுள்ளனர். ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் களையப்படும் என்றார்.

    கலெக்டர் ஆய்வின் போது கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • துப்பாக்கி பறிமுதல்
    • வனத்துறையினர் ரோந்து சென்ற போது சிக்கினார்

    வேலூர்:

    அமிர்தி அருகே உள்ள சஞ்சிபுதூர் பகுதியில் வேலூர் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 24) என்பவர் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்தார்.

    அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர் வைத்திருந்தது கள்ளத் துப்பாக்கி என்பது தெரிய வந்தது. துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளில் மோதியது
    • போக்குவரத்து பாதிப்பு

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து இன்று காலை இரும்புக் கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    வேலூர் அருகே உள்ள பொய்கை மேம்பாலம் அருகே வந்த போது திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    சாலை தடுப்புகளை உடைத்து எதிர் திசையில் பாய்ந்து சென்னை பெங்களூர் சாலையில் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் சாலை முழுவதும் சிதறின.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் சென்னை பெங்களூர் மார்க்கத்தில் வாகன போக்குவரத்து தடைப்பட்டது.

    விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    உடனடியாக பெங்களூர் நோக்கி வந்த வாகனங்களை சர்வீஸ் சாலையில் திருப்பி விட்டனர்.

    இதனையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு சாலையில் லாரி மற்றும் இரும்பு கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து சீரானது.

    இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    • காட்டின் நடுவே வனத்துறையினர் ரோந்து
    • விவசாயிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் விவசாயி இவருக்கு சொந்தமாக பசு மாடுகள் உள்ளன. இன்று காலையில் வெங்கடேசனின் பசுமாடு ஒன்று வனப்பகுதியை ஒட்டி உள்ள புத்துக்கோவில் பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்தது.

    காட்டுக்குள் இருந்து வந்த 2 சிறுத்தைகள் பசு மாட்டை கடித்து இழுத்து சென்றன. மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அங்கு சென்றனர். அவர்கள் கூச்சலிட்டதால் சிறுத்தைகள் தப்பி ஓடி விட்டன. இந்த சம்பவத்தில் பசுமாடு பரிதாபமாக இறந்தது.

    குடியாத்தம் அடுத்த சைனகுண்டா, கொட்டமிட்டா பகுதிகளில் குடியாத்தம் கல்லப்பாடி காப்புக் காடுகள் மற்றும் வீரிசெட்டிபல்லி காப்புக் காடுகள் பகுதியில் காட்டின் நடுவே வனத்துறையினர் கொட்டகை அமைத்து தங்கி இரவு முழுவதும் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காட்டின் நடுவே வன ஊழியர்கள் தங்கி இருக்கும் கொட்டகை அருகேயும் சிறுத்தைகள் உலவுவதாகவும், வனத்துறையினரின் கொட்டகையில் சிறுத்தைகள் படுத்து இருப்பதாகவும் மேலும் வன ஊழியர்களுக்கு சற்று சில மீட்டர் தொலைவு வரை வந்து சிறுத்தைகள் செல்வதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த மாதம் சைனகுண்டா பகுதியில் சிறுத்தைகள் 2 மேய்ச்சலுக்குச் சென்ற 2 கன்று குட்டிகளை கொன்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடுகளை சிறுத்தைகள் கடித்து குதறி கொன்றது.

    தொடர்ந்து சிறுத்தைகள் கால்நடைகளை கடித்துக் கொன்று வருவதால் விவசாயிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    • முதியவர் கைது
    • போலீசார் விசாரணை

    ஒடுகத்தூர்:

    ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லைமேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக நேற்று வேப்பங்குப்பம் போலீசா ருக்கும் ஒடுகத்தூர் வனத்து றையினருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கொல்லைமேடு மலை கிராமத்தில் வீடுவீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது முதியவர் ஒருவர் அதிகாரிகளை பார்த்தவுடன் தப்பியோட முயன்றார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் அதே கிராமத்தை சேர்ந்த சின்னசாமி(வயது 58), என்பதும், இவர் வீட்டில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரது வீட்டை போலீசார் சோதனை செய்த போது வீட்டின் பின்புறம் சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் 3 நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தார்.

    இதையடுத்து, சின்னசாமியை கைது செய்த போலீசார் அவர் வைத்து இருந்த கஞ்சா மற்றும் நாட்டுத்துப்பாக்கி களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதே பகுதியில் கடந்த மாதம் மிளகாய் நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்ந்து வந்த 2 பேரை எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் கஞ்சா செடிகளுடன் கைது செய்ய ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அணைக்கட்டு ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது.

    மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, ஒன்றியக் குழு துணை தலைவர் சித்ரா முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் 15-வது நிதிக்குழுவில் இருந்தும், பொது நிதியிலிருந்தும் தலா ஒரு கவுன்சிலருக்கு ரூ. 8.40 லட்சம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வ தற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு ஒன்றிய கவுன்சிலர்கள் முன் அறிவித்தார்.

    அதன்படி 26 கவுன்சிலர்களுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    15-வது நிதி குழுவில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3.40 லட்சத்தை ஒன்றிய கவுன்சி லர்கள் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளின் கழிப்பறை, சத்துணவு மையம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

    • வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார்.
    • அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மார்க்கப்பந்து (வயது 54). இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தற்போது தி.மு.க. ஊராட்சி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி மாலா ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று அந்தப் பகுதியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

    இதற்காக அமைச்சர் துரைமுருகனை வரவேற்று கொடி தோரணங்கள் கட்டினர்.

    நேற்று மாலை வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது. அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மார்கபந்து மயங்கி விழுந்தார். அவருக்கு உதவியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மார்க்கபந்துவை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மார்க்கபந்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கே.வி‌.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்க்கபந்துவுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மின்சாரம் தாக்கி தி.மு.க. பிரமுகர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார்.
    • தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற்போதாவது மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், தமிழகத்தில் நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அதனை சமாளித்து வருகிறோம். நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் பணிகள் படிப்படியாகத்தான் நடக்கும். அதுவரையில் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.

    முன்னதாக பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற்போதாவது மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழக கவர்னர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×