என் மலர்tooltip icon

    வேலூர்

    • அதிகாரிகள் நடவடிக்கை
    • ரூ.1.50 லட்சத்திற்கும் மேல் வாடகை பாக்கி உள்ளது

    வேலூர்:

    மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பெங்களூர் ரோடு லாரி செட், பழைய மாநகராட்சி வளாகத்திற்கு எதிராக உள்ள ஏ.கே.எம்.சி. வளாகம், வெங்கடேஸ்வரா பள்ளி எதிரே உள்ள காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இதில் பல கடைகளில் ரூ.1.50 லட்சத்திற்கும் மேல் வாடகை பாக்கியுள்ளது.

    இதனை உடனடியாக செலுத்துமாறு மாநகராட்சி சார்பில் கடைக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

    ஆனாலும் வாடகை செலுத்தாமல் உள்ளனர்.இன்று காலையில் வாடகைபாக்கி செலுத்த தவறிய 7 கடைகளுக்கு மாநகராட்சி 4-வது மண்டல உதவி வருவாய் அலுவலர் தனசேகர் தலைமையில் சீல் வைத்தனர்.

    தொடர்ந்து வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆசிரியர்கள் இட மாற்றத்துக்கு எதிர்ப்பு
    • கல்வி அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டையில் ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல் ஆசிரியர்கள் 4 பேர் சமீபத்தில் பணிநிரவல் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இதை கண்டித்து மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர் பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல் பரவியது. அதன் பேரில் வேலூர் தெற்கு போலீசார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் பேச்சு வார்த்தைக்கு பின்னர் மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    நாங்கள் அனைவரும் பொது தேர்வுக்கு தயாராகி வருகிறோம். இந்த நிலையில் திடீரென 4 ஆசிரியர்களை இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் நாங்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிதாக ஆசிரியர்களையும் உடனடியாக நியமிக்க மாட்டார்கள். ஏற்கனவே எங்கள் பள்ளியில் சில வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

    ஆசிரியர்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவர்களை இதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்

    ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர்கள் தயாளன், அங்கு லட்சுமி ஆகியோர் அங்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவிகளின் கோரிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    இதனால் மனைவிகள் கலைந்து சென்றனர்.

    • அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    • லாங்கு பஜார், மண்டிவீதியில் தள்ளுவண்டி கடைகள் பறிமுதல்

    வேலூர்:

    வேலூர் நேதாஜி மார்க்கெட் ஒட்டியுள்ள லாங்குபஜாரில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பெருகிவரும் தள்ளு வண்டி கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல உதவி பொறியாளர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் லூர்து மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் லாங்கு பஜார், மண்டி தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். சாலையோர ஆக்கிரப்புகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    லாங்குபஜாரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் ஏற்றி சென்றனர். 25-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்ட வியாபாரிகள் பலர் தங்களது வண்டிகளை அங்கிருந்து தள்ளிக்கொண்டு வேகமாக ஓட்டம் பிடித்தனர்.

    மேலும் லாங்குபஜார் பகுதியில் நடைமேடைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த வியாபாரிகள் உடனடியாக பொருட்களை அப்புறப்ப டுத்தினர். இதனால் மண்டி தெரு, லாங்கு பஜார் பகுதி வழக்கத்தைவிட விரிவாக காணப்பட்டது. பொது மக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் செல்ல முடிந்தது.

    இதேபோன்று தினந்தோறும் இருக்கும் வகையில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • தமிழகத்தில் முதன் முறையாக வேலூரில் தொடங்கப்பட்டுள்ளது
    • குற்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு

    வேலூர், டிச.2-

    வேலூர் மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே சாதாரண சிசிடிவி கேமராக்கள் உள்ளன, 24 மணி நேரமும் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது. மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேமரா காட்சிகளை கண்காணித்து வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க வேலூர் மாநகர பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் அவசர காலங்களில் ஈடுபடுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.56 லட்சம் மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தில் 360 டிகிரி சுழலக்கூடிய கேமராக்கள் 4 புறமும் பொருத்தப்பட்டுள்ளன. ட்ரோன் கேமரா உள்ளது.வாகனம் நிறுத்தப்படும் இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய திறன் கொண்டது. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் மூலம் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.

    இந்த கேமராக்கள் வாகனங்கள் மற்றும் நம்பர் பிளேட்களை படம்பிடிப்பது மட்டுமல்லாமல், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரடி காட்சிகள் வழங்கும்.

    இந்த வாகனத்தில் ஜெனரேட்டர் வசதி சேட்டிலைட் வசதி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

    இந்த வாகனத்தை கார்த்திகேயன் எம் எல் ஏ. மேயர் சுஜாதா ஆகியோர் பூஜை போட்டு தொடங்கி வைத்தனர். இந்த வாகனம் மாநகராட்சி மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு இன்று ஒப்படைக்கப்படுகிறது.

    முதன் முதலாக திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பில் இந்த வாகனம் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    டி.ஜி.பி.யிடம் ஒப்படைப்பு

    வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த வாகனம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தின் முதல் முறையாக வேலூரில் அதிநவீன கண்காணிப்பு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இது வேலூர் மட்டுமின்றி சென்னை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். முதல் முறையாக திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

    மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழக காவல்துறை முன்னோடியாக உள்ளது.

    தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் அதிகளவு தடுக்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் சம்பந்தமாக 48,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செல்போன்களில் வங்கி கணக்கு ஆதார் எண் பான் எண் கேட்டு வரும் மோசடி நபர்களிடம் ஏமாறக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    ஆன்லைன் ரம்மி ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 3- வது மண்டலத்துக்குட்பட்ட ஓட்டேரியில் இருந்து பாலமதி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவந்து தற்போது சாலை அமைப்பதற்க்கான பணிகள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது.

    சாலை அமைப்ப தற்க்கு முன்பாக ஜல்லிபோடப்பட்டுள்ளது.நேற்று மாலை பாலமதியில் இருந்து ஜல்லிகற்க்கல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடை போடப்பட்டிருந்த பள்ளத்தில் சிக்கியது.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. பின்னர் கிரேன் மூலம் லாரி மீட்கப்பட்டது.

    பாலமதி, கொலவிமேடு, பள்ள இடையம்பட்டி, வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    மேலும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், ஒரு அரசு கலை கல்லூரி உள்ளதால் மழை காலம் தொடங்கிய நிலையில் சாலை சேறும் சகதியுமாய் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை விரைந்து அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்

    ஓட்டேரியில் இருந்து பாலமதி செல்லும் சாலையில் பாதாள சக்கடை அமைக்க 2 அடி அகலத்திற்க்கு பள்ளம் தோண்டப்பட்டது. அது தற்போது மண்போட்டு மூடப்பட்டு சாலை அமைக்க ஏதுவாக ஜல்லிபோடப்பட்டு வருகிறது.

    இது இறுகும் தன்மையை அடைய 15 நாட்கள் ஆகும், அதற்க்குள் இதன் மீது கனரக வாகனம் இயக்கப்பட்டதால் லாரி ஒரு புறம் இறங்கியுள்ளது.

    அந்த பகுதியில் மண் இருகும் தன்மையை ஆய்வு செய்து பலவீனமான இடங்களில் மண் போடப்பட்டு வருகிறது. முறையாக மண் இருகிய பிறகு சாலை அமைக்கப்படும்.

    ஒரு மாதத்திற்க்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மழையாலும், பனியாலும் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது.
    • ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலுத்தி காப்பீடு செய்திருந்தார்.

    வேலூர் :

    வேலூர் மாவட்டம் கெங்காரெட்டி பள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் 5 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். அதற்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலுத்தி காப்பீடு செய்திருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்திருந்தது.

    இந்த நிலையில் தற்போது பெய்த மழையாலும், பனியாலும் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க ஒரு மாதமாக அலைந்துள்ளார். ஆனால் வேளாண்மைத் துறையும், காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு வழங்காமல் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேளாண்மைத்துறையின் கவனத்தை ஈர்க்க 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் சேதமடைந்த நெற் பயிர்களை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கல்வி அதிகாரிகள் திட்டவட்டம்
    • வேலூர் மாணவிகள் கோரிக்கை நிராகரிப்பு

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைபள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல் ஆசிரியர்கள் 4 பேர் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இதனால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதை கண்டித்து மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர் பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல் பரவியது. அதன் பேரில் வேலூர் தெற்கு போலீசார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாணவிகள் சிலர் நேற்று மாலை பள்ளியில் இருந்த ஆசிரியர்களிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போது அவர்கள் இடமாற்றம் குறித்து தங்களுக்கு தகவல் முழுமையாக தெரியாது என்றனர்.

    மாணவிகள் தலைமை ஆசிரியையை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து இந்த இடமாற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று பதில் அளித்தார்.

    உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

    ஆசிரியர்கள் மற்றும் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது:-

    நாங்கள் அனைவரும் பொது தேர்வுக்கு தயாராகி வருகிறோம். திடீரென 4 ஆசிரியர்களை இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் நாங்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிதாக ஆசிரியர்களையும் உடனடியாக நியமிக்க மாட்டார்கள். ஏற்கனவே எங்கள் பள்ளியில் சில வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

    ஆசிரியர்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவர்களை இதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில்:-

    அரசு உத்தரவுப்படி மாணவிகளுக்கு ஏற்ப ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஈவேரா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் விகிதாச்சார அடிப்படையில் ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்.

    விதிமுறைப்படி 4ஆசிரியர்கள் பணி நிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் இந்த பள்ளியில் பணி வழங்க முடியாது என்றனர்.

    • வேலூர் புதிய பஸ் நிலையத்தில் புதிதாக ஒப்பந்தம் எடுத்தவர் கட்டாயம் பணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறியதால் பரபரப்பு
    • வேறு எங்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என புகார்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கடந்த வாரம் ஏலம் விடப்பட்டது.

    இதை யடுத்து பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் கட்டண கழிப்பறையாக அறிவிக்கப்பட்டது. பஸ் நிலையத்திற்கு வந்து கழிப்பறைக்கு செல்லும் பயணிகளிடம் சிறுநீர் கழிக்க ரூ 5 மற்றும் இயற்கை உபாதைக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சிறுநீர் கழிக்க சென்ற போது அங்கிருந்த பெண் ஒருவர் கட்டணம் கேட்டுள்ளார். இதற்கு பஸ் டிரைவர் கண்டக்டர்கள் அனைத்து ஊர்களிலும் எங்களிடம் கட்டணம் வசூலிப்பது இல்லை.

    இங்கு மட்டும் ஏன் கட்டணம் கேட்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஒப்பந்ததாரர் கட்டாயம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே கழிப்பறையை உபயோகிக்க முடியும் இல்லையென்றால் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

    எங்களிடம் கட்டணம் வசூலிப்பதாக இருந்தால் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தனர்.

    அதற்கு குத்தகை எடுத்த ஒப்பந்ததாரர் நீங்கள் மட்டும் பஸ்ஸில் இலவசமாகவா பயணிகளை ஏற்றி செல்கிறீர்கள் என கூறியதால் அவர்களுடைய வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் கடும் அவதி
    • வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூரில் ஆற்காடு சாலையில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. காகிதப் பட்டறையில் சாலையின் ஒரு பகுதியில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி குழாய்கள் பதித்து வருகின்றனர்.

    பணிகள் நடக்கும் இடத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர்.

    இதன் காரணமாக காகிதப்பட்டறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் மற்றும் கனரக வாகனங்கள் வரும் பொழுது அதிக நெரிசல் ஏற்படுகிறது.வாகனங்கள் சிக்கி திணறுகின்றன.

    அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூட சாலையை கடக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

    தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணி ஆற்காடு சாலையில் சைதாப்பேட்டை முருகன் கோவில் வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இங்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.

    தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆற்காடு சாலையில் பஸ் மற்றும் கனகரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும். குறிப்பாக டவுன் பஸ் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சொந்தமான வாகனங்கள் அதிக அளவில் இந்த சாலையில் வருகின்றன. அவற்றை மாற்றுப்பாதையில் திருப்பி விட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • 10 கி.மீ.செல்வதற்குள் மடக்கி பிடித்தனர்
    • போலி நம்பர் பிளேட் மாட்டி துணிகரம்

    அணைக்கட்டு:

    ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 34) பிரபல கார் திருடன். இவர் நேற்று இரவு மாதனூர் பகுதியில் கார்களை திருடுவதற்காக நோட்டமிட்டார். அப்போது மாதனூர் அருகே மினி லாரியை நிறுத்தி வைத்திருந்தனர். அதனை திருடிக் கொண்டு குமார் பள்ளிகொண்டா பகுதிக்கு வந்தார்.

    அங்கு வைத்து அந்த லாரியின் இருபுறமும் போலி நம்பர் பிளேட்டை மாட்டினார். பின்னர் வேலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அவர்கள் குமார் ஓட்டி வந்த வாகனத்தை மடக்கினர். அவர்களை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு குமார் அந்த பகுதியில் உள்ள புதர் பகுதிக்கு ஓடினார். போலீசார் அவரை விரட்டி சென்றனர். அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள புதரில் குமார் பதுங்கிக் கொண்டார்.

    அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை ஈடுபட்டனர்.

    2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு பதுங்கி இருந்த குமாரை லாரியை திருடி கொண்டு 10 கிலோமீட்டர் வருவதற்குள் அவர் சிக்கி உள்ளார். பிடித்தனர். விசாரணையில் அவர் மாதனூர் பகுதியில் இருந்து போலியான நம்பர் பிளேட் மாட்டி மினி லாரியை திருடி வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயமடைந்த ஆசிரியை வேலூர் மருத்துவமனைக்கு மாற்றம்
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் நேரில் ஆறுதல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முக்குன்றம் ஊராட்சி காத்தாடி குப்பம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளிக்கு வெளியே பெரிய புளியமரம் உள்ளது அந்த புளிய மரத்தில் தேனீக்கள் தேன்கூடு கட்டி இருந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விளையாட்டுத்தனமாக தேன்கூடு மீது கல் வீசினர். அப்போது தேனீக்கள் பள்ளிக்குள் புகுந்து பள்ளியில் இருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் சரமாரியாக கொட்டியது.

    மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த கிராம மக்கள் உடனடியாக மாணவர்கள் மற்றும் ஆசிரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

    பள்ளி ஆசிரியர் ஜெயந்திக்கு அதிக அளவு தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய நிலையில் இருந்த அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கள்ளூர்ரவி, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் டி.சிவா உள்ளிட்டோர் தேனீக்கள் கொட்டியதால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    • தமிழக அரசு 40 சதவிகித உணவு பொருட்களை கொள்முதல் செய்கிறது.
    • போதுமான அளவு அரிசி, கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேவூரில் உள்ள இந்திய உணவு கழக கிடங்கில் மண்டல மேலாளர் ரத்தன் சிங் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 


    தற்போது சேவூர் கிடங்கில் 28 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும், 6052 மெட்ரிக் டன் கோதுமையும் இருப்பில் உள்ளன. தமிழக அரசு இந்திய உணவு கழகத்திடம் இருந்து 40 சதவிகித உணவு பொருட்களை கொள்முதல் செய்கிறது.

    இந்திய உணவு கழகம் மூலம் வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளது. சேவூரில் உள்ள இந்த கிடங்கின் மூலம் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 15,17,788 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை வினியோகிக்கப்படுகிறது.

    கொரோனா காலத்தில் பிரதமரின் ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த கிடங்கில் இருந்து 5,93,306 மெட்ரிக் டன் அரிசியும் 34,975 மெட்ரிக் டன் கோதுமையும் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×